

மே 26 ஆன இன்று, அன்றைய தினத்தில் 1999-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பைத் தொடரில் கங்குலி-திராவிட் உலக சாதனை படைத்து 318 ரன்கள் கூட்டணி அமைத்ததைத்தான் மறக்க முடியுமா? அல்லது இலங்கைக்கு ஒரு காட்டடி தர்பாரை நடத்திக் காட்ட வேண்டும், இலங்கை அணியை புரட்டி எடுக்க வேண்டும் என்று அப்போது இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் உள்ளத்தின் வேட்கையை கங்குலி, திராவிட் நிறைவேற்றியதைத்தான் மறக்க முடியுமா?
1996 உலக சாம்பியன் இலங்கை அணி 3 ஆண்டுகளில் ஒன்றுமேயில்லாமல் போனது. அதே அணிதான், ரணதுங்காதான் கேப்டன் ஆனாலும் இங்கிலாந்து பிட்ச்களில் ஒன்றுமேயில்லாமல் போனது, 1996 அரையிறுதியில் இந்தியாவுக்கு எதிரான போட்டி இந்திய அணிக்கு பெரிய அவமானகிப் போன நிலையில் 1999 உலகக்கோப்பையில் இந்திய அணி இலங்கையை பழித்தீர்த்த போட்டியாகவே இந்தப் போட்டியை பார்க்க வேண்டியுள்ளது. மே 26,1999 டாண்ட்டன் மைதானத்தில் இந்திய ரசிகர்களின் கொண்டாட்ட தினமாயிற்று. காரணம் தாதா கங்குலி, திராவிட் காட்டிய வாணவேடிக்கைகள்தான்.
இந்திய அணிக்கும் அதே அசாருதீன் தான் கேப்டன். சச்சின் டெண்டுல்கர் அப்போதெல்லாம் 4ம் நிலையில் இறங்கிவந்தார், ரமேஷ், கங்குலி இந்தப் போட்டியில் தொடக்க வீரர்களாக இறங்கினர். டாஸ் வென்ற இலங்கை கேப்டன் செய்த மாபெரும் தவறு முதலில் இந்திய அணியை பேட் செய்ய அழைத்ததுதான்.
எஸ்.ரமேஷ், சமிந்தா வாஸின் ஒருபந்து பிட்ச் ஆகி உள்ளே வர ரமேஷ் பீட்டன் ஆக ஸ்டம்பைப் பதம் பார்க்க பவுல்டு ஆகி 5 ரன்களில் வெளியேறினார். 6/1 என்ற நிலையில் கங்குலி, திராவிட் இணைந்தனர்.
45 ஓவர்களில் 318 ரன்களை இருவரும் சேர்த்ததோடு சமிந்தா வாஸ், முரளிதரன் உள்ளிட்ட பந்து வீச்சை புரட்டி எடுத்தனர்.
43 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் அரைசதம் கண்டார் திராவிட், கங்குலியோ 6 பவுண்டரிகளுடன் 68 பந்துகளில் அரைசதம் கண்டார். திராவிட் பிறகு தனது நிதானமான ஆட்டத்தைக் கடைப்பிடித்து 102 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் சதம் எடுக்க கங்குலி 119 பந்துகளில் 11 பவுண்டரிகள் 1 சிக்சர் என வேகம் கூட்டினார். சதம் அடித்த பிறகு கங்குலி நடந்து நடந்து வந்து அடித்த சிக்சர்கள் இலங்கையை நிலைகுலையச் செய்தது. அடுத்த 24பந்துகளில் 5 சிக்சர்கள் 5 பவுண்டரி என்று வெறும் பவுண்டரி சிக்சர்களிலேயே 143 பந்துகளில் 150 ரன்களை எட்டினார். முரளிதரன் பவுலிங்கை நிதானித்தாலும் பிறகு வெளுத்து வாங்கினர். சமிந்தா வாஸ் 10 ஒவர்கள் 84 ரன்கள் கொடுக்க உபசந்தா 10 ஓவர்களில் 80 ரன்கள், சனத் ஜெயசூரியா 3 ஓவர்கள் 37 ரன்கள் விளாசப்பட்டார். முரளிதரன் 10 ஓவர்கள் 60 ரன்கள் விக்கெட் இல்லை.
ராகுல் திராவிட் 129 பந்துகளில் 17 பவுண்டரிகள் 1 சிக்சருட்ன 145 ரன்கள் எடுத்து முரளிதரனிடம் ரன் அவுட் ஆக, கங்குலி உண்மையான தாதா போல் 158 பந்துகளில் 17 பவுண்டரிகள் 7 சிக்சர்களுடன் 183 ரன்களை விளாசி உலகக்கோப்பையில் கபிலின் 175ரன்கள் சாதனையை உடைத்து தன் வசமாக்கினார். இந்திய அணி 50 ஓவர்களில் 373/6 என்ற மிகப்பெரிய இலக்கை எட்டியது, இலங்கை அணியின் அதிரடி பாடங்களை அவர்களுக்கே புகட்டினர் ராகுல் திராவிடும், கங்குலியும். சச்சின் டெண்டுல்கர் 2 ரன்களில் வெளியேறினார். இலக்கை தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் விக்ரமசிங்கே மட்டுமே 3 விக்கெட்டுகளை 65 ரன்களுக்குக் கைப்பற்றினார்.
318 ரன்கள் திராவிட்-கங்குலி கூட்டணி முதன் முதலில் ஒருநாள் போட்டிகளில் ஏற்படுத்திய 300+ கூட்டணியாகும். அசாருதீன், அஜய் ஜடேஜா ஜிம்பாப்வேவுக்கு எதிராக கட்டாக்கில் எடுத்த உலக சாதனை 275 ரன்கள் கூட்டணியை இந்திய ஜோடியே முறியடித்தது.
புள்ளி விவரங்களை விட ஒரு கட்டத்துக்கு மேல் கங்குலி, திராவிட் அதிரடி உண்மையில் பிரமிப்பூட்டியது, கங்குலியின் தரையோடு தரையான ஆஃப் சைடு ஷாட்கள், திராவிடின் அழகான ட்ரைவ்கள், இலங்கை பவுலர்கள் இந்த அடியின் காயத்திலிருந்து மீள நீண்ட காலம் பிடித்திருக்கும். இலங்கை அணியும் மோசமாக பீல்டிங் செய்தது, கேட்ச்களை விட்டது. இலங்கை கேப்டன் ரணதுங்கா வெறுமனே வேடிக்கைப் பார்க்கவே முடிந்தது, அப்போதெல்லாம் இலங்கை அணியை யாராவது இப்படி புரட்டி எடுக்க வேண்டும் என்ற ஆசை ஒவ்வொரிடத்திலுமே இருந்தது, 96 அரையிறுதி தோல்வி இந்திய ரசிகர்களின் மனதில் ஆறாத வடுவாக மாறியிருந்த நிலையில் இந்த அடி அந்தக் காயத்திற்கு மருந்தானது.
இலங்கை அணி இலக்கை விரட்டி மிக மோசமாக 43வது ஓவரில் 216 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பெரிய அடிதடி வீரர்களான ரோமேஷ் கலுவிதரனா, சனத் ஜெயசூரியா, அரவிந்த டிசில்வா, அட்டப்பட்டு, ஜெயவர்தனே, ரணதுங்கா, மஹானாமா போன்ற அடிதடி வீரர்கள் ஓய்ந்து போய் விட்டதைப் பார்க்க முடிந்தது. இந்திய அணியில் ராபின் சிங் 31 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆட்ட நாயகனாக கங்குலி தேர்வு செய்யப்பட்டார்.
இந்த உலகக்கோப்பையில் சூப்பர் சிக்ஸ் சுற்றோடு இந்திய அணி வெளியேறியது பெருத்த ஏமாற்றத்தை அளித்தாலும் இலங்கையை, பாகிஸ்தானை வீழ்த்தியது இந்திய ரசிகர்களின் உள்ளங்களிலிருந்து நீங்காத ஒன்று, அதே போல் ’என்னா அடி’ என்று வியக்க வைத்த கங்குலி, திராவிடின் அதிரடியும்தான்!