Published : 07 Aug 2015 09:35 AM
Last Updated : 07 Aug 2015 09:35 AM

சில வரிச் செய்திகள்

கால்பந்து ரேங்க்: 156-வது இடத்தில் இந்தியா

ஃபிஃபா கால்பந்து தரப்பட்டியலில் இந்தியா 156-வது இடத்தில் உள்ளது. உலக சாம்பியன் ஜெர்மனி 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. அர்ஜென்டினா முதல் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

2-வது இடத்தில் பெல்ஜியம் உள்ளது. கொலம்பியா, பிரேஸில், போர்ச்சுகல், ருமேனியா, இங்கிலாந்து, ஸ்பெயின், நெதர்லாந்து ஆகியவை முறையே முதல் 10 இடங்களில் உள்ளன. கடந்த மாதம் வெளியான தரவரிசைப் பட்டியலோடு ஒப்பிடுகையில் இந்தியா 15 இடங்கள் பின்னடைந்துள்ளது. 2018-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றுக்கான போட்டியில் ஓமனிடம் தோல்வியுற்றதை அடுத்து இந்தியா தரவரிசைப் பட்டியலில் கீழிறங்கியுள்ளது. 156-வது இடத்தை கிர்கிஸ்தானுடன் பகிர்ந்து கொண்டுள்ளது இந்தியா. பாகிஸ்தான் 171-வது இடத்தில் உள்ளது.

டிராவிட்டுக்கு கடமைப் பட்டிருக்கிறேன்: யூனிஸ் கான்

தரம் வாய்ந்த டெஸ்ட் பேட்ஸ்மேனாக நான் உருவானதற்கு, ராகுல் டிராவிட் பெரும் பங்களிப்பைச் செய்துள்ளார். அவருக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன் என பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் யூனிஸ் கான் தெரிவித்துள்ளார்.

“ஆட்டத்தின் தொடக்க காலங்களில் ராகுல் டிராவிட்டிடம் இருந்து எனக்குக் கிடைத்த ஆலோசனைகளும், உத்திகளும் எனது கிரிக்கெட் வாழ்க்கை மேம்படுவதற்கு மிகவும் உதவியாக இருந்தன. 3-வது வரிசையில் களமிறங்கும் தரம் வாய்ந்த பேட்ஸ்மேனாக என்னை நிலைநிறுத்திக் கொள்ள அவரின் ஆலோசனைகளே காரணம். டிராவிட், சமகால கிரிக்கெட்டில் மிகவும் தரம்வாய்ந்த, தொழில்முறையிலான ஆட்டக்காரர். அவரிடமிருந்து நான் கற்றுக் கொண்டேன். 2009-ம் ஆண்டில் டெஸ்ட் கேப்டன் பதவியை நான் துறந்தது தவறான முடிவு. நாட்டின் அணியை வழிநடத்துவதற்கான கவுரவத்தை இழந்ததை இப்போது உணர்கிறேன். மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் கேப்டனாக பொறுப்பேற்பேன்” எனத் தெரிவித்துள்ளார் யூனிஸ் கான்.

மூன்று சுழலர்களுடன் களமிறங்குவோம்: உன்முக்த்

இன்று நடைபெறவுள்ள முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய ‘ஏ’ அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியின்போது, மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்குவோம் என இந்திய ‘ஏ’ அணியின் கேப்டன் உன்முக்த் சந்த் தெரிவித்துள்ளார்.

“பந்து நன்றாகத் திரும்புகிறது. எனவே, மூன்று சுழல் பந்து வீச்சாளர்களுடன் களமிறங்க வாய்ப்புள்ளது. ஆட்டத்தின்போக்கைப் பொறுத்து சஞ்சு சாம்சனை தொடக்கத்திலோ அல்லது கடைசியிலோ களமிறக்குவோம். 5-6 பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடுபவர்கள். அக் ஷர் படேல், ரிஷி தவண், கரண் சர்மா ஆகியோரும் பேட்டிங்கில் கை கொடுப்பார்கள்” எனத் தெரிவித்துள்ளார் அவர்.

ஒலிம்பிக்கில் ஸ்குவாஷ்?

டோக்கியோவில் 2020-ல் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் ஸ்குவாஷ் விளையாட்டை சேர்க்க வலியுறுத்தி, ஒலிம்பிக் ஒருங்கிணைப்புக் குழுவை, உலக ஸ்குவாஷ் கூட்டமைப்பின் தலைவர் என். ராமச்சந்திரன் தனது குழுவினருடன் சந்திக்கவுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x