

தோனி தலைமையின் கீழ் பார்த்திவ் படேல் சிஎஸ்கே அணியில் 3 சீசன்கள் ஆடியிருக்கிறார், தோனி எப்போதும் அணிச்சேர்க்கை பற்றி மிகவும் தெளிவாக இருப்பார் என்கிறார் பார்த்திவ் படேல்.
2008 தொடரில் சிஎஸ்கே இறுதிப்போட்டிக்கு வந்தது அதில் பார்த்திவ் படேலின் பங்களிப்பு கவனிக்கத்தக்கது.
முதல் ஐபிஎல் கோப்பையை ஷேன் வார்ன் தலைமை ராஜஸ்தான் ராயல்ஸ் வென்றது, இறுதிப் போட்டியில் சிஎஸ்கே தோற்றது.
அந்தப் போட்டிக்கு முன்பாக நடந்த அணி மீட்டிங் குறித்து பார்த்திவ் படேல் கூறும்போது, “டீம் மீட்டிங்கெல்லாம் 2 நிமிடங்களில் முடிந்து விடும். 2008 இறுதிப் போட்டிக்கு முன்பாக நடந்த டீம் மீட்டிங் 2 நிமிடங்கள்தான் 2019-லும் 2 நிமிடங்கள்தான் என்று நான் ஆழமாக நம்புகிறேன்.
தன் வீரர்களிடமிருந்து என்ன வேண்டும் என்பதில் தோனி எப்போதும் தெளிவானவர். அணிச்சேர்க்கையிலும் அவருக்கு குழப்பம் ஏற்பட்டதில்லை.
2008 ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் 11 வீரர்களும் ஒரு குடும்பத்தைப் போன்று செயல்பட்டனர். தனிவீரர்களின் தொகுப்பல்ல ராஜஸ்தான் ராயல்ஸ், அதனால்தான் அவர்களை சீரியஸாக எடுத்து கொண்டோம், அவர்களை ‘அண்டர் டாக்ஸ்’ என்று கூற முடியாது” என்றார் பார்த்திவ் படேல்.
அந்த இறுதிப் போட்டியில் பார்த்திவ் படேல் 33 பந்துகளில் 38 ரன்களை எடுத்தார். சிஎஸ்கே 160 ரன்களை எடுக்க யூசுப் பத்தான் அதிரடி அரைசதத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் சாம்பியன்களாயினர்.
“அந்த 2008 தொடரில்தான் மைக்கேல் ஹஸ்ஸி, மேத்யூ ஹெய்டன், ஸ்டீபன் பிளெமிங் போன்ற மூத்த வீரர்களிடமிருந்து நிறையக் கற்றுக் கொண்டேன்” என்று ஸ்டார் ஸ்போர்ட்சுக்குக் கூறினார் பார்த்திவ் படேல்.