Published : 14 May 2020 01:43 PM
Last Updated : 14 May 2020 01:43 PM

1999 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடங்கிய நாள்: இருபதாம் நூற்றாண்டின் கடைசி கிரிக்கெட் உலகக் கோப்பை

கிரிக்கெட் உலகக் கோப்பை வரலாற்றில் பல சிறப்புகளைக் கொண்ட 1999 உலகக் கோப்பை 1999 மே 14 அன்று லண்டனில் தொடங்கியது. கிரிக்கெட் வரலாற்றில் ஏழாவது உலகக் கோப்பை இது. கடந்துவிட்ட 21 ஆண்டுகளில் கிரிக்கெட் விளையாட்டு பல விதமான மாற்றங்களுக்கு ஆளாகியிருக்கும் நிலையில் இருபதாம் நூற்றாண்டின் கடைசி உலகக் கோப்பையின் நினைவுகளைக் கொஞ்சம் அசைபோடலாம்.

உலகக் கோப்பை வரலாறு

பதினாறாம் நூற்றாண்டிலிருந்து விளையாடத் தொடங்கப்பட்ட கிரிக்கெட் விளையாட்டு பல வடிவங்களை எடுத்து வளர்ந்து வந்துள்ளது. சர்வதேச அளவில் குறிப்பிட்ட ஓவர்கள் கணக்கைக் கொண்டு ஆடப் படும் ஒருநாள் கிரிக்கெட்டின் வயது இப்போதுதான் ஐம்பதை நெருங்குகிறது. 1971 ஜனவரி 5 அன்றுதான் முதல் சர்வதேச ஒருநாள் போட்டி விளையாடப்பட்டது. ஒருநாள் போட்டிகள் தொடங்கப்பட்ட பிறகுதான் அதுவரை இரண்டு அணிகளுக்கு இடையில் மட்டுமே நடந்து வந்த கிரிக்கெட் பல நாடுகள் இணைந்து விளையாடும் டோர்னமெண்ட்கள் நடத்தப்படும் விளையாட்டாக மாறியது. இந்த சர்வதேச டோர்னமெண்டுகளில் முக்கியமானவை 50 ஒவர் உலகக் கோப்பைகள்.

1975இல் கிரிக்கெட் விளையாட்டின் தாயகமான இங்கிலாந்தில் முதல் உலகக் கோப்பை நடைபெற்றது. எட்டு அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டித் தொடரில் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவும் மேற்கிந்திய தீவுகளும் மோதின. மே.இ.தீவுகள் வெற்றிபெற்றது.

அடுத்த இரண்டு உலகக் கோப்பைகளும் (1979, 1983) இங்கிலாந்தில் நடைபெற்றன. அதன் பிறகு 16 ஆண்டுகள் கழித்து 1999இல்தான் இங்கிலாந்தில் கிரிக்கெட் உலகக் கோப்பை நடைபெற்றது. இது நடந்த இருபது ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு இங்கிலாந்தில் உலகக் கோப்பை நடைபெற்றது. இதில்தான் முதல் முறையாக இங்கிலாந்து கோப்பையைக் கைப்பற்றியது. இன்றுவரை நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் கிரிக்கெட் உலகக் கோப்பை நடத்தப்படுகிறது.

1999 கோப்பையின் கதை

கிரிக்கெட் விளையாட்டு இருபதாம் நூற்றாண்டில்தான் இந்தியா உட்பட பல உலக நாடுகளுக்குப் பரவியது. அந்த நூற்றாண்டின் கடைசி உலகக் கோப்பை என்ற வகையில் 1999 உலகக் கோப்பை முக்கியமானதாகும்.

1999 உலகக் கோப்பையில் 12 அணிகள் பங்கேற்றன. கால் இறுதி என்று அழைக்கப்படும் இரண்டாம் சுற்று ஆட்டங்கள் சூப்பர் சிக்ஸ் போட்டிகளாக நடத்தப்பட்டன. இந்தச் சுற்றுக்குத் தகுதி பெறும் ஆறு அணிகளில் முதல் நான்கு இடங்களைப் பெறும் அணிகள் அரை-இறுதிக்கு முன்னேறின.

இங்கிலாந்து, இந்தியா, தென் அமெரிக்கா, இலங்கை, ஜிம்பாப்வே, கென்யா ஆகிய நாடுகள் A பிரிவிலும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், மே.இ.தீவுகள், வங்கதேசம், ஸ்காட்லாந்து ஆகியவை B பிரிவிலும் இடம்பெற்றன. இரண்டு பிரிவிகளிலும் மூதல் மூன்று இடங்களைப் பெற்ற அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு தகுதிபெற்றன. முதல் சுற்று, சூப்பர் சிக்ஸ், அரையிறுதி, இறுதிப் போட்டி என மொத்தம் 42 போட்டிகள் நடைபெற்றன. பெரும்பாலான போட்டிகள் இங்கிலாந்து மைதானங்களிலும் சில போட்டிகள் ஸ்காட்லாந்து, அயர்லாந்து, வேல்ஸ் ஆகிய பிரிட்டனுக்கு உட்பட்ட மற்ற பகுதிகளில் உள்ளமைதானங்களிலும் நடைபெற்றன.

உலகக் கோப்பையின் முதல் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் வழக்கம்போல் நடப்பு உலக சாம்பியனான இலங்கை, போட்டியை நடத்தும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்தப் போட்டியில் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றிபெற்றது. ஆனால் இவ்விரண்டு அணிகளுமே முதல் சுற்றிலேயே போட்டியை விட்டு வெளியேறிவிட்டன.

பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, ஜிம்பாப்வே, இந்தியா ஆகிய ஆறு அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்குச் சென்றன. ஆம் இந்தியா கடைசி இடத்தில் இருந்தது. சூப்பர் சிக்ஸ் தொடக்கத்தில் முதல் நான்கு இடங்களில் இருந்த அணிகளே அரையிறுதிக்குச் சென்றன.

சுவாரஸ்யமற்ற இறுதிப் போட்டி

1992இல் முதல் முறையாக உலகக் கோப்பையை வென்றிருந்த பாகிஸ்தானும் 1987இல் முதல் முறையாக கோப்பையை வென்றிருந்த ஆஸ்திரேலியாவும் இறுதிப் போட்டிக்குச் சென்றன. இதற்கு முந்தைய உலகக் கோப்பை இறுதிப் போட்டிகள் அனைத்தும் கடைசி கட்டம் வரை பரபரப்பாக இருந்துவந்தன. ஆனால் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 1999 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் தொடக்கத்திலிருந்தே வெற்றிவாய்ப்பு ஒரே அணியின் வசம் இருந்தது.

வாசிம் அக்ரம், ஷோயப் அக்தர் போன்ற அதிவேகப் பந்துவீச்சாளர்கள், சயீத் அன்வர், இன்சமாம் உல் ஹக் போன்ற அசாத்திய மட்டையாளர்கள், அப்துல் ரசாக் போன்ற சிறந்த ஆல்ரவுண்டர்களுடன் அதுவரை அந்த உலக் கோப்பையில் முன்னணி வகித்த பாகிஸ்தான் இறுதிப் போட்டியில் பெரிதும் சொதப்பியது. முதலில் பேட்டிங் செய்து 132 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இரண்டாவதாக விளையாடிய ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் அந்த ஸ்கோரை அடித்து கோப்பையைக் கைப்பற்றியது.

ஆஸ்திரேலியா ஆதிக்கத்தின் தொடக்கம்

கிரிக்கெட் உலகில் ஆகச் சிறந்த அணியாக ஆஸ்திரேலியா உருவானதன் தொடக்க ஆண்டுகளில் இந்த உலகக் கோப்பை நடைபெற்றது. அணித் தலைவரும் சிறந்த ஆல்ரவுண்டருமான ஸ்டீவ் வா, மார்க் வா, ஆடம் கில்கிறிஸ்ட், ரிக்கி பாண்டிங், மைக்கேல் பெவன் போன்ற சிறந்த மட்டையாளர்கள், கிளென் மெக்ரா, ஷேன் வார்ன் உள்ளிட்ட தலைசிறந்த பந்துவீச்சாளர்கள் என எதிரிகளை நடுங்க வைக்கும் அணியாக ஆஸ்திரேலியா உருவாகியிருந்தது. இந்தக் கோப்பை வெற்றி அதற்கு அடுத்த பல ஆண்டுகளுக்கு கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய ஆதிக்கத்துக்கு கட்டியம் கூறியது. 2003, 2007 என அடுத்த இரண்டு முறையும் கோப்பையை வென்று தொடர்ந்து மூன்றுமுறை உலகக் கோப்பையை வென்ற சாதனையைப் படைத்தது. 2015 உலகக் கோப்பையையும் வென்றது.

லவையான உணர்வைத் தந்த இந்தியா

இந்தியாவைப் பொறுத்தவரை இந்த உலகக் கோப்பைக்கு வலுவான அணியை அனுப்பியது. நம்பிக்கை நட்சத்திரமான சச்சின் டெண்டுல்கர் நல்ல ஃபார்மில் இருந்தார். செளரவ் கங்குலி, ராகுல் திராவிட், அணித் தலைவர் முகமது அசாருதீன், அஜய் ஜடேஜா, ஆல் ரவுண்டர் ராபின் சிங், பந்து வீச்சாளர்கள் அனில் கும்ப்ளே, ஜவகல் ஸ்ரீநாத், வெங்கடேஷ் பிரசாத் என அனைவரும் நம்பிக்கை அளித்தனர். தென் ஆப்ரிக்கா, ஜிம்பாப்வேயை எதிர்கொண்ட முதல் இரண்டு போட்டிகளில் தோற்று அதிர்ச்சியடைய வைத்தனர் இந்தியர்கள். ஆனால் அடுத்ததாக கென்யா, இலங்கை, இங்கிலாந்து ஆகிய அணிகளை வென்று சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு தகுதி பெற்று மானத்தைக் காப்பாற்றிக்கொண்டது இந்திய அணி. சூப்பர் சிக்ஸில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுடன் தோற்றதால் அரையிறுதிக்கு போகும் தகுதியை இழந்தது இந்திய அணி. இருந்தாலும் அடுத்ததாக நடைபெற்ற பாகிஸ்தானுடனான போட்டியில் 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இதுவரை உலகக் கோப்பையில் இந்தியா பாகிஸ்தானிடம் தோற்றதேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தலைநிமிர வைத்த திராவிட்

தனிப்பட்ட வீரர்களின் சாதனைகளும் இந்தியர்களை மகிழ்வித்தன. ராகுல் திராவிட் 461 ரன்கள் அடித்து 1999 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் அடித்த மட்டையாளர் என்ற புகழைபெற்றார். இதில் கென்யாவுடனும் இலங்கையுடனும் முறையே 104, 145 என அடுத்தடுத்த போட்டிகளில் இரண்டு சதங்களை அடித்தார். அதுவரை நிதானமாக ஆட வேண்டிய டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டுமே பொருத்தமானவர் என்று திராவிடை விமர்சித்து வந்தவர்கள் வாயடைத்துப் போனார்கள். கென்யாவுடனான போட்டியில் தந்தையின் மறைவுக்குப் பிறகு வந்து விளையாடிய சச்சின் டெண்டுல்கர் 140 ரன்களை அடித்தார். இலங்கையுடனான போட்டியில் கங்குலி 183 ரன்களை விளாசினார். ஒருநாள் போட்டிகளில் அதுவே அவருடைய அதிகபட்ச ஸ்கோராகும். ஆஸ்திரேலியாவுடனான போட்டியில் அஜய் ஜடேஜா சதமடித்தார். பாகிஸ்தானுடனான போட்டியில் வெங்கடேஷ் பிரசாத் 17 ரன்கள் மட்டுமே கொடுத்து ஐந்து விக்கெட்களை வீழ்த்தினார். ஒருநாள் போட்டிகளில் அதுவே அவருடைய மிகச் சிறந்த பந்துவீச்சு.

க்ளூஸ்னர் எனும் சாகசக்காரன்

இந்த உலகக் கோப்பையில் உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தவர் தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டரான லான்ஸ் க்ளூஸ்னர். ஒவ்வொரு போட்டியிலும் ஐந்து விக்கெட்கள் பறிபோனபின் களமிறங்கி நான்குகளும் ஆறுகளுமாக விளாசி ஸ்லாக் ஓவர் என்று சொல்லப்படும் கடைசி ஓவர்களில் எப்படி அடித்து ஆட வேண்டும் என்று பாடம் எடுத்தார். அனைத்துப் போட்டிகளிலுமே தென் ஆப்பிர்க்க அணி நல்ல ஸ்கோரைப் பெறுவதற்கு முக்கியப் பங்கு வகித்தார். பந்துவீச்சிலும் முக்கியமான விக்கெட்களை வீழ்த்தினார். மற்ற பல தென் ஆப்ப்ரிக்க வீரர்களைப் போலவே அசாத்தியமான ஃபீல்டராகவும் இருந்தார். இந்தக் கோப்பையில் தென் ஆப்பிரிக்கா விளையாடிய ஒன்பது போட்டிகளில் நான்கில் ஆட்டநாயகன் விருதைப் பெற்றார். இரண்டு அரை சதங்கள் உட்பட 250 ரன்களைக் குவித்ததோடு 17 விக்கெட்களையும் வீழ்த்தி தொடர் நாயகன் விருதைப் பெற்றார்.

வரலாற்றில் இடம்பெற்ற அரையிறுதிப் போட்டி

ஆஸ்திரேலியாவுக்கும் தென் ஆப்ரிக்காவுக்கும் இடையிலான அரையிறுதிப் போட்டி ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத போட்டிகளில் ஒன்றாக அமைந்தது. தோல்வியின் விளிம்பில் இருந்து அணியை மீட்டு வந்து கிட்டத்தட்ட வெற்றிக்கு அருகே கொண்டுவந்தார். ஒன்பது விக்கெட்கள் வீழ்ந்திருந்த நிலையில் ஆட்டம் டை ஆகியிருந்தது. ஒரு ரன் அடித்தால் 15 தடைக் காலத்தைக் கடந்து 1992இல் முதல் முறையாக உலகக் கோப்பையில் விளையாடிய தென் ஆப்ரிக்கா 1999 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குச் சென்றுவிடும் என்ற நிலை இருந்தது.

அப்போது க்ளூஸ்னரும் களத்தில் இருந்தார். ஆனால் ரன் ஓடிவரச் சொல்லி இவர் கொடுத்த தவறான அழைப்பால் எதிரில் இருந்த ஆலன் டொனால்ட் ரன் அவுட் ஆனார். போட்டி டையில் முடிவடைந்து முந்தைய போட்டிகளில் வென்றிருந்த ஆஸ்திரேலியா இறுதுப் போட்டிக்குத் தகுதி பெற்றது. தென் ஆப்பிரிக்க அணி வீரர்களும் ரசிகர்களும் கண்ணீர் சிந்தினர். இந்தப் போட்டி கிரிக்கெட் வரலாற்றில் முக்கிய இடம்பெற்றது.

இந்த 20 ஆண்டுகளில் கிரிக்கெட் பல மாற்றங்களைக் கண்டுவிட்டது. 50 ஓவர் கிரிக்கெட்டில் 300 என்பது ஒரு அணியின் மிகப் பெரிய ஸ்கோராக இருந்தது. இப்போது 400ஐக் கடப்பதே சர்வசாதாரணமாகிவிட்டது. தனிநபர் ஸ்கோர்கள் 200களைக் கடப்பதும் சாதாரணமாகிவிட்டது. 20-20 என்னும் புதிய 20 ஓவர் வடிவம் கிரிக்கெட்டை பல வகைகளில் புரட்டிப்போட்டுவிட்டது. இருந்தாலும் இப்படி பல சிறப்புகளைக் கொண்ட 1999 உலகக் கோப்பை கிரிக்கெட் ரசிகர்களின் மனங்களில் என்றென்றும் நீங்காத இடம்பிடித்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x