

ஓவலில் நடைபெற்று வரும் கடைசி ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் 3-ம் நாளான இன்று இங்கிலாந்து தன் முதல் இன்னிங்சில் 149 ரன்களுக்குச் சுருண்டது, இதனையடுத்து 332 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா, இங்கிலாந்தை பாலோ ஆன் ஆட பணித்தது.
ஃபாலோ ஆனிலும் லித் விக்கெட்டை உடனடியாக பீட்டர் சிடிலிடம் இழந்தது இங்கிலாந்து, தற்போது 25/1 என்ற நிலையில் அலிஸ்டர் குக், இயன் பெல் ஆடி வருகின்றனர்.
நேற்று 481 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆட்டமிழந்தவுடன், இங்கிலாந்து களமிறங்கியது. நேற்றைய ஆட்ட முடிவில் 8 விக்கெட்டுகளை 107 ரன்களுக்கு இழந்தது இங்கிலாந்து, காரணம் பேட்டிங்கில் சொதப்பிய ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ், பந்து வீச்சில் 7 ஓவர்களில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இங்கிலாந்தின் முதுகெலும்பை காலி செய்தார். பீட்டர் சிடிலும் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற இங்கிலாந்து விக்கெட்டுகள் மடமடவென சரிந்தன.
ஸ்டீவ் ஸ்மித் 143 ரன்களை எடுக்க, மிட்செல் ஸ்டார்க் அதிரடி அரைசதம் காண ஆஸ்திரேலியா 481 ரன்களை எடுத்தது. அதன் பிறகு களமிறங்கிய இங்கிலாந்து தேநீர் இடைவேளைக்கு சற்று முன் நேதன் லயனின் அருமையான லயனுக்கு அலிஸ்டர் குக்கை பவுல்டு மூலம் இழந்தது.
மோசமான ஆஷஸ் தொடரைச் சந்தித்த லித் 19 ரன்களில் பீட்டர் சிடில் பந்தை புல் ஷாட்டை தவறாக ஆடி அருகிலேயே ஸ்டார்க்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
மீண்டும் ஆபத்பாந்தவன் ஜோ ரூட் களமிறங்கினார், ஏற்கெனவே 2 சதங்களுடன் ஆஸ்திரேலியாவை பாடுபடுத்தி வந்த இவர் இறங்கியவுடன் கிளார்க் அருமையாக பீல்ட் செட்டப்பை மாற்றினார், மிட்செல் மார்ஷைக் கொண்டு வந்தார், இதனால் 6 ரன்களில் மார்ஷ் பந்தில் பின்னால் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இயன் பெல் 10 ரன்களில் பீட்டர் சிடிலின் அருமையான பந்துக்கு பவுல்டு ஆனார். பந்து சற்றே நின்று ஸ்விங் ஆக பெல்லின் மட்டையை கடந்து கில்லியை தட்டியது.
பேர்ஸ்டோ, ஜான்சனின் பவுன்சருக்கு டீப் ஸ்கொயர் லெக்கில் லயனிடம் கேட்ச் கொடுத்து 13 ரன்களில் வெளியேறினார். கிறிஸ் பட்லருக்கு கிளாசிக் ஆஃப் ஸ்பின் பந்தை வீசினார் லயன், அவர் முன்னால் வந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் ஆன பந்தை ஆட, பந்து மட்டைக்கும் கால்காப்புக்கும் இடையே புகுந்து லெக் அண்ட் மிடிலைத்தாக்கியது, 1 ரன்னில் பட்லர் அவுட்.
ஆக்ரோஷ பென் ஸ்டோக்ஸ் 2 பவுண்டரிகளை அடித்து 15 ரன்களில் புல் ஷாட்டில் நெவிலிடம் கேட்ச் கொடுத்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதே ஓவரில் ரன் எடுக்காமல் பிராட் எட்ஜ் செய்து ஸ்டோக்ஸ் பின்னாலேயே நடையைக் கட்டினார். நேற்று 107/8 என்று முடிந்தது
மார்க் உட், மொயீன் அலி இணைந்து ஸ்கோரை 92/8 லிருந்து 149 வரை இன்று உயர்த்தினர். மார்க் உட் இன்று ஜான்சனின் பவுன்சரை ஹூக் செய்து மிட்விக்கெட்டில் பிடிபட்டு 24 ரன்களில் வெளியேறினார்.
மொயீன் அலி அடுத்த பந்தே ஜான்சன் பந்தை நிக் செய்து 30 ரன்களில் வெளியேறினார். இங்கிலாந்து 149 ரன்களுக்குச் சுருண்டது. இதனையடுத்து 332 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா இங்கிலாந்துக்கு பாலோ ஆன் கொடுத்தது.
ஆஸ்திரேலியா தரப்பில் ஜான்சன், மார்ஷ் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, சிடில், லயன் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். சிடிலை முந்தைய டெஸ்ட்களிலேயே அணியில் சேர்த்திருக்கலாம் என்ற அளவுக்கு நல்ல வேகத்துடன் துல்லியமாக வீசினார். 2-வது இன்னிங்ஸிலும் முதல் விக்கெட் அவருடையதே.
முதல் நாள் பிட்சில் கொஞ்சம் புல் இருந்தாலும், ஈரப்பதம் இருந்துள்ளது, இதில் பேட்டிங்கையே இங்கிலாந்து தேர்வு செய்திருக்க வேண்டும், காரணம், அந்த நிலையில் பவுலிங்கில் பெரிய தாக்கம் இருக்காது, பிறகு நல்ல வெயில் அடித்து பிட்ச் காய்ந்து இறுகியதால் ஆஸ்திரேலியா பிட்ச் போல் ஆனது, கிட்டத்தட்ட முதல் நாள் பிரிஸ்பன் பிட்ச் போல் தற்போது உள்ளது ஓவல் பிட்ச், இதுவே இங்கிலாந்தின் துன்பத்துக்கு காரணம்.