

கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, திருப்பத்தூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமாருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் மக்கள் காவல்துறையிடம் அளிக்கும் புகார்களுக்கு சரியான நடவடிக்கை எடுக்கப்படுகிறதா, காவல்துறையினர் பணியின் தரம் எப்படி இருந்தது என்பது குறித்து புகார் தந்தவர்களிடம் பின்னூட்டம் கேட்கப்படுகிறது. அவர்களின் கருத்துக்கு ஏற்ப சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பாராட்டோ, அறிவுறுத்தலோ வழங்கப்படுகிறது. இந்த முன்னெடுப்பைச் செய்தது அந்த மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார்.
- Suresh Raina
இதுகுறித்த ஒரு காணொலியை இந்திய ஐபிஎஸ் சங்கத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கம் பகிர்ந்திருந்தது. இதை ரீட்வீட் செய்திருக்கும் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, "திருப்பத்தூர் எஸ்பியின் அற்புதமான முன்னெடுப்பு. காவல்துறை வேலையை செய்யும் முறையை இன்னும் செறிவூட்ட, குடிமக்களின் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க இது உதவும்" என்று குறிப்பிட்டு ட்வீட் செய்து பாரட்டியுள்ளார்.
ரெய்னாவின் இந்தப் பாராட்டு நெட்டிசன்கள் பலரால் பகிரப்பட்டு வருகிறது. கண்காணிப்பாளர் விஜயகுமாருக்கும் பலர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.