இலங்கைப் பந்து வீச்சை புரட்டி எடுத்த 3வது இரட்டைச் சதம்:  ‘ஹிட்மேன்’ ரோஹித் சர்மா ருசிகரப் பகிர்வு

இலங்கைப் பந்து வீச்சை புரட்டி எடுத்த 3வது இரட்டைச் சதம்:  ‘ஹிட்மேன்’ ரோஹித் சர்மா ருசிகரப் பகிர்வு
Updated on
1 min read

ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டைச் சதங்களை அடித்து உலக சாதனை வைத்திருக்கும் ஹிட்மேன் ரோஹித் சர்மா அந்த இரட்டைச்சதத்தின் போது தன் மனைவி உணர்ச்சிவயப்பட்ட தருணத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஓபன் நெட்ஸ் வித் மயங்க் (அகர்வால்) என்பதன் 2ம் அத்தியாயத்தில் தோன்றிய ரோஹித் சர்மா தன் 3வது இரட்டைச் சதம் பற்றி பேசினார்.

153 பந்துகளில் 13 பவுண்டரிகள் 12 சிக்சர்கள் உடன் 208 ரன்களை மொஹாலியில் டிசம்பர் 13, 2017 அன்று விளாசினார். இதில் ரோஹித் சர்மாதான் கேப்டன் என்பதும் குறிப்பிடத்தக்கது. 2014-ல் இதே இலங்கைக்கு எதிராக கொல்கத்தாவில் 33 பவுண்டரிகள் 9 சிக்சர்களுடன் 264 ரன்கள் எடுத்து ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ஸ்கோருக்கான உலக சாதனையையும் கைவசம் வைத்துள்ளார் ரோஹித் சர்மா.

“என் மனைவி உணர்ச்சிவசப்பட்டார், இந்த நாள் சிறப்பு வாய்ந்தது ஏனெனில் என் திருமணநாளும் கூட. அன்றைய தினத்தில் மனைவிக்கு நான் கொடுத்த சிறந்த பரிசு இந்த இரட்டைச் சதம்.

மைதானத்திலிருந்து வந்த பிறகு மனைவி ரிதிகாவிடம் ஏன் அழுதாய் என்று கேட்டேன். 196வது ரன்னை எடுக்கும் போது டைவ் அடித்து ரீச் செய்தேன் அப்போது என்கைகளில் காயமடைந்து விட்டதாக நினைத்து அழுததாக ரிதிகா கூறினார். அதனால்தான் இரட்டைச் சதம் அடித்தவுடன் அவர் உணர்ச்சிவயப்பட்டார் என்று நான் நினைக்கிறேன்” என்றார்.

இந்தப் போட்டியில் இந்தியா 392/4 என்று பெரிய ஸ்கோரை எட்ட இலங்கை அணி மேத்யூஸ் சதத்துடன் 251/8 என்று தோல்வி தழுவியது.

“உள்ளபடியே கூற வேண்டுமெனில் நான் மெதுவாக ஆடினேன், இரட்டைச் சதம் அடிப்பேன் என்று நினைக்கவில்லை. 125 ரன்கள் கடந்தவுடன் சுலபமானது, ஏனெனில் பவுலர்கள் கடும் அழுத்தத்தில் இருந்தனர். நாம் தவறு செய்தால்தான் ஆட்டமிழக்க முடியும்” என்றார் ரோஹித் சர்மா அந்த இரட்டைச் சதம் குறித்து.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in