Last Updated : 11 May, 2020 09:20 PM

 

Published : 11 May 2020 09:20 PM
Last Updated : 11 May 2020 09:20 PM

விராட் கோலியுடனான மோதல்: நினைவுகூர்ந்த கெஸ்ரிக் வில்லியம்ஸ்

விராட் கோலியுடனான மோதல் குறித்து மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கெஸ்ரிக் வில்லியம்ஸ் பேசியுள்ளார்.

2017-ம் ஆண்டு ஜமைக்காவில் நடந்த ஆட்டத்தில் விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்திய கெஸ்ரிக் வில்லியம்ஸ், நோட்டுப் புத்தகத்தில் பெயரை எழுதி அடிப்பதைப் போல சைகை செய்து கோலியை வழியனுப்பி வைத்தார். களத்தில் ஆக்ரோஷத்துக்குப் பெயர் போன விராட் கோலி இதை எளிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

பின் 2019-ம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகள் அணி, இந்தியாவில் டி20 தொடர் ஆடியபோது, கடைசி போட்டியில் வில்லியம்ஸின் பந்துவீச்சை கோலி சிதறடித்தார். அப்போது வில்லியம்ஸின் நோட்டுப் புத்தகக் கொண்டாட்டத்தை கோலி செய்து காட்டி பதிலடி கொடுத்தார். இந்த இரண்டு சம்பவங்கள் குறித்து வில்லியம்ஸே தற்போது பேசியுள்ளார்.

"ஜமைக்காவில் நான் முதன் முதலில் விராட் கோலியிடம்தான் அந்த நோட்டுப் புத்தகக் கொண்டாட்டத்தை ஆரம்பித்தேன். அது எனக்குப் பிடித்ததால், என் ரசிகர்களுக்காக நான் அதை செய்தேன். ஆனால், கோலி அதை அப்படி எடுத்துக் கொள்ளவில்லை. ஆட்டம் முடிந்ததும் அணியினரிடம் கை குலுக்கச் சென்றேன். அவர் நல்ல பந்துவீச்சு என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார். அவர் கடுமையாக நடந்து கொள்ளவில்லை. ஆனால் அதோடு எங்கள் பேச்சு முடிந்தது.

2019 டி20 தொடர் 3-வது போட்டியின் போது கோலி ஆடக் களமிறங்கியதுமே என்னிடம் நேராக வந்தார். அந்த நோட்டுப் புத்தகக் கொண்டாட்டம் இன்று இங்கு வேலை செய்யாது. அதற்கு வாய்ப்பு வராது என்பதை நான் உறுதி செய்கிறேன் என்று என்னிடம் சொன்னார். அப்போதிலிருந்து நான் பந்துவீச வரும்போது ஒவ்வொரு பந்துக்கும் ஏதாவது சொல்லிக் கொண்டே இருந்தார்.

நான், நண்பா, வாயை மூடி, பேட்டிங் ஆடு. நீ பேசுவது குழந்தைத்தனமாக உள்ளது என்றேன். ஆனால் அவர் காதில் விழுந்ததெல்லாம் வாயை மூடு, ஆடு என்பது மட்டுமே. குழந்தைத்தனம் என்பது நான் பின்னால் நடந்துகொண்டே பேசியதால் அவர் காதில் விழவில்லை. அவ்வளவுதான் நான் சொன்னேன். ஆனால் அவர் பேசிக் கொண்டே இருந்தார்.

அந்த ஆட்டத்தில் என் பந்துவீச்சை அடித்து நொறுக்கினார். நான் குழம்பிவிட்டேன். ஏனென்றால் அவர் பேச்சின் மூலம் என் தலைக்குள் உட்கார்ந்து விட்டார். எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்துக்கொண்டே இருந்தேன். ஆனால் சரியாகவில்லை. அதனால்தான் அவரால் அன்று என் பந்துவீச்சை விளாச முடிந்தது" என்று வில்லியம்ஸ் கூறினார்.

அந்தப் போட்டியில் 50 பந்துகளில் 94 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த கோலி, இந்திய அணி கோப்பையை வெல்லவும் காரணமாக இருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x