

தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 17 கோல்களை அடித்து அசத்திய ஜூனியர் கால்பந்து வீராங்கனை சுமதி குமாரி உட்பட சில வீராங்கனைகள் உணவில்லாமல் அவதிப்பட்டது தெரியவந்துள்ளது.
இந்தியாவில் யு-17 உலகக்கோப்பைக் கால்பந்து தொடர் நடக்க இருந்தது. இதற்காக இந்திய வீராங்கனைகள் கோவாவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
ஆனால் கரோனா காரணமாக பயிற்சியிலிருந்து சொந்த ஊர் திரும்பினர். உலகக்கோப்பை அடுத்த ஆண்டு மார்ச் 7ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டது.
இதற்கான இந்திய உத்தேச அணியில் தேர்வு செய்யப்பட்ட 24 பேரில் 8 பேர் ஜார்கண்டைச் சேர்ந்தவர்கள். இதில் தேசிய சாம்பியன்ஷிப்பில் 17 கோல்களை அடித்து அசத்தியவர் சுமதி குமாரியும் ஒருவர். ராஞ்சியிலிருந்து 110 கிமீ தொலைவில் உள்ள கும்லா மாவட்டத்தில் இவர் வசித்து வருகிறார். இவர் உணவுக்கே வழியில்லாமல் சிரமப்பட்டுள்ளார், ஊரடங்கு நேரத்தில் இருக்கும் அரிசியை வைத்து சமாளித்துள்ளார். சமீபத்தில் ரேஷனில் கிடைத்த அரிசி பருப்புதான் இவருக்குக் கைகொடுத்துள்ளது.
பயிற்சி முகாமில் ஆரோக்கிய உணவு சாப்பிட்ட இவர் தற்போது வயிற்றுப்பசிக்கான உணவை மட்டுமே எடுத்துக் கொள்ள முடிகிறது. இதனால் அணிக்குத் தேர்வு செய்யப்படுவாரா என்ற சந்தேகத்தில் இருக்கிறார் சுமதி குமாரி.
இன்னொரு வீராங்கனை சுதா அங்கிதா இவருக்கு தந்தை இல்லை, எனவே அக்கம்பக்கத்தில் கொடுத்த உணவை வைத்துக் கொண்டுதான் காலத்தை ஓட்டி வந்துள்ளார். வீட்டு வேலைபார்க்கும் இவரது அம்மா, ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து கிடைக்கவில்லை. ஏப்ரல் மாதம் 10 கிலோ அரிசி கிடைத்தது, பிறகு பத்திரிகைகளில் செய்தி பரவ மாநில முதல்வர் உத்தரவின் பேரில் சுதா அங்கிதாவுக்கு ரேஷன் வழங்கப்பட்டது.
இதே போல் மற்ற வீராங்கனைகளான பூர்ணிமா, ஆஷ்தம், அமிஷா என பல வீராங்கனைகள் உணவுக்காக சிரமப்பட்டது தெரியவந்துள்ளது.