Last Updated : 25 May, 2020 12:19 PM

 

Published : 25 May 2020 12:19 PM
Last Updated : 25 May 2020 12:19 PM

ஐபிஎல்-ல் நான் வார்னர், பேர்ஸ்டோவை வீழ்த்த முடியும் என்றால் சர்வதேச கிரிக்கெட்டிலும் வீழ்த்த முடியும்தானே? - இந்திய அணிக்குள் நுழைய விரும்பும் ஹர்பஜன் சிங்

ஐபிஎல் கிரிக்கெட்டில் சிறப்பாக ஆட முடிகிறது, வீச முடிகிறது என்றால் தான் இந்திய அணிக்காக டி20 கிரிக்கெட்டுக்குத் தயார் என்றுதானே பொருள், ஆம் இந்திய அணிக்காக டி20 கிரிக்கெட் ஆட விரும்புகிறேன் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையதளத்துக்காக ஹர்பஜன் சிங் கூறும்போது, “நான் தயாராக இருக்கிறேன், ஐபிஎல் கிரிக்கெட்டில் நன்றாக வீச முடிகிறது எனில், பவுலர்களுக்குக் கடினமான ஐபிஎல் தொடரில் நான் சிறப்பாக வீச முடிகிறது எனில், டாப் வீரர்கள் இதில் ஆடும்போது, சிறிய மைதனாங்களில் பவுலர்களுக்கு கடினமான ஐபிஎல் கிரிக்கெட்டில் சிறப்பாக வீசும்போது சர்வதேச கிரிக்கெட்டிலும் வீச முடியும்தானே.

நான் ஐபிஎல் தொடரில் பவர் ப்ளேயில் வீசியும், மிடில் ஓவர்களை வீசியும் விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளேன்.

ஐபிஎல் போன்று சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து அணிகளிலும் பிரமாதமான வீரர்கள் இருக்க மாட்டார்கள். ஒவ்வொரு அணியும் டாப் 6 வீரர்கள் சிறப்பாக இருப்பார்கள், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்திய அணிகளில் பேட்டிங் வரிசை பிரமாதம்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் நான் டேவிட் வார்னரையோ, ஜானி பேர்ஸ்டோவையோ வீழ்த்த முடியும் என்றால், சர்வதேச கிரிக்கெட்டில் அவர்களை வீழ்த்த முடியாது என்றா நினைக்கிறீர்கள்? ஆனால் இந்திய அணிக்கு ஆடுவது என் கைகளில் இல்லை.

ஆனால் இப்போதைய இந்திய கிரிக்கெட் அமைப்பில் ஒருவரும் உங்களிடம் இது பற்றி பேசக்கூட மாட்டார்கள்” என்றார் ஹர்பஜன் சிங்.

ஹர்பஜன் சிங் டி20 சர்வதேச கிரிக்கெட்டில் ஹர்பஜன் சிங் 28 போட்டிகளில் 25 விக்கெட்டுகளை 6.20 என்ற சிக்கன விகித்த்தில் எடுத்துள்ளார். பேட்டிங்கிலும் ஓரளவுக்குப் பயனுள்ளவர். இவர் கடைசியாக இந்திய அணிக்கு டி20-யில் ஆடியது 2016ம் ஆண்டு யுஏஇ அணிக்கு எதிராக என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணித்தேர்வில் மிகப்பெரிய கெட்டப்பழக்கம் என்னவெனில் ஒருமுறை அணியிலிருந்து நீக்கப்பட்டால் மீண்டும் அவர் என்னதான் தன்னை நிரூபித்தாலும் கண்டு கொள்ளப்படுவதில்லை என்பதே. டி20-யில் 6.20 சிக்கனவிகிதம் நிச்சயம் அவருக்கு இன்னொரு வாய்ப்பு வழங்குவதையே எடுத்துரைக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x