Published : 06 May 2014 09:58 PM
Last Updated : 06 May 2014 09:58 PM

போராடித் தோற்றது பெங்களூரு: மும்பை 19 ரன்களில் வெற்றி

மும்பைக்கு இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.



188 என்ற கடினமான இலக்கோடு களமிறங்கிய பெங்களூரு அணி, கிறிஸ் கெயிலின் விளாசலில் புத்துணர்ச்சியுடன் இலக்கை விரட்டியது. குறிப்பாக 3-வது ஓவரில், கெயில், 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளோடு 28 ரன்களைச் சேர்த்தார். மற்றொரு துவக்க வீரர் பட்டேல் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும், கெயில் தனது அதிரடியைத் தொடர்ந்தார். 24 பந்துகளில் 38 ரன்கள் எடுத்த நிலையில் ஹர்பஜன் சிங்கின் பந்தில் கெயில் ஆட்டமிழந்து பெங்களூரு ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.

தொடர்ந்து வந்த வீரர்கள் வேகமாக ரன் சேர்க்க முற்பட்டு, வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினர். இதனால் கொஞ்சம் கொஞ்சமாக ஆட்டம் மும்பையின் வசம் வந்தது. கோலி 35, ரோஸ்ஸோ 24, டி வில்லியர்ஸ் 9, யுவராஜ் சிங் 6 என தொடர்ந்து ஆட்டமிழந்தனர். முடிவில் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்களை சேர்த்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின் பும்ரா, ஹர்பஹன் மற்றும் மலிங்கா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

ஸ்டார்க் - பொல்லார்ட் மோதல்

மும்பை அணி ஆடும்போது, 17-வது ஓவரை வீசிய ஸ்டார்க், பொல்லார்டுடன் சண்டையில் ஈடுபட்டார். அந்த ஓவரின் 3-வது பந்தில் ஸ்டார்க் பவுன்சர் வீச, பொல்லார்ட் அதை அடிக்க முயற்சி செய்து தவறவிட்டார். இதைத் தொடர்ந்து ஸ்டார்க் பேசிய வார்த்தைகளை பொல்லார்ட் கண்டுகொள்ளாமல் இருந்தார்.

4-வது பந்தை ஸ்டார்க் வீச வரும்போது பொல்லார்ட் நிறுத்துமாறு கையசைத்து நகர, ஸ்டார்க் நிறுத்தாமல் வேகமாக பொல்லார்டை நோக்கி பந்தை வீசினார். இதனால் ஆத்திரமடைந்த பொல்லார்ட் கையிலிருக்கும் பேட்டை ஸ்டார்க்கை பார்த்து வீசினார். சட்டென குறுக்கிட்ட நடுவர்கள், பெங்களூரு கேப்டன் கோலி, மேற்கிந்திய வீரர் கெயில் ஆகியோர் பொல்லார்டை சமாதனம் செய்தனர். ஸ்டார்க் மற்றும் பொல்லார்ட் இருவருக்கும் அபராதம் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெங்களூரு 187/5

முன்னதாக, தனது 100-வது ஐபிஎல் போட்டியில் விளையாடும் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி, டாஸில் வென்று பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார்.

முதல் 3 ஓவர்களிலேயே துவக்க வீரர்கள் டங் மற்றும் கவுதம் 25 ரன்களைக் குவித்தனர். டங் 15 ரன்களுக்கு பட்டேலின் பந்தில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து ஆட வந்த ராயுடு 9 ரன்கள் எடுத்து வெளியேறினார். சிறப்பாக ஆடி வந்த கவுதம் 30 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அதிரடி வீரர் கோரே ஆண்டர்சன் ஒரு சிக்ஸர் அடித்து, அடுத்த சில பந்துகளிலேயே பெவிலியன் திரும்பினார். 84 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் என்ற நிலையில் ரோஹித் சர்மா மற்றும் பொல்லார்ட் ஜோடி சேர்ந்தனர். பெங்களூரு பந்துவீச்சை சமாளித்து ஆடிய இந்த இணை, ஆட்டத்தின் கடைசி ஓவர்களில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தவும் தவறவில்லை.

வருண் ஆரோன் வீசிய 19-வது ஓவரில் 3 சிக்ஸர்கள் உட்பட 24 ரன்கள் குவித்த ரோஹித் சர்மா 31 பந்துகளில் அரை சதத்தையும் கடந்தார். கடைசி ஓவரில் 43 ரன்களுக்கு (31 பந்துகள்) பொல்லார்ட் ரன் அவுட் ஆனார். 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்களை எட்டியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x