

விளையாட்டுத் துறையில் உயரி யவிருதான கேல் ரத்னா விருதுக்கு இந்தியக் கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டன் ரோஹித் சர்மாவை இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ) பரிந்துரை செய்துள்ளது.
2019-ம் ஆண்டு உலகக்கோப்பைப் போட்டியில் 5 சதங்கள் அடித்த ரோஹித் சர்மா சிறந்த கிரிக்கெட் வீரர் விருதையும் பெற்றதையடுத்து இந்த விருதுக்கு பரி்ந்துரை செய்யப்பட்டுள்ளார்
சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் அர்ஜூனா விருதுக்கு தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவணும், டெஸ்ட் வேகப்பந்துவீச்சாளர் இசாந்த் சர்மாவும் பரிந்துைர செய்யப்பட்டுள்ளனர்.
மகளிர் பிரிவில் கடந்த 3 ஆண்டுகளாக அனைத்துப்பிரிவிலும் சிறப்பாகச் செயல்பட்டுவரும் இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா அர்ஜூனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு ஸ்மிருதி மந்தனாவுடன் சேர்ந்து ஷிகர் தவண் பெயரும் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், தவணுக்கு கிடைக்கவில்லை
இதுவரை கேல்ரத்னா விருது கிரிக்கெட் வீரர்களில் சச்சின் டெண்டுல்கர்(1997-98), மகேந்திர சிங் தோனி(2007), விராட் கோலி(2018) ஆகியோருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியி்ன் துணைக் கேப்டன் ரோஹித் சர்மா 224 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 9,115 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 43 அரைசதங்கள், 29 சதங்கள் அடங்கும். 32 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா 6 சதங்கள், 10 அரைசதங்கள் உள்பட 2,141 ரன்கள் சேர்த்துள்லார். 108 டி20 போட்டிகளில் விளையாடிய ரோஹித் 4 சதங்கள் உள்பட 2,773 ரன்கள் குவித்துள்ளார்.
பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி நிருபர்களிடம் கூறுகையில் “ விருதுகளுக்கு வீரர்களை பரிந்துரை செய்யும் முன் பல்வேறு புள்ளிவிவரங்களை ஆய்வு செய்து, பகுத்துதான் வீரர்களை பரிந்துரை செய்திருக்கிறோம். கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள ரோஹித் சர்மா பேட்ஸ்மேனாக பல மைல்கல்லை எட்டியுள்ளார், டி20, ஒருநாள் போட்டிகளில் அடிக்கமுடியாத ஸ்கோர்களை அடித்துள்ளார். அவரின் தலைமைப்பண்பு, நிலைத்தன்மை, ஒழுக்கம், அர்ப்பணிப்பு போன்றவை கேல் ரத்னா விருதுக்கு தகுதியானவர் என்பதை உணர்த்துகிறது” எனத் தெரிவித்தார்
31 வயதான இசாந்த் சர்மா நீண்டநாட்களாக விருதுக்கு பரிந்துரைசெய்யப்படாத நிலையில் இப்போது பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். 97 டெஸ்ட், 80 ஒருநாள் போட்டிகள், 14 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இசாந்த் சர்மா 297 டெஸ்ட் விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். கபில்தேவுக்கு அடுத்தார்போல் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ள 2-வது வீரர் இசாந்த் சர்மா ஆவார்.
34 வயதான ஷிகர் தவண் தனது டெஸ்ட் போட்டி அறிமுகத்திலேயே அதிவேகமாக டெஸ்ட் சதங்களை அடித்தவர். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் அதிகமான ரன்கள் குவித்ததால் தொடர்ந்து இருமுறை தங்க பேட்டை ஷிகர் தவண் வென்றார். ஒருநாள் போட்டிகளில் ஷிகர் தவண் அதிவேகமாக 2,000, 3000 ரன்களை எட்டினார். மேலும், 4000, 5000 ரன்களை அதிவேகமாகக்கடந்த 2-வது இந்திய வீரர் ஷிகர் தவண்.
136 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய ஷிகர் தவண் 5,688ரன்கள் குவித்துள்ளார். இதில் 17 சதங்கள் அடங்கும். 17 டெஸ்ட் போட்டிகளஇல் 2,315 ரன்களும், 61 டி20 போட்டிகளில் 1,588 ரன்களும் சேர்த்துள்ளார்