

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 3 ஐபிஎல் தொடர்களில் பயிற்சியாளராக இருந்தவர் ரிக்கி பாண்டிங். இவருடன் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா நிறைய கிரிக்கெட் பற்றி பேசி ஆட்டத்தின் நுணுக்கங்கள், கேப்டன்சி நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் இன்ஸ்டாகிராம் லைவ் சாட்டில் ஆஃப் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வினுடன் பேசிய ரோஹித் சர்மா கூறியதாவது:
ரிக்கி பாண்டிங் வேற்று கிரகத்திலிருந்து வந்தவர் என்றே நான் உணர்கிறேன். ஒருவரிடம் உள்ள சிறந்த திறமையை எப்படி வெளியே கொண்டு வருவது என்பதை பாண்டிங் சிறப்பாகச் செய்பவர். ஆஸ்திரேலியாவுக்காக 2 உலகக்கோப்பையை தன் தலைமையில் பாண்டிங் வெற்றி பெற்றுக் கொடுத்திருக்கிறார். எனவே பெரிய தொடர்களை எப்படி வெல்வது என்பது பாண்டிங்குக்கு அத்துப்படி.
2013-ல் பாண்டிங்கை ஏலம் எடுத்தோம். 2012-ல் சச்சின் அணியை வழிநடத்தப் போவதில்லை என்றார். இதனால் ஹர்பஜன் சிங் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் 2013-ல் ஏன் ஹர்பஜன் கேப்டனாக இல்லை என்று தெரியவில்லை. நான் கேப்டனாக்கப்படுவேன் என்றே நினைத்தேன். அப்போதுதான் பாண்டிங் ஏலம் எடுக்கப்பட்டார்.
2013 ஐபில் தொடருக்கு பாண்டிங் தான் இந்தியா வந்த முதல் வீரர் ஆகத் திகழ்ந்தார். அவர் அனைவரையும் முதலில் புரிந்து கொள்ள விரும்பினார். அதாவது வீரர்களிடையே பிணைப்புக்கான ஒரு அமர்வு வேண்டும் என்று அவர் விரும்பினார். அதுதான் அனைவரிடத்திலும் நம்பிக்கையேற்படுத்தும் தாக்கத்தை உருவாக்கியது. பாண்டிங் உண்மையில் இளம் வீரர்களை நன்றாக உத்வேகப்படுத்தினார்.
ஆனால் தன்னான் ரன்கள் எடுக்க முடியவில்லை என்ற போது கேப்டன்சியிலிருந்து விலகினார் பாண்டிங். அப்போதுதான் பாண்டிங் என்னை அழைத்தார் அசம்பாவிதமாகவே என்னிடம் கேப்டன்சி வந்தது. 2013 சீசனில் பாண்டிங் கேப்டன் மற்றும் பயிற்சியாளராக இரண்டு பணிகளைச் செய்தார். அவர் எப்போதும் எனக்கு உதவத்தயாராக இருந்தார்.
இவ்வாறு கூறினார் ரோஹித் சர்மா.
2013, 2015, 2017, 2019 ஆகிய ஆண்டுகளில் மும்பை இந்தியன்ஸ் சாம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது.