

விராட் கோலி விரட்டல் மன்னன், சேஸிங் கிங் என்றெல்லாம் ஒருநாள் கிரிக்கெட்டில் பெயர் பெற்ற மிகப்பெரிய வீரராக உருவெடுத்துள்ளார், ஆனால் சேசிங் செய்யும் போது தன் மனநிலை எப்படியிருக்கும் என்பதை அவர் இதுவரை வெளிப்படுத்தவில்லை.
வங்கதேச இடது கை தொடக்க வீரர் தமிம் இக்பாலுடன் முகநூல் லைவ் சாட்டில் விராட் கோலி தனது விரட்டல் ரகசியத்தை வெளிப்படுத்தினார்:
இலக்கை விரட்டும் போது என் மனநிலை சாதாரணமாகவே இருக்கும். எதிரணியிலிருந்து யாராவது ஏதாவது கமெண்ட் செய்தால் எனக்கு அதுவே உத்வேகம் பிறக்கச் செய்வதாக அமையும். இளம் வயதில் தொலைக்காட்சியில் போட்டிகளைப் பார்க்கும் போது இலக்கை விரட்டும் போது இந்தியா விரட்ட முடியாமல் தோற்கும் போதெல்லாம், ‘நான் இருந்திருந்தால் நிச்சயம் வெற்றிகரமாக விரட்டியிருப்பேன்’ என்று நினைத்துக் கொள்வேன்.
விரட்டலில் சாதகம் என்னவெனில் இலக்கு நமக்கு தெரியும். எனக்கு வெற்றிதான் முக்கியம். சேஸ் செய்யும் போது நான் நாட் அவுட்டாக வெளியேற வேண்டும் என்ற எண்ணமே இருக்கும். அணியை வெற்றி பெற வைக்கமுடியும் என்று நினைப்பேன். இலக்கு 370-380 ஆக இருந்தாலும் இதை எடுக்கவே முடியாது என்று ஒரு போதும் கைவிடமாட்டேன்.
ஹோபார்ட்டில் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 40 ஓவர்களில் 330 ரன்களை விரட்டினால் இறுதிக்குத் தகுதி பெறலாம் என்ற நிலை. நானும் ரெய்னாவும் பேசினோம் இது 2 டி20 போட்டிகளாகும் நமக்கு என்று பேசிவைத்து ஆடினோம். வென்றோம்.
இவ்வாறு கூறினார் விராட் கோலி.