Published : 22 May 2020 07:10 PM
Last Updated : 22 May 2020 07:10 PM

பாட் கமின்ஸ், ஸ்டீவ் ஸ்மித், வார்னர் ஐபிஎல் தொடரை துறக்க வேண்டும்: இயன் சாப்பல் அதிரடி

ஐபிஎல் 2020 இந்த ஆண்டு நடைபெற்றால் அது ஆஸ்திரேலிய உள்நாட்டு கிரிக்கெட் சமயத்தில் நடைபெறும் என்றால் முன்னணி ஆஸ்திரேலிய வீரர்களான பாட் கமின்ஸ், ஸ்டீவ் ஸ்மித், வார்னர் ஆகியோர் ஐபிஎல் தொடரிலிருந்து விலக வேண்டும் என்று இயன் சாப்பல் அதிரடி கருத்தை வெளியிட்டுள்ளார்.

ஐபிஎல் தொடர் காலவரையின்றி தள்ளி வைக்கப்பட்டது, ஆனால் அது உலகக்கோப்பை டி20 தொடர் தள்ளிப்போகும் பட்சத்தில் ஐபிஎல் தொடருக்கு அந்தக் காலக்கட்டம் ஒரு சாளரமாக அமையும் என்ற செய்திகள் அடிபடுவதையடுத்து சாப்பல் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய உள்நாட்டு கிரிக்கெட்டன ஷெஃபீல்ட் ஷீல்ட் மற்றும் ஒன் டே கப் ஆகியவற்றுடன் ஐபிஎல் தொடர் மோதினால் மூத்த வீரர்கல் ஐபிஎல்-ஐ துறக்க வேண்டும் என்கிறார் இயன் சாப்பல்.

“ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முன்னணி வீரர்களை நிதியளவில் நன்றாக வைத்துள்ளதால் உள்நாட்டு கிரிக்கெட்டைத்தான் அவர்கள் தேர்வு செய்ய வேண்டும் என்பது அவர்களுக்கான கடமையாகும்.

மேலும் கிரிக்கெட் உலகம் இந்தியாவினால் சுழலவில்லை என்பதையும் எழுந்து நின்று சொல்ல ஒரு வாய்ப்பாக அமையும். முன்னணி அல்லாத வீரர்கள் பணத்துக்காக ஐபிஎல் ஆடுவதை நான் ஒன்றும் சொல்லவில்லை. அவர்கள் மீது எனக்கு கருணை உள்ளது. ஆனால் டாப் வீரர்களுக்கு நல்ல சம்பளம் எனவே அவர்கள் ஆஸ்திரேலியாவைத்தான் தேர்வு செய்ய வேண்டும்.

ஏனெனில் பிசிசிஐ நினைத்தால் ஐபிஎல் தொடரை நடத்தும். அக்டோபரில் நடத்த நினைத்தால் அவர்கள் அதைச் சாதித்து விடுவார்கள். 16 நாடுகள் ஆடும் உலகக்கோப்பை டி20 நடத்துவது கடினம், ஆனால் அந்த நேரத்தில் ஐபிஎல் நடத்தலாம் என்றால் பிசிசிஐ நடத்தவே செய்யும்.

முன்னிலை ஆஸ்திரேலிய வீரர்கள் ஐபிஎல் தொடரை புறக்கணித்தால் நிச்சயம் பிசிசிஐ பழி தீர்க்கும். ஏனெனில் ஆஸ்திரேலியா, இந்தியா நீங்கலாக நிறைய நல்ல டெஸ்ட் அணிகள் இப்போது இல்லை.

பிசிசிஐ-யின் இந்தப் போக்கு நீண்ட காலத்துக்கு உதவாது, ஆனால் குறுகிய காலத்துக்கு பயனளிக்கும்.

ஆனால் அப்படி நிகழ்ந்தால் கிரிக்கெட் உலகில் யாராவது ஒருவர் எழுந்து நின்று தைரியமாக இந்தியாவிடம் உங்கள் வழி அது என்றால் நாங்கள் வேறு அணியைப் பார்த்துக் கொள்கிறோம் என்று சொல்ல வேண்டிய நேரம் வந்துள்ளது” இவ்வாறு கூறினார் இயன் சாப்பல்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x