

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஹோல்டிங், இந்திய அணியின் ஜஸ்ப்ரித் பும்ராவின் பந்துவீச்சு குறித்துப் பாராட்டிப் பேசியுள்ளார்.
இந்திய அணியின் இளம் தலைமுறை கிரிக்கெட் வீரர்களில் ஜஸ்ப்ரித் பும்ரா குறைந்த காலகட்டத்தில் தனது திறமையால் தனி கவனம் பெற்றுள்ளார். குறிப்பாக டி20 போட்டிகளில் பும்ராவின் பந்துவீச்சை எதிர்கொள்வது பல பேட்ஸ்மேன்களுக்குக் கடினமாகவே உள்ளது. சமீபத்தில் கூட அர்ஜுனா விருதுக்கான பரிந்துரையில் பிசிசிஐ பும்ராவின் பெயரைச் சேர்த்துள்ளது.
கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக அறியப்படுபவர், மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் ஹோல்டிங். சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ள ஹோல்டிங் பும்ராவின் பந்துவீச்சு குறித்துப் புகழ்ந்து பேசியுள்ளார்.
"பும்ரா வேகமாக வீசுகிறார். சரியான இடத்தில் பந்தை இறக்குகிறார். வேகமாக வீசி பந்தை கூடுதலாக எகிற வைப்பவர்கள், பந்தை லாவகமாகக் கொண்டு செல்பவர்கள் பற்றி எப்போதுமே பாராட்டிப் பேசுவோம். மால்கம் மார்ஷல் அப்படித்தான். மகிச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர். அவர் வீசும்போது பந்து சறுக்கிக் கொண்டு வரும்.
பும்ராவின் வீச்சில் பந்து கூடுதலாக எகிறும், அது ஆடுபவர்களுக்கு நிறையப் பிரச்சினைகளை உண்டாக்கும். அதுவும் குறைந்த தூரத்திலிருந்து வேகமாக ஷார்ட் பால் வீசும்போது, அது பேட்ஸ்மேனின் மனதில் பல கேள்விகளை உருவாக்கும்.
ஆனால் பும்ராவிடம் எனக்கிருக்கும் பிரச்சினை என்னவென்றால் அப்படிக் குறைந்த தூரம் ஓடி வந்து அதிக ஆற்றலைப் பயன்படுத்தி வீசுவதுதான். அதை அந்த உடல் எவ்வளவு நாட்கள் தாங்கும் என்று யோசிக்கிறேன். இங்கிலாந்தில் அவரை சந்திக்கும் போது இதை நான் அவரிடமே சொன்னேன். அது மனித உடல். இயந்திரம் அல்ல" என்று ஹோல்டிங் குறிப்பிட்டுள்ளார்.