

பிற மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஒருவருக்கு சமூகத்தில் வீடு வாங்க அனுமதி மறுக்கப்படுவதும் இனவாதத்தின் ஒரு வடிவமே என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம், மினியாபோலிஸ் நகரில் கடந்தமாதம் 25-ம் தேதி ஜார்ஜ் ஃபிளாய்ட் (46) என்ற கறுப்பினத்தைச் சேர்ந்தவரை போலீஸார் சந்தேகத்தின் அடிப்படையில் மடக்கிப் பிடித்தனர். அப்போது, டெர்ரக் சவுவின் (44) என்ற போலீஸ் அதிகாரி, ஃபிளாய்டைக் கீழே தள்ளி அவரது கழுத்தில் காலை வைத்துப் பலமாக அழுத்தினார். இதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் உட்பட பல மாகாணங்களில் போராட்டம் வெடித்தது. இனவாதத்துக்கு எதிராகவும், நிறவாதத்துக்கு எதிராகவும் உலகின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடத்தப்பட்டன
மேற்கிந்திய கிரிக்கெட் வீரர் சமி உட்பட பல்வேறு பிரபலங்களும் தங்கள் எதிர்கொண்ட நிறவெறித் தாக்குதலைப் பொதுவெளியில் பகிர்ந்து கொண்டனர்.
இந்த நிலையில் இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து இர்ஃபான் பதான் கூறும்போது, “இனவாதம் என்பது தோலின் நிறத்தின் அடிப்படையிலானது மட்டுமல்ல. பிற மத நம்பிக்கையைச் சார்ந்தவர் என்பதாலேயே சமூகத்தில் வீடு வாங்க அனுமதி மறுக்கப்படுவதும் இனவாதத்தின் ஒரு வடிவம்தான் ” என்று பதிவிட்டுள்ளார்.