Last Updated : 04 Jun, 2020 08:21 PM

 

Published : 04 Jun 2020 08:21 PM
Last Updated : 04 Jun 2020 08:21 PM

கையெறி குண்டுகள், துப்பாக்கிச் சூடு, 2009 தாக்குதலில் என்ன நடந்தது?- குமார் சங்கக்காரா பகிர்வு

2009-ம் ஆண்டு தீவிரவாதிகள் தாக்கியபோது, அந்தப் பகுதியிலிருந்து உடனடியாக பேருந்தை கிளப்பிச் சென்று தங்களைக் காப்பாற்றிய ஓட்டுநர்தான் அன்று உண்மையான நாயகன் என்று கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்காரா நினைவுகூர்ந்துள்ளார்.

2009-ம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டத்தை ஆட இலங்கை அணியினர் பேருந்தில் லாகூரின் கடாஃபி கிரிக்கெட் மைதானத்துக்குச் சென்று கொண்டிருந்த போது தீவிரவாதிகளால் தாக்கப்பட்டனர்.

துப்பாக்கி, வெடிகுண்டு என அந்த நினைவுகள் குறித்து சமீபத்தில் இலங்கை கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்காரா பகிர்ந்துள்ளார்.

"அந்த நேரத்தில் பாகிஸ்தான் செல்வதில் பாதுகாப்புப் பிரச்சினைகள் இருந்தன. பாதுகாப்பு குறித்த கவலை பற்றி நாங்கள் எழுதியிருந்தோம். எங்கள் உயிருக்கு ஆபத்து வந்தால் என்ன செய்வது என்று காப்பீடு எடுப்பது பற்றியெல்லாம் யோசித்தோம். ஆனால் எங்கள் கோரிக்கைகள் கண்ணியமாக நிராகரிக்கப்பட்டன. பாதுகாப்பை உறுதி செய்ய அவர்கள் அனைத்துவிதமான களப் பணிகளையும் செய்து விட்டனர் என்று எங்களுக்குச் சொல்லப்பட்டது. எனவே நாங்கள் சென்றோம்.

பேருந்தில் எப்போதும் போல ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து பேசிக் கொண்டு வந்தோம். அன்று மாலை என்ன செய்யப் போகிறோம் என்பது பற்றிப் பேசும்போது ஒரு வேகப்பந்து வீச்சாளர், 'இங்கு களங்கள் மிகவும் தட்டையாக உள்ளன. எனக்கு மன அழுத்தத்தினால் எலும்பு முறிவு ஏற்படும். ஒரு வெடிகுண்டு வெடித்தால் நன்றாக இருக்கும். நாம் வீடு திரும்பிவிடலாம்' என்று பேசினார். 20 நொடிகள் கழித்துத் தாக்குதல் நடந்தது.

தில்ஷானும் முன்னால் தான் உட்கார்ந்திருந்தார். நான் நடுவில் இருந்தேன். ஜெயவர்த்தனே பின்னால் இருந்தார். திலான் சமரவீராவைக் கிண்டல் செய்ய முரளிதரன் எனக்குப் பின்னால் உட்கார்ந்திருந்தார். தொடக்க வீரர் தரங்கா பரணவிதானா முன்னால் உட்கார்ந்து கொண்டிருந்தார். எங்கள் அணி ஊழியர் ஒருவர் முன்னால் உட்கார்ந்து கொண்டிருந்தார். துப்பாக்கி சுடும் சப்தம் கேட்டது. முதலில் பட்டாசு என்று நினைத்தோம். அவர் எழுந்து நின்று, கீழே குனியுங்கள், பேருந்தை நோக்கிச் சுடுகிறார்கள் என்று அலறினார்.

உடனே அங்கு பதற்றம் தொற்றிக் கொண்டது. நாங்கள் ஒருவர் மீது ஒருவர் என பேருந்தில் மறைந்து ஒளிந்து கொண்டோம். துப்பாக்கிச் சூடு தொடர்ந்தது. எவ்வளவு முடியுமோ அவ்வளவு சுட்டார்கள். கையெறி குண்டு வீசினார்கள். ராக்கெட் லான்சரைச் செலுத்தினார்கள். ஆனால் நாங்கள் எப்படியோ உயிர் பிழைத்தோம்.

சமரவீராவுக்கு காயம்பட்டது. குண்டின் துகள்கள் என் தோளைத் துளைத்தன. மெண்டிஸுக்கு அடிபட்டிருந்தது. பரணவிதானா மார்பிலிருந்து ரத்தம் சொட்ட எழுந்து நின்று தான் சுடப்பட்டதாகச் சொல்லி கீழே மயங்கி விழுந்தார். பேருந்தைச் சுற்றி ஊ ஆ என சத்தம் கேட்டது. பால் ஃபர்ப்ரேஸ் கையில் ஒரு இரும்புக் கம்பி துளைத்தது. அங்கிருந்து 500 மீட்டர் தொலைவிலிருக்கும் மைதானத்துக்குச் சென்றது. மிகவும் அடிப்படை பாதுகாப்பு வசதிகள் மட்டுமே இருந்தன. துரதிர்ஷ்டவசமாக எங்களுக்குப் பாதுகாப்பாக நின்ற அத்தனை பாதுகாவலர்களும் கொல்லப்பட்டனர். அது மிகவும் சோகமானது.

எங்கள் பேருந்தின் ஓட்டுநரைச் சுட முயன்றனர். ஆனால் இம்மியளவில் அவர் தப்பித்தார். அவர் தான் நாயகன். அவர் பிழைத்திருந்ததால் தான் எங்களை அங்கிருந்து பேருந்தில் அழைத்துச் செல்ல முடிந்தது. நாங்கள் பிழைத்தோம். வழக்கமாக அந்தக் குறுகிய வாசலுக்குள் நான்கு முறை முயன்ற பின்தான் பேருந்தை நுழைத்து எடுத்துச் செல்வார். ஆனால் இம்முறை நேராக உள்ளே சென்றார். நாங்கள் இறங்கினோம்.

பரணவிதானா இறந்துவிட்டதாக நாங்கள் நினைத்தோம். ஆனால் அவர் தன் முதுகைத் தொட்டுப் பார்த்து, என் முதுகில் ஓட்டை இல்லை. எனக்கு ஒன்றும் இல்லை என நினைக்கிறேன் என்று சொல்லி நடந்து சென்றார். சமரவீராவுக்கு அதிகமாக ரத்தம் சிந்திக் கொண்டிருந்தது. மோசமாக அடிபட்டிருந்தது. அவரை ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்றனர். அடுத்த ஆம்புலன்ஸில் நானும் மெண்டிஸும் செல்ல வேண்டியது. ஆனால் ஆம்புலன்ஸை நோக்கியும் அவர்கள் சுட ஆரம்பித்ததால் அங்கேயே இருக்க முடிவு செய்தோம்".

இவ்வாறு சங்கக்காரா பகிர்ந்துள்ளார்.

அப்போது அணியின் தலைவராகச் செயல்பட்டது சங்கக்காராதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சம்பவத்துக்குப் பின் பல சர்வதேச கிரிக்கெட் அணிகள் பாகிஸ்தானுக்குச் செல்வதைத் தவிர்த்தன. ஆனால் இந்தத் தாக்குதலுக்குப் பின் இலங்கை அணிதான் பாகிஸ்தானுக்கு முதல் முறையாக மீண்டும் சென்றது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகள் பாகிஸ்தானுக்குச் சென்று ஊக்குவிக்க வேண்டும், ஆதரவு தர வேண்டும் என்று சமீபத்தில் சங்கக்காரா வலியுறுத்தியிருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x