

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டி கடந்த ஆண்டு தொடங்கப்பட்டபோது, சென்னை சார்பில் களமிறங்கிய சென்னையின் எப்.சி. அணியில் தமிழர்கள் யாரும் இல்லையே, கால்பந்துக்கு பெயர் பெற்ற சென்னையில் இருந்து ஒருவர்கூட அணியில் சேர்க்கப்படவில்லையே என சென்னை ரசிகர்களும், கால்பந்து ஆர்வலர்களும் ஆதங்கப்பட்டனர்.
ஆனால் இந்த முறை சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த டி.கணேஷ் மூலம் அந்த குறை தீர்ந்துள்ளது. மத்திய நடுகள வீரரான கணேஷின் ஆட்டத்தைப் பார்க்க வியாசர்பாடியில் உள்ள அவருடைய பெற்றோர்களும், உறவினர்களும், நண்பர்களும், அவருடன் விளையாடிய சக வீரர்களும், கால்பந்து ரசிகர்களும் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
24 வயதான கணேஷ் கால்பந்தில் இவ்வளவு தூரம் முன்னேறியதன் பின்னணியில் அவருடைய தந்தையின் தியாகமும், உழைப்பும் இருப்பதை மறந்துவிட முடியாது. கணேஷின் தந்தை தனபால் ஒரு பெயின்டர். பர்மாவில் கால்பந்து விளையாடியவரான தனபால், வறுமையில் வாடியபோதும் தனது மகன் கணேஷின் கால்பந்து ஆர்வத்துக்கு ஒருபோதும் குறுக்கே நின்றதில்லை.
மாறாக தன் மகனை தினமும் மைதானத்துக்கு அழைத்துச் சென்று விளையாட வைத்து அவருடைய தவறை சரி செய்திருக்கிறார். கடந்த ஐஎஸ்எல் போட்டியில் சென்னையில் நடை பெற்ற ஆட்டங்களைப் பார்க்க டிக்கெட் கிடைக்காமல் அவதிப்பட்ட கணேஷ், இந்த ஐஎஸ்எல் போட்டியில் சென்னையின் எப்.சி. அணிக்காக களமிறங்குகிறார். கணேஷின் கால்பந்து பயணம் பற்றி அவரிடம் சில கேள்விகள்.
கால்பந்து விளையாட்டில் காலடி வைத்தது பற்றி…
வியாசர்பாடி மக்களின் பிரதான விளையாட்டு கால்பந்துதான். அதற்கு நானும் விதிவிலக்கல்ல. கால்பந்தில் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்தபோது அப்பா வின் நண்பர்கள் சிலர் ஆலோ சனையின்பேரில் நெய்வேலியில் உள்ள எஸ்டிஏடி விளையாட்டு விடுதியில் சேர்ந்தேன். பின்னர் சாய் விளையாட்டு விடுதிக்கு இடம்பெயர்ந்தேன்.
சாய் அணிக்காக சென்னை லீக்கில் ஆடிய நான், சந்தோஷ் டிராபிக்கான தமிழக அணியில் இடம்பிடித்தேன். அதற்கான பயிற்சி முகாமில் இருந்தபோது புனே ஜூனியர் அணிக்காக ஆடும் வாய்ப்பைப் பெற்றேன். அதன்மூலம் தொழில்முறை வீரராக உருவெடுத்தேன். பின்னர் ஐ-லீக்கில் ஆடிய பிறகு, இப்போது சென்னையின் எப்.சி. அணிக்காக ஆடும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன்.
சென்னையின் எப்.சி. அணிக்கு தேர்வு செய்யப்பட்டபோது எப்படி உணர்ந்தீர்கள்?
கடந்த ஐஎஸ்எல் போட்டியை மைதானத்தில் கேலரியில் இருந்தும், தொலைக்காட்சியிலும் பார்த்து ரசித்தேன். ஆனால் இந்த முறை அதே ஐஎஸ்எல் போட்டியில் நான் ஒரு வீரராக களமிறங்குகிறேன் என்பது தெரிந்தபோது எனக்குள் ஏற்பட்ட மகிழ்ச்சியை சொல்ல வார்த்தைகள் போதாது. ஏனெனில் தொழில்முறை போட்டிகளில் சென்னையில் ஆடியதில்லை. ஐ-லீக் போட்டிகளில் ஆடியிருந் தாலும், அது சென்னையில் நடைபெற்றதில்லை.
ஆனால் ஐஎஸ்எல் போட்டி சென்னையில் நடைபெறுகிறது. எனது ஆட்டத்தைப் பார்க்க எனது குடும்பத்தினர், உறவினர்கள், நண் பர்கள், எங்கள் வியாசர்பாடியைச் சேர்ந்த மக்கள் என எல்லோரும் மைதானத்துக்கு வருவார்கள். நான் கால்பந்து விளையாடி எனது குடும்பத்தினர் நேரில் பார்த்த தில்லை. ஆனால் வரும் ஐஎஸ்எல் போட்டியில் அவர்கள் எனது ஆட்டத்தைப் பார்க்கவிருக்கிறார் கள். அவர்கள் முன்னிலையில் விளையாடும் அந்தத் தருணத் துக்காக காத்திருக்கிறேன்.
இந்த முறை உங்கள் ஆட்டத்தைப் பார்க்க நீங்கள் மைதானத்துக்கு அழைத்து வர விரும்பும் நபர் யார்?
என் அம்மாதான். ஏனெனில் என் அம்மாவுக்கு மைதானமெல்லாம் தெரியாது. இதுவரை எந்த விளையாட்டையும் அவர்கள் மைதானத்தில் வந்து பார்த்ததில்லை. எனது அம்மாவை அழைத்து வந்து நான் விளையாடுவதை பார்க்க செய்ய வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. அது இந்த முறை நிறைவேறும் என நம்புகிறேன்.
சென்னை அணியில் உங்களுக்குப் பிடித்த வீரர் யார்?
இலானோதான். ப்ரீ கிக், பெனால்டி கிக் போன்றவற்றை கோலாக்கும் இலானோவின் திறமை அசாத்தியமானது. அவருடைய ஆட்டத்தின் ஸ்டைல், கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கோலாக்கும் ஆற்றல் ஆகியவை எனக்குப் பிடிக்கும். இந்த முறை அவருடன் விளையாடவிருப்பதால் மிகுந்த உற்சாகமாக இருக்கிறேன். அவரிடம் இருந்து நிறைய ஆட்ட நுணுக்கங்களை கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.
கடந்த ஐஎஸ்எல் போட்டியில் மறக்க முடியாத ஆட்டம்…
சென்னையில் நடைபெற்ற சென்னை-கேரளா இடையிலான 2-வது சுற்று அரையிறுதி ஆட்டம்தான். கடைசி நிமிடத்தில் சென்னை அணி கோல் வாங்கி தோற்றதை ஒருபோதும் மறக்க முடியாது.
உங்களின் ரோல் மாடல் யார்?
முன்னாள் இந்திய கால்பந்து வீரரும், தமிழகத்தைச் சேர்ந்தவரு மான ராமன் விஜயன்தான் எனது ரோல் மாடல். நெய்வேலி விளையாட்டு விடுதியில் படித்துக் கொண்டிருந்தபோது ஒரு முறை எங்கள் விடுதிக்கு ராமன் விஜயன் வந்திருந்தார். அவர் மிகப்பெரிய வீரர், இந்தியாவுக்காக மட்டுமின்றி ஈஸ்ட் பெங்கால் உள்ளிட்ட முன்னணி அணிகளுக்காகவும் விளையாடியிருக்கிறார்.
அந்தப் போட்டியில் இவ்வளவு கோலடித்திருக்கிறார், இந்தப் போட்டியில் அவ்வளவு கோல் அடித்திருக்கிறார் என்று கூறினார்கள். அந்தத் தருணம்தான் அவரைப் போன்று நாமும் சிறந்த கால்பந்து வீரராக வேண்டும் என்ற வெறியை எனக்குள் ஏற்படுத்தியது. அதனால்தான் இன்று இந்தியாவுக்காகவும், சென்னையின் எப்.சி. அணிக்காகவும் விளையாடும் அளவுக்கு உயர்ந்திருக்கிறேன்.
இத்தாலியின் பெருஜியாவில் நடைபெறவுள்ள பயிற்சி முகாமில் பங்கேற்கவிருப்பது பற்றி...
என்னைப் போன்ற இளம் வீரர்களுக்கு நிச்சயம் அந்த பயிற்சி முகாம் உதவியாக இருக்கும் என நம்புகிறேன். அந்த பயிற்சி முகாமில் திறமையை நிரூபித்து அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறேன். எனது அணிக்காக முழுத்திறமையை யும் வெளிப்படுத்தி ஆட முயற்சிப்பேன்.
இந்திய அணியில் இடம்பெற்ற தருணம் பற்றி…
இந்தியாவுக்காக ஆட வேண் டும் என்பது இளம் வயது கனவு. இந்திய அணியில் நான் முதல்முறையாக இடம் பிடித்தபோது ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது என்றார்.
2011-ல் தொழில்முறை வீரராக உருவெடுத்த கணேஷ், ஐ-லீக் போட்டிகளில் புனே எப்.சி., பெய்லன் ஏரோஸ் அணிகளுக்காக ஆடியிருக்கிறார். இந்திய ஜூனியர் அணிக்காக சில ஆட்டங்களில் விளையாடியுள்ள கணேஷ், இந்திய சீனியர் அணிக்காக 3 ஆட்டங்களில் ஆடியிருக்கிறார்.