மறக்க முடியுமா? இந்திய அணிக்கு பயிற்சியளித்த நாட்களை.. : கேரி கர்ஸ்டன் உற்சாகம்

மறக்க முடியுமா? இந்திய அணிக்கு பயிற்சியளித்த நாட்களை.. : கேரி கர்ஸ்டன் உற்சாகம்
Updated on
1 min read

கேரி கர்ஸ்டன் பயிற்சியாளராக இருந்த போதுதான் இந்திய அணி 2011-ல் 2வது முறையாக உலகக்கோப்பையை வென்று சாம்பியன்கள் ஆனது.

இதோடு மட்டுமல்லாமல் தென் ஆப்பிரிக்காவுக்கு இந்திய அணி டெஸ்ட் தொடருக்காகச் செல்லும் போது அங்கு இந்திய அணி அவமானப்பட்டு விடக்கூடாது என்பதற்காக முன் கூட்டியே சில இந்திய வீரர்களை அழைத்துச் சென்று தன் சொந்த இடத்தில் தனிப்பட்ட முறையில் பயிற்சி அளித்து அந்தத் தொடரை இந்திய அணி சமன் செய்ததையும் மறக்க முடியாது.

இந்நிலையில் கேரி கர்ஸ்டன் இந்திய அணியுடனான தன் பயிற்சி நாட்களை நினைவுகூர்கையில், “இந்திய அணிக்கு பயிற்சி அளித்த நாட்கள் என்றும் என் நினைவில் இருக்கும்.

இந்திய அணிக்கு பயிற்சி அளித்ததை மிகவும் விருப்பத்துடன் செய்தேன். என் வாழ்நாளில் இது சிறந்த தருணம். 2011 உலகக்கோப்பை நினைவுகளை மறக்க முடியாது. கோப்பையை வெல்ல வேண்டும் என்று அனைத்து இந்திய வீரர்களுமே முனைப்பாக இருந்தனர். கடைசியில் நம்ப முடியாத அளவுக்கு சிறப்பாகச் செயல்பட்டனர்.

தோனி ஒரு ஆச்சரியப்படத்தக்க வீரர். கிரிக்கெட் குறித்த நுட்பமான அறிவு, அமைதியான குணம், சிறப்பாகச் செயல்படும் ஆற்றல், பெஸ்ட் பினிஷர் என்பவை மற்றவர்களிடமிருந்து அவரை தனித்துக் காட்டும். தோனியை சிறந்த வீரராக உயர்த்தியதும் இதுதான்.

ஆகவே அவர் எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பதை அவர் முடிவு செய்யட்டும். சாம்பியன் சச்சின் டெண்டுல்கருடன் பணியாற்றுவது எளிதாக இருந்தது. 2011-ல் கோலி சிறந்த வீரராக இருந்தார், இப்போது மிகச்சிறந்த வீரராகத் திகழ்கிறார்” என்றார் கேரி கர்ஸ்டன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in