

லாரா, ஜாக் காலிஸ் என்று ஒப்பிட்டாலும் உலகின் சிறந்த பேட்ஸ்மென் என்னைப் பொறுத்தவரையில் சச்சின் டெண்டுல்கர்தான் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ தெரிவித்துள்ளார்.
ஜிம்பாப்வே முன்னாள் வீரர் மபமெல்லோ மபாங்வாவுடனான இன்ஸ்டாகிராம் லைவ் அரட்டையில் பிரெட் லீ கூறியதாவது:
சச்சின் டெண்டுல்கரைப் பற்றிக் கூற வேண்டுமெனில் என் பந்துகளை ஆடும்போது அவருக்கு மட்டும் கூடுதல் நேரம் கிடைப்பதாகத் தோன்றும், என் பவுலிங்கை அவர் அனாயசமாக ஆடுவதைப் பார்த்த போது என் பந்துகளை அவர் சந்திக்க போதிய நேரம் அவருக்கு இருப்பதாக உணர்ந்திருக்கிறேன்.
லாராவை எடுத்துக் கொண்டால் அவர் மிகவும் சுறுசுறுப்பானவர். எவ்வளவு வேகமாக வீசினாலும் அவர் ஒரு பந்தை மைதானத்தின் 6 வேறு பட்ட இடங்களுக்கு அடிக்கக் கூடியவர். கிரேட்டஸ்ட் பேட்ஸ்மென் யார் என்றால் லாரா, சச்சின் இடையே சரிசமமான போட்டியே இருக்கும், ஆனால் என்னைப் பொறுத்தவரை சச்சின் தான் பெஸ்ட். ஆனால் பூர்த்தியடைந்த கிரிக்கெட் வீரர் என்றால் என்னைப் பொறுத்தவரை ஜாக் காலீஸ்தான், என்றார்.
சச்சின் டெண்டுல்கர் 100 சதங்களை எடுத்து சாதித்தவர் என்றால் பிரையன் லாரா அதிகபட்சமாக 501 ரன்களை எடுத்து சாதனை வைத்திருப்பதோடு டெஸ்ட் கிரிக்கெட்டில் நாற்சதம் அடித்த ஒரே வீரர் லாராதான் என்ற பெருமைக்குரியவர். ஆனால் காலிஸ் தன் கிரிக்கெட் வாழ்க்கையில் 25,534 ரன்களை எடுத்ததோடு 577 விக்கெட்டுகளையும் கைப்பற்றியவர்.