

2019 ஆசியத் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளின் 800மீ பிரிவில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துவின் மாதிரிகளில் தடைசெய்யப்பட்ட அனபாலிக் ஸ்டெராய்ட் நான்ட்ரோலன் இருந்தது பி சாம்பிளிலும் உறுதி செய்யப்பட்டதால் அவர் 4 ஆண்டுகள் தடை செய்யப்பட்டார், அவரது தங்கப்பதக்கம் பறிக்கப்பட்டது.
மார்ச் 18 முதல் மே 17, 2019 வரையிலான இவரது சாதனைகள் அனைத்தும் சாதனைப் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டு விட்டன. தமிழ்நாடு தடகள பதக்கங்கள், சான்றிதழ்கள், தரவரிசைப்புள்ளிகள், பணம் ஆகியவை திரும்பப் பெற்றுள்ளன.
இவரது ஏ சாம்பிள் பரிசோதனையில் ஊக்க மருந்து எடுத்துக் கொண்டதாகத் தெரிந்ததையடுத்து கடந்த மே மாதம் இவர் தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டார், மேலும் தடகள நேர்மை குழுவுக்கு 28 நாட்களுக்குள் சட்ட மற்றும் பிற செலவுகளுக்காக 1000 பவுண்டுகள் செலுத்தவும் உத்தரவிடப்பட்டார்.
இது தொடர்பாக ஏ.எஃப்.ஐ. தலைவர் அடில் சுமரிவாலா கூறும்போது, இந்த வழக்கில் ஏ.எஃப்.ஐ. ஈடுபடாது, ஊக்க மருந்து விவகாரத்தை நாங்கள் எப்பவும் ஊக்குவிக்க மாட்டோம். ஒவ்வொரு ஆண்டும் 1500 பரிசோதனைகளைச் செய்கிறோம். ஊக்கமருந்தை கிரிமினல் குற்றமாக மாற்ற முயற்சிகள் செய்து வருகிறோம், என்றார்.
இந்நிலையில் ஸ்போர்ட்ஸ்டார் தி இந்துவுக்கு பேசிய கோமதி, “நான் தடையை எதிர்த்து மேல் முறையீடு செய்யப் போகிறேன், மாநில அரசு எனக்கு உதவ வேண்டும். தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்து எதையும் நான் எடுத்துக் கொள்ளவில்லை, நான் சாப்பிட்ட நான்-வெஜிடேரியன் உணவில் தடைச்செய்யப்பட்ட பொருள் இருந்திருக்கலாம். NADA என்னிடம் இந்த விவகாரத்தி முன் கூட்டியே தெரியப்படுத்தியிருந்தால் நான் இதிலிருந்து மீண்டிருப்பேன், அனாவசியமாக தோஹாவில் அவமானத்தைச் சந்திக்க நேர்ந்திருக்காது” என்றார்.