Published : 09 Jun 2020 08:21 AM
Last Updated : 09 Jun 2020 08:21 AM

ஆஸி. தொடர்: இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் அவசியம் என்கிறார் இயன் சாப்பல்

கொரோனாவினால் உலகக்கோப்பை டி20 ஊற்றி மூடப்பட்டு இந்தியா-ஆஸ்திரேலியா இருதரப்பு பார்டர்-கவாஸ்கர் ட்ராபி கிரிக்கெட் தொடருக்குத்தான் அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

கடந்த முறை ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் இல்லாத ஆஸ்திரேலியாவை விராட் கோலி தலைமையில் இந்திய அணி பிரமாதமாக வீழ்த்தி 2-1 என்று டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி சாதனைபடைத்தது.

இந்நிலையில் டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், பெரிய அளவில் எழுச்சிப் பெற்றுள்ள மார்னஸ் லபுஷேன் ஆகியோர் இருக்கும் போது இன்னும் தீவிரமாக இந்தத் தொடரை திட்டமிடும் பட்சத்தில் ஆஸ்திரேலிய தொடர் விராட் கோலிக்கு உண்மையில் கிரிக்கெட் களம் என்றால் என்ன, ஆஸ்திரேலியா என்றால் என்ன என்பதை கடினமாகக் கற்றுக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

இந்நிலையில் இந்திய அணி பற்றி கூறிய இயன் சாப்பல் தனது ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ பத்தியில் கூறியிருப்பதாவது:

வார்னர் உடன் இறங்கும் இன்னொரு தொடக்க வீரர் பலவீனமானவர் இந்திய அணி அவரை வீழ்த்துவதில் கவனம் செலுத்தும். இருந்தாலும் வார்னர், ஸ்மித், லபுஷேன் என்ற ‘பிக் 3’ வீரர்களை கட்டுப்படுத்துவதுதான் இந்திய அணியின் கவனமாக இருக்கும்.

இந்திய அணி முழு வலுவான அணியைக் களமிறக்கும் என்று எதிர்பார்க்கலாம். ஹர்திக் பாண்டியா ஆடினால் அது இந்திய அணிக்கு பெரிய பலமாக இருக்கும், முன்னிலை பவுலர்களுக்கு ஓய்வு கொடுக்கும் போது இவர் ஒருசில ஓவர்களை வீசி அழுத்தத்தை அதிகரிக்கலாம். 3 டெஸ்ட்களில் பாண்டியா தன்னை இவ்வாறு கட்டமைத்துக் கொண்டால், சிட்னி டெஸ்ட் போட்டியில் 3வது வேகப்பந்து வீச்சாளராக இவர் பணியாற்றினால் இந்திய அணி 2வது ஸ்பின்னரை சேர்க்க முடியும்.

ஹர்திக் பாண்டியா 7ம் இடத்தில் களமிறங்கினால் ரிஷப் பந்த் 6ம் நிலையில் இறங்கலாம்.

இந்திய அணிக்கு ஸ்பின்னர்களை தேர்வு செய்வதில் பெரிய தலைவலி காத்திருக்கிறது, அஸ்வின் ஒட்டுமொத்தமாக பெரிய சாதனைகளை வைத்துள்ளார், ஆனால் ஆஸ்திரேலியாவில் அவரது பந்து வீச்சு எடுபடவில்லை. ரவீந்திர ஜடேஜாவின் ஆல்ரவுண்ட் திறமைகள் மற்றும் அவரது முன்னேறிய பவுலிங் அவரைத் தேர்வு செய்ய நியாயம் கோருகிறது.

ஆனால் குல்தீப் யாதவ்வின் ரிஸ்ட் ஸ்பின் ஆஸ்திரேலிய பிட்ச்களில் விக்கெட்டுகளை வீழ்த்தும் பெரிய அச்சுறுத்தல்களைக் கொண்டது, ஆனால் இது தைரியமான தேர்வை எதிர்நோக்குவதாகும்.

அதே போல் ஆஸ்திரேலிய பவுலிங் விராட் கோலி, புஜாரா ஆகியோரின் இருப்பை மீறியும் இந்திய அணியை கட்டுப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அந்தப் பத்தியில் கூறியுள்ளார் இயன் சாப்பல்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x