

விராட் கோலி போன்ற வல்லமைமிக்க குணம் கொண்டவர்களால், அணித் தலைவர் பதவியின் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள முடியாது என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் நாசர் ஹுசைன் கூறியுள்ளார்.
சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில் இங்கிலாந்து அணிக்கு இருப்பதைப் போன்றே இந்திய அணியிலும், டெஸ்ட், ஒருநாள், டி20 கு என தனித்தனியாக தலைவர்கள் செயல்பட்டால் எப்படி இருக்கும் என்று அவரிடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதில் கூறிய ஹுசைன், "அது குணத்தைப் பொருத்து உள்ளது. விராட் கோலி வல்லமையான/கம்பீரமான குணம் கொண்டவர். அவரால் கேப்டன் என்ற அதிகாரத்தை யாரிடமும் பகிர முடியாது. அதே நேரத்தில் இங்கிலாந்து அணியில் மார்கன், ரூட் என இரண்டு நிதானமான குணம் கொண்டவர்கள் உள்ளனர். ஆனால் இரண்டு மூன்று கேப்டன்கள் இருப்பது நல்ல யோசனை தான்.
மேலும் பயிற்சியாளர்களுக்கு நிறைய கடமை இருக்கிறது. எனவே இரண்டு மூன்று பயிற்சியாளர்கள் இருந்தால் சரியாக இருக்கும் என நினைக்கிறேன். இந்திய அணியில் அவர்கள் சரியாக செய்யாத விஷயம் வீரர்களின் தேர்வு. நிறைய சிறந்த பேட்ஸ்மேன்கள் இருந்தும் 4-ம் நிலையில் ஆட எந்த வீரரையும் நிலையாக வைத்திருக்க முடியவில்லை. நியூஸிலாந்தைப் போன்ற நிலை இந்தியாவுக்கு இல்லை. இந்தியாவில் நிறைய திறமைகள் உள்ளன. இரண்டு போட்டிகளில் ஆடவில்லை என்றால் புதிதாக ஒரு வீரர் வந்துவிடுவார். அதன் பிறகு இன்னொருவர்" என்று கூறியுள்ளார்.
உலகக் கோப்பை அரையிறுதியில் வீரர் தேர்வில் சொதப்பியது போல இந்திய அணி நிர்வாகம் அடிக்கடி சொதப்புகிறது என்றும் நாசர் ஹுசைன் குறிப்பிட்டுள்ளார்.