Published : 09 Jun 2020 04:35 PM
Last Updated : 09 Jun 2020 04:35 PM

என்னையும் பெரேராவையும் ‘அப்படி’ அழைக்கும் போது அனைவரும் சிரிப்பார்கள், நானும் கேளிக்கைச் சொல் என நினைத்தேன்: ஐபிஎல் கிரிக்கெட்டில் நிறவெறி- மன்னிப்புக் கேளுங்கள்- கொந்தளிக்கும் டேரன் சமி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு ஆடும் போது தன்னை இழிசொல்லால் விளித்தனர் என்று மே.இ.தீவுகளின் அதிரடி வீரர் டேரன் சமி புகார் எழுப்பியதோடு தற்போது அது போன்று தன்னிடம் பிரயோகப்படுத்திய வீரர்கள் தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், அதற்கு தான் தகுதியானவன் தான் என்று கூறியுள்ளார்.

2013, 2014 தொடரில் தன்னையும் இலங்கையின் திசர பெரேராவையும் ‘kalu' என்று அழைத்தது பற்றி தனக்கு அர்த்தம் தெரியவில்லை என்றும் உண்மையான அர்த்தம் தனக்குத் தெரியவந்தபோது அவமானமாகவும் கோபமாகவும் இருந்ததாக டேரன் சமி தற்போது கொந்தளித்துள்ளார். இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் அவர் உருக்கமாக ஒரு வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.

இந்திய அமெரிக்க காமெடி நடிகர் ஹசன் மின்ஹாஜ், தங்கள் பண்பாட்டில் கருப்பின மக்களை எப்படி அழைப்போம் என்று கூறினார், அப்போதுதான் தனக்கு தன் மீது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் பொது பிரயோகம் செய்த அதே வார்த்தையின் உண்மையான அர்த்தமும் அது கருப்பர்களைக் குறிக்கும் இழிசொல் என்பதும் தெரியவந்ததையடுத்து கோபம் ஏற்பட்டது என்று பேசியுள்ளார்.

இன்ஸ்டாகிராம் வீடியோவில் டேரன் சமி கூறியதாவது:

“நான் உலகில் பல்வேறு இடங்களில் ஆடியுள்ளேன் அனைவரின் விருப்பத்துக்குரிய வீரராக இருந்துள்ளேன். நான் ஆடிய அனைத்து ஓய்வறைகளையும் நான் நேசித்து அரவணைத்துள்ளேன். ஆனால் ஹசன் மின்ஹாஜ் என்பவரின் நிகழ்ச்சியைப் பார்த்த போது அவர் தங்கள் பண்பாட்டில் கருப்பர்களை எப்படி அழைப்பார்கள் என்பதை கூறினார். ஆனால் அது அனைவருக்கும் பொருந்தாது. நான் இதை கூறுகிறேன் என்றால் நான் அனுபவித்த ஒன்றுதான் காரணம்.

அவர் கூறியதைக் கேட்ட பிறகு எனக்கு கோபம் வந்தது. கருப்பு மக்களை வர்ணிக்கும் சொல்லை அவர் கூறிய போது, நல்ல வழியில் பயன்படுத்தவில்லை என்பதை அவர் கூறிய விதத்தை வைத்துப் புரிந்து கொண்டேன். அது இழிசொல்லாகும், அவமதிப்புச் சொல்லாகும் இழிவு படுத்தும் சொல்லாகும். உடனேயே எனக்கு 2013, 2014 ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு ஆடும்போது என்னை நோக்கி பெரேராவை நோக்கி இதே சொல்லைத்தான் இழிசொல்லாகப் பயன்படுத்தினார்கள் என்பது எனக்கு உடனே பொறி தட்டியது. அந்தச் சொல் எங்களை, கருப்பினத்தவரை இழிவுபடுத்தும் சொல்லாகும்.

உடனேயே நான் கோபமடைந்தேன், அந்த வார்த்தையின் அர்த்தம் தெரிந்த பின்பு நான் உண்மையில் கோபமடைந்தேன். என்னை நோக்கி இந்த வார்த்தையைப் பயன்படுத்தியவர்களுக்கு நான் குறுஞ்செய்தி அனுப்பி வருகிறேன். அது யார் யார் என்பது உங்களுக்கே தெரியும். நீங்கள் என்னை அப்படி அழைத்த போது அதன் அர்த்தம் எனக்குத் தெரியவில்லை. பொலிக்குதிரை என்று பொருள் என நினைத்தேன்.

ஆனால் ஒவ்வொரு முறையும் என்னையும் திசர பெரேராவையும் அந்தப் பெயர் சொல்லி அழைக்கும் போது அங்கு பெரிய சிரிப்பலை எழும். நான் அணி வீரராக ‘அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள், எனவே அது ஏதோ ஜோக்’ என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அது ஜோக் அல்ல, கேளிக்கை அல்ல என்று எனக்குத் தெரியவந்த போது எனக்கு ஏற்பட்ட கோபத்தை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். அது கேளிக்கை அல்ல இழிசொல்.

எனவே உங்களுக்கு நான் மெசேஜ் அனுப்பப் போகிறேன், நீங்கள் திரும்பத் திரும்ப அதே சொல்லால் அழைத்தீர்கள். அதாவது அது ஏதோ என் இன்னொரு பெயர் என்று நான் நினைக்கும் அளவுக்கு அவ்வளவு முறை அழைத்துள்ளீர்கள். நீங்கள் என்னை இழிவு படுத்தும் நோக்கத்துடன் அப்படி அழைத்தீர்களா? ஏனெனில் இது எனக்கு முக்கியமானது. நான் கூறியது போல் எல்லா ஓய்வறையிலும் எனக்கு நிறைய பசுமையான நினைவுகள் உள்ளன. ஒரு டி20 வீரனாக, ஓய்வறையில் ஒரு கேப்டனாக...

எனவே என்னை அந்த சொல் கொண்டு அழைத்தவர்கள் யார் என்பது உங்களுக்கே தெரியும். உங்களில் சிலரிடம் என் தொலைபேசியும் உள்ளது. இன்ஸ்டாகிராமில் என்னை நீங்கள் தொடர்பு கொள்ள முடியும் ட்விட்டரில் தொடர்பு கொள்ள முடியும். எப்படியோ நாம் உரையாடுவோம். மின்ஹாஜ் கூறிய அந்த இழிசொல்லாக நீங்கள் பிரயோகப்படுத்தியிருந்தால் நிச்சயம் ஏமாற்றமே. நான் கோபமாகவே இருக்கிறேன், உங்களிடமிருந்து மன்னிப்பை எதிர்பார்க்கிறேன். உங்கள் அனைவரையும் என் சகோதரர்களாகவே நான் நினைத்துப் பழகினேன். எனவே என்னிடம் பேசுங்கள், என்னைத் தொடர்பு கொள்ளுங்கள், பிரச்சினையைத் தீருங்கள்.

நிறவெறி அநீதிக்கு எதிராக அனைத்து வாரியங்களும் நிலைப்பாடு எடுக்க வேண்டும். இப்போது உலகமே நிறவெறிக்கு எதிராகக் கிளம்பியுள்ளது. அதுதான் செய்தி, உங்களிடமிருந்தும் இதை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.” இவ்வாறு உருக்கமாகப் பேசியுள்ளார் டேரன் சமி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x