Published : 19 May 2020 11:46 AM
Last Updated : 19 May 2020 11:46 AM

என்னைத் தேர்வு செய்ய என் தந்தையிடம் லஞ்சம் கேட்டனர், அவர் மறுத்தார்; தேர்வாகாததால் கதறி அழுதேன்: மனம் திறக்கும் விராட் கோலி 

விராட் கோலியை அவரது ஆரம்பக்கட்ட கிரிக்கெட்டில் உள்நாட்டு கிரிக்கெட் அணியில் சேர்க்க தன் தந்தையிடம் லஞ்சம் கேட்டதாகவும் தன் தந்தை தீவிரமாக மறுத்து விட்டதாகவும் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் லைவ் சாட்டில் இந்தியக் கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரியுடன் பேசிய விராட் கோலி கூறியதாவது:

“நான் இதனை ஏற்கெனவே கூறியிருக்கிறேன், மாநில கிரிக்கெட்டில் ஒரு காலக்கட்டத்தில் நிறைய விஷயங்கள் நடக்கும் பல விஷயங்கள் நியாயம் தர்மத்தை மீறியதாக இருக்கும்.

விதிமுறைகளை மீறி ‘தகுதி, திறமை மட்டும் போதாது, அதற்கு மேல் சிலது தேவை என்று யாராவது ஒருவர் கூறுவார்.

என் தந்தை தெருவிளக்கில் படித்து வழக்கறிஞர் ஆனார், வாழ்க்கையில் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர். கஷ்டப்பட்டு வந்தவருக்கு லஞ்ச லாவண்ய மொழியெல்லாம் புரியாது. அவருக்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை.

என் தந்தை பயிற்சியாளரிடம் என்ன கூறினார் தெரியுமா? ‘விராட் அவன் திறமையினால் தேர்வு செய்யப்பட்டால் நல்லது இல்லையெனில் அவன் விளையாட வேண்டாம், நான் இதையெல்லாம் செய்ய மாட்டேன்’ என்றார் திட்டவட்டமாக.

நான் தேர்வு செய்யப்படவில்லை, நான் நிறைய அழுதேன். நான் உடைந்தே போய்விட்டேன்.

ஆனால் இது எனக்கு பெரிய பாடத்தைக் கற்றுக் கொடுத்தது, உலகம் இப்படித்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. முன்னேற வேண்டுமெனில் யாரும் செய்யாத ஒன்றை நாம் செய்ய வேண்டும். அதாவது உன் சொந்த கடின உழைப்பைத்தான் நீ நம்பவேண்டும் என்ற பாடத்தை இது எனக்குக் கற்றுத் தந்தது. இதைத்தான் என் தந்தை வாழ்ந்ததாக நான் பார்த்தேன், கற்றுக் கொண்டேன். எனக்கு சரியானவற்றை, சரியான செயல்களைக் கற்றுக் கொடுத்த சம்பவமாகும் இது” என்றார்

18 வயதில் டெல்லி-கர்நாடகா ரஞ்சி போட்டி நடந்து கொண்டிருக்கும் போது தன் தந்தையை இழந்தார் விராட் கோலி, தந்தையை இழந்த துக்கத்திலும் டெல்லி அணிக்காக ஒரு இன்னிங்ஸை ஆடி அணியைக் காப்பாற்றினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x