Last Updated : 09 Jun, 2020 01:13 PM

 

Published : 09 Jun 2020 01:13 PM
Last Updated : 09 Jun 2020 01:13 PM

கிரிக்கெட் திருவிழா மீண்டும் தொடக்கம்: இங்கிலாந்துடன் 3 டெஸ்ட் தொடர்; விளையாடப் புறப்பட்டது மே.இ.தீவுகள்

கோப்புப்படம்

ஆன்ட்டிகுவா

கரோனா வைரஸ் அச்சம் காரணமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் ஏதும் நடைபெறாமல் இருந்த நிலையில் முதல் முதலாக இங்கிலாந்து-மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது.

கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக கிரிக்கெட் போட்டிகளைக் காண முடியாமல் தவித்த ரசிகர்களுக்கு கிரிக்கெட் திருவிழா தொடங்குவதாகவே கொள்ளலாம். இதன் மூலம் கரோனா வைரஸுக்குப் பின், கிரிக்கெட் விளையாட்டு தன்னை மீண்டும் இயல்புப்பாதைக்குக் கொண்டுவருவதற்கான முதல் நடவடிக்கையாகவே பார்க்கலாம்.

இருப்பினும் இங்கிலாந்தில் நடக்கும் இந்த டெஸ்ட் போட்டிகள் அனைத்துக்கும் பார்வையாளர்கள் வருவது தடை செய்யப்பட்டு, ரசிகர்கள் இன்றியே நடத்தப்பட உள்ளது.

விமானப் பயணத்துக்குத் தயாராகிய மே.இ.தீவுகள் வீரர்கள்

இங்கிலாந்து மண்ணில் ஒருநாள் போட்டிகளை விட டெஸ்ட் போட்டிகள் நடக்கிறது என்றால் அதிகமான ரசிகர்கள் வருவார்கள், அவர்களின் கைதட்டல்களும், வீரர்களுக்கு தரும் உற்சாகமும், வாழ்த்தும் பார்க்கவே அழகாக இருக்கும்.

ஆனால், இந்தத் தொடரில் ரசிகர்கள் இன்றி வெறும் மைதானத்தில் இருக்கும் நாற்காலிகளே பார்வையாளர்களாக இருக்கப்போகின்றன. இந்த டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்குச் செல்லும் மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மேற்கந்தியத் தீவுகளில் உள்ள பல்வேறு தீவுகளில் இருந்து வீரர்கள் இரு விமானங்கள் மூலம் நேற்று ஆன்ட்டிகுவா அழைத்து வரப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் அங்கு தெர்மல் ஸ்கேனிங் செய்யப்பட்டது. மேலும், இந்தத் தொடருக்குத் தேர்வான வீரர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை முன்பே செய்யப்பட்டு சான்றும் வழங்கக் கோரப்பட்டிருந்தது.

அதன்பின் வீரர்கள் அனைவரும் தனி விமானத்தில் இங்கிலாந்து புறப்பட்டனர். இவர்கள் மான்செஸ்டர் நகரம் சென்று சேர்ந்ததும் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள். அவர்களுக்கு அங்கு கரோனா பரிசோதனை நடத்தப்படும். அதில் நெகடிவாக இருக்கும் வீரர்கள் மட்டுமே விளையாட அனுமதிக்கப்படுவார்கள்.

வெளியே எந்த வீரரும் தேவையின்றி நடமாடாத வகையில் வீரர்கள் தங்கும் ஹோட்டல் மைதானத்துக்கு அருகே இருக்குமாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டெஸ்ட் தொடருக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள வீரர்களோடு ரிசர்வ் வீரர்களும் பயணிக்கின்றனர். வீரர்கள் யாருக்கேனும் உடல்நலக் குறைவு, கரோனா பாதிப்பு இருந்தால் மாற்றாக விைளயாடவும், பயிற்சி மற்றும் உதவிக்காகவும் செல்கின்றனர்.

இங்கிலாந்தில் 21 நாட்கள் பயணம் செய்யும் மேற்கிந்தியத் தீவுகள் அணி 3 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி ஜூலை 8-ம் தேதி சவுத்தாம்டனிலும், ஜூலை 16-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை ஓல்ட் ட்ராபோர்டிலும், ஜூலை 24-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை மீண்டும் ஓல்ட் ட்ராபோர்டிலும் விளையாடுகின்றனர்.

இந்த டெஸ்ட் போட்டி மே மாதம் நடக்கத் திட்டமிடப்பட்டு கரோனவால் தள்ளி வைக்கப்பட்டு ஜூலையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இங்கிலாந்து புறப்படும் முன் மே.இ.தீவுகள் அணியின் கேப்டன் ஜேஸன் ஹோல்டர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “கரோனாவுக்குப் பின் கிரிக்கெட்டில் நாங்கள் எடுக்கும் இந்த முயற்சி மிகப்பெரிய நடவடிக்கை. டெஸ்ட் தொடர் விளையாட இங்கிலாந்து செல்கிறோம். அதிகமாக நாங்கள் தயாராக வேண்டியுள்ளது. விளையாட்டில் புதிய கட்டத்துக்குள் நுழைகிறோம்” எனத் தெரிவித்தார்.

மே.இ.தீவுகள் அணி விவரம்:

ஜேஸன் ஹோல்டர் (கேப்டன்), ஜெர்மைன் பிளாக்வுட், குர்மா போனர், கிரெய்க் பிராத்வெய்ட், ஷாம்ரா ப்ரூக்ஸ், ஜான் கேம்பெல், ரஸ்டன் சேஸ், ரக்கீம் கார்ன்வால், ஷேன் டோவ்ரிச், செம்மார் ஹோல்டர், ஷாய் ஹோப், அல்சாரி ஜோஸப், ரேமான் ரீபர், கீமார் ரோச்.

ரிசர்வ் வீரர்கள்:
சுனில் அம்பரிஸ், ஜோஸ்வா டாசில்வா, ஷானன் கேப்ரியல், கியான் ஹார்டிங், கையில் மேயர்ஸ், பிரஸ்டன் ஸ்வீன், மர்குயினோ மின்ட்லி, ஷேனே மோசெலி, ஆன்டர்ஸன் பிலிப், ஓஸ்னேதாமஸ், ஜோமல் வாரிக்கன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x