

சானியா மிர்சாவுக்கு விளையாட்டுத் துறை அமைச்சகம் அளித்த ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு கர்நாடகா உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
இந்திய பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதல் வீரர் எச்.என்.கிரிஷா, சானியா மிர்சாவுக்கு வழங்கப்படும் கேல் ரத்னா விருதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் இந்த அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளது.
கேல் ரத்னா விருதுகள் பொதுவாக ஆகஸ்ட் 29-ம் தேதி தேசிய விளையாட்டு தினமன்று வழங்கப்படும்.
2012 லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் கிரிஷா வெள்ளிப் பதக்கம் வென்றார். மேலும் 2014 இன்ச்சியான் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் உயரம் தாண்டுதலில் வெண்கலம் வென்றார். கேல் ரத்னா விருது புள்ளிகள் அடிப்படையில் தனக்கே வழங்கப்படவேண்டும் என்று இவர் வழக்கு தொடர்ந்தார்.
முன்னதாக இது பற்றி கிரிஷா நாளிதழ் ஒன்றில் தெரிவிக்கும் போது, “அமைச்சகத்தின் விளையாட்டுத் திறன் அடிப்படையிலான புள்ளிகள் முறையின் படி 90 புள்ளிகள் பெற்ற நானே கேல் ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும், இந்த அடிப்படையில் சானியா மிர்சா டாப் நிலைகளில் எங்குமே இல்லை.
சானியா கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார் என்பதை புரிந்து கொள்கிறேன், ஆனால் விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் அறிவிக்கையின் படி ஒலிம்பிக், பாராலிம்பிக் போட்டிகள், ஆசிய விளையாட்டுப் போட்டிகள், காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள், 2011-ம் ஆண்டு முதலான உலக சாம்பியன்ஷிப் ஆகிய விளையாட்டுப் போட்டிகளிள் திறமையை வெளிப்படுத்துபவர்கள் மட்டுமே விருதுக்காக பரிசீலிக்கப்படுவார்கள்”
இவ்வாறு கூறினார் கிரிஷா. இந்நிலையில் விம்பிள்டன் டென்னிஸ் இரட்டையர் பட்டம் வென்ற சானியா மிர்சாவுக்கு வழங்கவிருக்கும் கேல் ரத்னா விருதுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.