Published : 05 Sep 2015 08:54 AM
Last Updated : 05 Sep 2015 08:54 AM

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: தோல்வியில் இருந்து தப்பினார் பிரிட்டனின் ஆன்டி முர்ரே- வோஸ்னியாக்கி, முகுருஸா அதிர்ச்சி தோல்வி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி யில் பிரிட்டனின் ஆன்டி முர்ரே, 2-வது சுற்றில் கடும் போராட்டத்துக்குப் பிறகு வெற்றி கண்டு 3-வது சுற்றுக்கு முன்னேறினார். ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், வாவ்ரிங்கா ஆகியோரும் 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

அதேநேரத்தில் முன்னணி வீராங்கனைகளான ஸ்பெயினின் முகுருஸா கார்பைன், டென்மார்க் கின் கரோலின் வோஸ்னியாக்கி ஆகியோர் அதிர்ச்சி தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினர்.

அமெரிக்காவின் நியூயார்க் நக ரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் 2-வது சுற்றில் 17 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றவரான ரோஜர் ஃபெடரர் 6-1, 6-2, 6-1 என்ற நேர் செட் களில் பெல்ஜியத்தின் ஸ்டீவ் டார் சிஸ்ஸை வீழ்த்தினார். இந்த ஆட் டத்தை 80 நிமிடங்களில் முடிவுக்கு கொண்டு வந்த ஃபெடரர், தனது 3-வது சுற்றில் ஜெர்மனியின் பிலிப் கோல்ஸ்கிரைபரை சந்திக்கிறார்.

போராடிய முர்ரே

போட்டித் தரவரிசையில் 3-வது இடத்தில் இருப்பவரும், 2012 அமெரிக்க ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றவருமான ஆன்டி முர்ரே, கடும் போராட்டத்துக்குப் பிறகு 5-7, 4-6, 6-1, 6-3, 6-1 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் அட்ரியான் மன்னாரினோவை தோற்கடித்தார். விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தின் முதல் இரு செட்களை முர்ரே இழந்ததால், அவர் தோற்றுவிடலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி 3 செட்களில் ஆக்ரோஷமாக ஆடி வெற்றி கண்டார் முர்ரே. அடுத்த சுற்றில் பிரேசிலின் தாமஸ் பெலூச்சியை சந்திக்கிறார் முர்ரே.

ஹெவிட் ‘குட் பை’

தனது கடைசி அமெரிக்க ஓபனில் விளையாடிய ஆஸ்திரேலியாவின் லெய்டன் ஹெவிட் 3-6, 2-6, 6-3, 7-5, 5-7 என்ற செட் கணக்கில் சகநாட்டவரான பெர்னாட் டாமிக்கிடம் தோல்வி கண்டார். 2001 அமெரிக்க ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றவரும், முன்னாள் முதல் நிலை வீரருமான ஹெவிட், இந்த ஆட்டத்தை 3 மணி, 27 நிமிடங்கள் ஆடினார். ஹெவிட் வரும் ஜனவரியில் நடை பெறவுள்ள ஆஸ்திரேலிய ஓபனில் விளையாடிவிட்டு டென்னிஸி லிருந்து ஓய்வு பெறுகிறார்.

போட்டித் தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா 7-6 (2), 7-6 (4), 7-6 (6) என்ற நேர் செட்களில் தென் கொரியாவின் சங் ஹியெனை வீழ்த்தினார். வாவ்ரிங்கா தனது 3-வது சுற்றில் பெல்ஜியத்தின் பெமல்மேனை சந்திக்கிறார்.

வோஸ்னியாக்கி தோல்வி

மகளிர் ஒற்றையர் 2-வது சுற்றில் போட்டித் தரவரிசையில் 4-வது இடத்தில் இருந்த டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி 4-6, 7-5, 6-7 (1) என்ற செட் கணக்கில் சர்வதேச தரவரிசையில் 149-வது இடத்தில் இருக்கும் செக்.குடியரசின் பெட்ரா செட்கோவ்ஸ்காவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டார்.

நீண்ட நேர ஆட்டம்

மற்றொரு 2-வது சுற்றில் போட்டித் தரவரிசையில் 9-வது இடத்தில் இருந்தவரும், விம்பிள் டனில் இறுதிச்சுற்று வரை முன்னேறியவருமான ஸ்பெயினின் கார்பைன் முகுருஸா 6-7 (4), 7-6 (4), 2-6 என்ற செட் கணக்கில் உலகின் 97-ம் நிலை வீராங்கனையான பிரிட்டனின் ஜோஹன்னா கோன்டாவிடம் தோல்வி கண்டார்.

இந்த ஆட்டம் 3 மணி, 23 நிமிடங்கள் நடந்தது. அமெரிக்க ஓபன் வரலாற்றில் அதிக நேரம் நடந்த மகளிர் ஒற்றையர் போட்டி இதுதான். முன்னதாக 2011-ல் சமந்தா ஸ்டோசர்-நடியா பெட்ரோவா இடையிலான ஆட்டம் 3 மணி, 16 நிமிடங்கள் நடந்ததே சாதனையாக இருந்தது.

தற்போதைய நிலையில் மகளிர் ஒற்றையர் பிரிவில் டாப்-10 வீராங்கனைகளில் செரீனா வில்லியம்ஸ் (1), சைமனோ ஹேலப் (2), பெட்ரா விட்டோவா (5) ஆகிய மூன்று பேர் மட்டுமே களத்தில் உள்ளனர். எஞ்சிய அனைவருமே வெளியேறிவிட்டனர்.

2-வது சுற்றில் பயஸ், சானியா ஜோடிகள்

ஆடவர் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-ஸ்பெயினின் பெர்னாண்டோ வெர்டாஸ்கோ ஜோடி 6-2, 6-3 என்ற நேர் செட்களில் ஜெர்மனியின் புளோரின் மேயர்-பிராங்க் மோடர் ஜோடியை வீழ்த்தியது. 2-வது சுற்றில் அமெரிக்காவின் ஸ்டீவன் ஜான்சன்-சாம் கியூரி ஜோடியை சந்திக்கிறது பயஸ் ஜோடி.

மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா-ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி 6-1, 6-2 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் கெய்த்லின் கிறிஸ்டியான்-சாப்ரினா சன்டாமேரியா ஜோடியைத் தோற் கடித்தது. 2-வது சுற்றில் ஸ்விட்சர் லாந்தின் டிமியா பேக்சின்ஸ்கை-சீன தைபேவின் சியா ஜங் ஜோடியை சந்திக்கிறது சானியா ஜோடி.

வெளுத்து வாங்கிய வெயில்: சோர்ந்து விழுந்த வீரர்கள்

நியூயார்க்கில் சுமார் 91 பாரன்ஹீட் அளவுக்கு வெயில் கொளுத்தி வருவதால் வீரர்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். 4-வது நாளில் அமெரிக்காவின் ஜேக் சாக், உஸ்பெகிஸ்தானின் டெனிஸ் இஸ்டோமின் ஆகியோர் வெயில் காரணமாக போட்டியிலிருந்து பாதியிலேயே வெளியேற நேர்ந்தது. கடந்த 4 நாட்களில் 12 வீரர்கள் மற்றும் 2 வீராங்கனைகள் வெயிலின் தாக்கத்தால் சோர்வடைந்து போட்டியிலிருந்து வெளியேறியுள்ளனர்.

ஆளில்லா குட்டி விமானம் புகுந்ததால் பரபரப்பு

இத்தாலியின் பிளேவியா பென்னட்டா-ருமேனியாவின் மோனிகா நிகுலெஸ்கு இடையிலான ஆட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ஆளில்லா குட்டி விமானம் ஒன்று பறந்து வந்து மைதானத்தின் கேலரியில் விழுந்தது. அது வெடிகுண்டாக இருக்கலாம் என அஞ்சப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து சிறிது நேரம் ஆட்டம் நிறுத்தப்பட்டது. எனினும் இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதனால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டது.

கேலரியில் விழுந்த ஆளில்லா குட்டி விமானம். படம்: ஏ.எப்.பி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x