2-வது டெஸ்ட்: சஹா அரைசதம்; இந்தியா 393 ரன்கள்

2-வது டெஸ்ட்: சஹா அரைசதம்; இந்தியா 393 ரன்கள்
Updated on
2 min read

கொழும்பு டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா தன் முதல் இன்னிங்ஸில் 393 ரன்கள் எடுத்துள்ளது. ஓரளவுக்கு பேட்டிங் சாதக ஆட்டக்களத்தில் 400 ரன்களை இந்தியா எட்ட முடியவில்லை.

விருத்திமான் சஹா, அமித் மிஸ்ரா ஆகியோருக்கு சில அதிர்ஷ்டகரமான தருணங்கள் அமைய ஸ்கோர் கொஞ்சம் சுமாரான நிலையை எட்டியது. முன்னதாக அஸ்வின் ஏமாற்றமளித்தார், 2 ரன்கள் எடுத்த நிலையில் அஞ்சேலோ மேத்யூஸின் நேர் நேர் தேமா பந்தை மணிக்கட்டை தளர்த்தி ஆடாமல் அப்படியே டிரைவ் ஆட, இதனை எதிர்பார்த்து ஷார்ட் கவரில் நிறுத்தப்பட்டிருந்த சில்வாவுக்கு அல்வா போல் வந்த கேட்சை அவர் பிடித்து விட்டெறிந்தார்.

நேற்று மாலை கடைசி ஓவரில் ரோஹித் அவுட் ஆனது போல் இன்று வந்தவுடன் அஸ்வின் அவுட் ஆனதும் பெருத்த ஏமாற்றத்தை அளித்தது.

சஹா, மிஸ்ரா இணைந்து 8-வது விக்கெட்டுக்காக 46 ரன்களைச் சேர்த்தனர், மிஸ்ரா ஓரளவுக்கு விளையாடவே செய்தார். ஆனால் இருவருக்குமே அதிர்ஷ்டம் இருந்தது. பந்து ஆஃப் ஸ்டம்பை உரசிச் சென்றது ஆனால் பெயில்கள் கீழே விழவில்லை. சஹாவுக்கு கேட்ச் போன்று தெரிந்த ஒன்று அவுட் கொடுக்கப்படவில்லை. ஒரு சில எட்ஜ்கள் பீல்டருக்கு முன்னால் விழுந்தன, அல்லது ஸ்லிப் தலைக்கு மேல் சென்றன, அமித் மிஸ்ரா அடித்த ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட் ஒன்று இத்தகைய முறையில் பவுண்டரிக்குச் சென்றதே. இடையிடையே விருத்திமான் சஹா தனது தடுப்பாட்டத்தில் உறுதியைக் காண்பித்தார்.

சமீரா தொடர்ந்து அபாரமாக வீச மிஸ்ரா 24 ரன்கள் எடுத்த நிலையில் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே ஒரு பந்தை குத்தி எழுப்ப அதனை மிஸ்ரா தொட்டார், கெட்டார்.

சஹா தனது அரைசதத்தை எடுத்து 6 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் எடுத்த நிலையில் உணவு இடைவேளைக்குப் பிறகு ஹெராத் பந்தில் எல்.பி.ஆனார்.

இசாந்த் சர்மாவும் 2 ரன்களில் ஹெராத்திடம் எல்.பி. ஆகி வெளியேறினார். உதிரிகள் வகையில் 28 ரன்கள் பங்களிப்பு இந்தியாவுக்கு உதவியதில் 393 ரன்கள் வந்தது. இன்று 74 ரன்களை 4 விக்கெட்டுகளை இழந்து எடுத்தது இந்தியா. இந்த இந்திய அணியிடம் இவ்வளவுதான் நாம் எதிர்பார்க்க முடியும்.

ஹெராத் மீண்டும் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சமீரா, மேத்யூஸ், பிரசாத் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற ஆஃப் ஸ்பின்னர் கவுஷால் இந்தியாவுக்கு 111 ரன்கள் கொடுத்து உதவி புரிந்தார்.

தொடர்ந்து ஆடிவரும் இலங்கை அணியில் கருணரத்னே 1 ரன்னில் உமேஷ் யாதவின் பந்தில் எல்.பி. முறையில் அவுட் ஆனார். இடது கை வீரரான கருண ரத்னேவுக்கு ஒரு பந்தை உள்ளே ஸ்விங் செய்தார் உமேஷ் யாதவ்.

சற்று முன் சங்கக்காரா 24 ரன்களில் இருந்த போது அஸ்வின் பந்தை கட் செய்தார், நல்ல கட்ஷாட் அது, இதனால் ஸ்லிப் திசையில் கேட்சாக வேகமாக சென்றது, ரஹானேவுக்கு இடது புறம் கேட்சாகச் சென்றது. கடினமான வாய்ப்பு இருந்தாலும் அவர் முயற்சி செய்தார் பந்து தவறியது மீண்டும் முயன்றார் முடியவில்லை. சங்கக்காரா 28 ரன்களுடனும், கவுஷல் சில்வா 24 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர். இலங்கை 57/1.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in