

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவலை அதன் கேப்டன் மைக்கேல் கிளார்க் மறுத்துள்ளார். இது முற்றிலும் தவறானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி ஆஷஸ் தொடரை இங்கிலாந்திடம் இழந்ததால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. ரன் குவிக்க முடியாமல் தொடர்ந்து தடுமாறி வந்த ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் வரும் 20-ம் தேதி ஓவலில் தொடங்கவுள்ள ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியோடு ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் சிட்னி டெய்லி டெலகிராப் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், ஆஸ்திரேலிய அணியின் மூத்த வீரர்கள் இருவரின் மனைவிகளிடையே நீண்ட நாட்களாக மோதல் நிலவி வந்தது. அதுதான் அணியில் உள்ள வீரர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்படுவதற்கான காரணம். விக்கெட் கீப்பர் பிராட் ஹேடின் குடும்ப விஷயம் காரணமாக ஒரு போட்டியில் ஆடாதநிலையில் அடுத்த போட்டியில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அணியில் ஆரோக்கியமான சூழல் இல்லாமல் இருந்தது. அதேநேரத்தில் கேப்டன் கிளார்க் அணி வீரர்களுடன் ஒரே பஸ்ஸில் பயணிக்க மறுத்துள்ளார். சக வீரர்களுடன் அவர் சகஜமாக பழகவில்லை” என குற்றம்சாட்டியிருந்தது.
இதனால் கடும் கோபமடைந்துள்ள கிளார்க், ஊடகங்களின் குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்துள்ளார். அது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “அணியில் எந்த பிளவும் இல்லை. நான் விளையாடிய அணிகளில் தற்போதைய ஆஸ்திரேலிய அணியினர்தான் மிகவும் நெருக்கமாக இருக்கிறார்கள்” என்றார்.
வெவ்வேறு கார்களில் தனித்தனியாக சென்றதும், மனைவி மற்றும் தோழிகள்தான் கருத்து வேறுபாடு ஏற்பட காரணமா என கேட்டபோது, “அது முற்றிலும் தவறு. எனது அழகான மனைவி இல்லையென்றால் நான் டெஸ்ட் போட்டிகளில் 28 சதங்கள் அடித்திருக்க முடியாது. 10 சதங்கள் குறைவாகத்தான் அடித்திருப்பேன்” என்றார்.
-