Published : 22 Aug 2015 09:46 AM
Last Updated : 22 Aug 2015 09:46 AM

உலக தடகள சாம்பியன்ஷிப் பெய்ஜிங்கில் இன்று தொடக்கம்: முதல் நாளில் 3 பதக்க போட்டிகள்

15-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி சீன தலைநகர் பெய்ஜிங்கில் இன்று தொடங்குகிறது. வரும் 30-ம் தேதி நிறைவடைகிறது.

பெய்ஜிங்கில் உள்ள தேசிய மைதானமான பறவைக்கூடு (பேர்ட்ஸ் நெஸ்ட்) மைதானத்தில் மாரத்தானுடன் தொடங்குகிறது இந்தப் போட்டி. ஆடவர் பிரிவில் 24 வகையான போட்டிகளும், மகளிர் பிரிவில் 23 வகையான போட்டிகளும் நடைபெறுகின்றன. ஆடவர் பிரிவில் இடம்பெற்றிருக்கும் 50 கி.மீ. நடைப் போட்டி, மகளிர் பிரிவில் இல்லை.

கடும் சவாலில் போல்ட்-கேட்லின்

உலகின் அதிவேக மனிதரான ஜமைக்காவின் உசேன் போல்ட், இங்குதான் 2008-ல் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 3 தங்கப் பதக்கங்களை வென்றார். 7 ஆண்டுகளுக்குப் பிறகு பெய்ஜிங் வந்திருக்கும் போல்ட், தனக்கு பிடித்த மற்றும் ராசியான அதேமைதானத்தில் மிகுந்த உற்சாகத்தோடு களமிறங்குகிறார்.

அது தொடர்பாக பேசிய போல்ட், “பெய்ஜிங் நகரைப் பொறுத்தவரை எனக்கு இனிமையான நினைவுகள் இருக்கின்றன. மீண்டும் இங்கு வந்திருப்பதை மிகச்சிறப்பாக உணர்கிறேன். சனிக்கிழமை முதல் இங்கு களமிறங்க காத்திருக்கிறேன்” என்றார்.

2008-ல் பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 100 மீ., 200 மீ., 4x100 மீ. தொடர் ஓட்டம் ஆகியவற்றில் தங்கப் பதக்கம் வென்றவரான உசேன் போல்ட், மேற்கண்ட 3 பிரிவுகளிலும் நடப்பு சாம்பியனாக களமிறங்குவது கூடுதல் பலமாகும். காயம் காரணமாக 6 வார காலம் தடகளப் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்த போல்ட், லண்டன் டைமன்ட் லீக் போட்டியில் அடுத்தடுத்து 9.87 விநாடிகளில் இலக்கை எட்டியதன் மூலம் பார்முக்கு திரும்பியிருக்கிறார். உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 100 மீ., 200 மீ., ஓட்டங்களில் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொள்வதில் தீவிரமாக இருக்கிறார் போல்ட்.

ஆனால் இந்த முறை அவருக்கு மிகப்பெரிய சவாலாக அமெரிக்காவின் ஜஸ்டின் கேட்லின் திகழ்கிறார். 2013-லிருந்து 100 மீ., 200 மீ. ஓட்டங்களில் 27 போட்டி களில் வாகை சூடியிருக்கிறார். இந்த ஆண்டில் 100 மீ. ஓட்டத்தில் குறைந்த நேரத்தில் (9.74 விநாடிகள்) இலக்கை எட்டியவர் என்ற பெருமையும் கேட்லினிடமே உள்ளது. ஜமைக்காவைச் சேர்ந்த மற்றொரு வீரரான ஆசாபா பாவெல், அமெரிக்காவின் டிரேவோன் புரோமெல், டிரினிடாட் அன்ட் டொபாக்கோவின் கெஸ்டான் பிளீட்மான், பிரான்ஸின் ஜிம்மி விகாட் உள்ளிட்டோரும் 100 மீ. ஓட்டத்தில் கடும் சவால் அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 100 மீ. ஓட்டத்திற்கான தகுதிச்சுற்று இந்திய நேரப்படி இன்று காலை 10.10 மணிக்கும், முதல் சுற்று (ஹீட்ஸ்) மாலை 4.50 மணிக்கும் நடக்கிறது.

3 பதக்க போட்டிகள்

ஆடவர் மாரத்தான், மகளிர் குண்டு எறிதல், ஆடவர் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டம் ஆகிய பிரிவுகளில் இன்று பதக்க போட்டிகள் நடைபெறுகின்றன. 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தைப் பொறுத்தவரையில் பிரிட்டனின் மோ பாரா மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 2012 ஒலிம்பிக், 2013 உலக சாம்பியன்ஷிப் ஆகியவற்றில் 5 ஆயிரம் மீட்டர், 10 ஆயிரம் மீட்டர் ஓட்டங்களில் மோ பாரா சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக் கது.

17 பேர் கொண்ட இந்திய அணி

இந்தியாவில் இருந்து 17 பேர் பங்கேற்றுள்ளனர். இந்திய அணி 10 பிரிவுகளில் பங்கேற்றுள்ளது. ஆடவர் 20 கி.மீ. நடைப் போட்டியில் பல்ஜிந்தர் சிங், குருமீத் சிங், சந்தன் சிங் ஆகியோரும், ஆடவர் 50 கி.மீ. நடைப் போட்டியில் மணீஷ் சிங், சந்தீப் குமார் ஆகியோரும் பங்கேற்கின்றனர். ஆடவர் வட்டு எறிதலில் விகாஸ் கவுடாவும், ஆடவர் குண்டு எறிதலில் இந்திரஜித் சிங்கும், மகளிர் 20 கி.மீ. நடைப் போட்டியில் குஷ்பிர் கவுர், சபானா ஆகியோரும் பங்கேற்கின்றனர்.

மகளிர் 800 மீ. ஓட்டத்தில் தின்டு லூக்காவும், மகளிர் 5000 மீ. ஓட்டத்தில் ஓ.பி.ஜெய்ஷாவும், மகளிர் மாரத்தானில் ஓ.பி.ஜெய்ஷா, லலிதா பாபர், சுதா சிங் ஆகியோரும், மகளிர் 3000 மீ. ஸ்டீபிள்சேஸில் லலிதா பாபரும் பங்கேற்கின்றனர். மகளிர் 4x400 மீ. தொடர் ஓட்டத்தில் ஜிஷ்னா மேத்யூ, தின்டு லூக்கா, அனு ராகவன், எம்.ஆர்.பூவம்மா, தேபா மஜும்தார் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

பதக்க போட்டி- நேரம்

ஆடவர் மாரத்தான் காலை 5.05

மகளிர் குண்டு எறிதல் மாலை 5.35

ஆடவர் 10,000 மீ. ஓட்டம் மாலை 6.20

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x