Last Updated : 28 May, 2014 10:00 AM

 

Published : 28 May 2014 10:00 AM
Last Updated : 28 May 2014 10:00 AM

தலையெழுத்தைத் தீர்மானித்த ஒரு பந்து

ஜேம்ஸ் ஃபாக்னரால் அந்தப் பந்தைச் சுலபத்தில் மறக்க முடியாது. பதினைந்தாவது ஓவரின் நான்காவது பந்து அது. அதில் பவுண்டரியைத் தவிர்த்தால் ராஜஸ்தான் போட்டியில் தோற்றாலும் அடுத்த சுற்றுக்கு முன்னேறிவிடும். மைதானம் முழுவதும் பரபரப்பு தொற்றிக்கொள்ள, பேட் செய்வதற்காக களமிறங்குகிறார் ஆதித்ய தாரே.

சந்திக்கும் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டினால்தான் மும்பை அடுத்த சுற்றுக்குப் போக முடியும் என்ற நெருக்கடியில் தாரே நிற்கிறார். இந்தப் பதற்றம் பெவிலியனிலும் பிரதிபலிக்கிறது. மும்பை இந்தியன்ஸ் ஆலோசகர் சச்சின் டெண்டுல்கரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆலோசகர் ராகுல் திராவிடும் பரபரப்பாகக் காணப்பட்டார்கள். ஆட்டத்தின் ஏற்ற இறக்கங்கள் அவர்கள் முகங்களிலும் பிரதிபலித்தன.

ஆண்டர்சன் ருத்ரதாண்டவம்

190 என்னும் இலக்கை 14.3 ஓவரில் அடிக்க வேண்டும் என்னும் கட்டாயத்தில் மும்பை களம் இறங்கியது. அப்போதுதான் அவர்களது நிகர ரன் விகிதம் உயர்ந்து ராஜஸ்தானைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும். அதாவது, வென்றால் மட்டும் போதாது, ஒரு ஓவருக்கு 13 ரன்னுக்குச் சற்று அதிகமாக அடிக்க வேண்டும்.

மும்பை அணி தொடக்கத்திலிருந்தே 14.3 ஓவரைக் குறிவைத்துத்தான் ஆடியது. கோரே ஆண்டர்சனும் மைக்கேல் ஹஸியும் சீராக ஆடிக்கொண்டிருந்தார்கள்.

ஹஸிக்குப் பின்பு வந்த கிரண் பொல்லார்டும் ரோஹித் ஷர்மாவும் நிலைத்து நிற்கவில்லை. ஆனால் அம்பட்டி ராயுடுவும் ஆண்டர்சனும் இலக்கை நோக்கி வேகமாக அணியைக் கொண்டுவந்தார்கள். சிக்ஸர்கள் பறந்தன. பவுண்டரிகள் சீறின. ராஜஸ்தான் அணித் தலைவர் ஷேன் வாட்சனின் முகத்தில் அனல் வீசியது. ஒன்பது பந்துகளில் 20 ரன் எடுக்க வேண்டும் என்னும் நிலை உருவானது. 14-ம் ஓவரை பிரவீண் தாம்பே வீசினார். 11 ரன்கள் எடுக்கப்பட்டன. இன்னும் மூன்று பந்துகளில் 9 ரன்கள். பந்து வீசுபவர்

ஃபாக்னர். 43 பந்துகளில் 94 ரன் எடுத்திருந்த ஆண்டர்சன், ஃபாக்னரை எதிர்கொள்கிறார். முதல் பந்தில் அவரால் ஒரு ரன்தான் எடுக்க முடிந்தது. அடுத்த பந்து ‘என்னை அடி, என்னை அடி’ என்று கதறியபடி கால் திசையில் ஃபுல் டாஸாக வந்தது. ராயுடு மட்டையைச் சுழற்றினார். சிக்ஸருக்குப் பறந்தது. அடுத்த பந்தில் 2 ரன்கள் எடுக்க வேண்டும். அளவு குறைவான பந்து. ராயுடு கட் செய்ய முயன்றார். பந்து சரியாகப் படவில்லை. ஒரு ரன் எடுத்தார்கள். அடுத்த ரன்னுக்கு வாய்ப்பில்லை என்றாலும் வேறு வழியில்லாமல் ஓட, ராயுடு ரன் அவுட்.

பரபரப்பு

ராயுடு மைதானத்தில் மண்டியிட்டுச் சரிந்தார். ராஜஸ்தான் வீரர்கள் கொண்டாட ஆரம்பித்தார்கள். ஆனால் நடுவர்கள் சொன்ன சேதி வேறாக இருந்தது. நிகர ரன் விகிதம் ஆட்டம் முடிந்த பிறகு கணக்கிடப்படுவது. ஆட்டம் முடிய இன்னும் ஒரு ரன் எடுக்க வேண்டும் என்பதால் இப்போதே கணக்கிட முடியாது என்பதே நிகர ரன் விகிதம் குறித்த கணக்கு. ராஜஸ்தான் வீரர்களின் முகங்களில் மீண்டும் கவலை குடிகொண்டது.

ராயுடுவின் இடத்தில் புதிய மட்டையாளர் தாரே நிற்கிறார். பவுண்டரி கொடுக்காமல் இருந்தால் போதும். ஏனென்றால் ஓடி எடுக்கும்போது ஒரு ரன்னை எடுத்துவிட்டால் ஆட்டம் முடிந்துவிடும். அதன் பிறகு இரண்டோ மூன்றோ ஓட முடியாது. அப்போது நிகர ரன் விகிதக் கணக்கு ராஜஸ்தானுக்குச் சாதகமாக இருக்கும். ஆனால் பவுண்டரி அடித்துவிட்டால் அந்த ரன் மும்பையின் கணக்கில் சேர்ந்து அதன் நிகர ரன் விகிதம் ஏறிவிடும்.

தவறு செய்த ஃபாக்னர்

பதற்றத்துடன் பந்து வீசிய ஃபாக்னர் மீண்டும் தவறு செய்தார். மீண்டும் கால் திசையில் ஒரு ஃபுல் டாஸைப் பரிசளித்தார். தாரே அதைத் தவறாமல் எல்லைக் கோட்டுக்கு வெளியில் அனுப்பினார். மும்பை கூடுதல் ரன் விகிதத்துடன் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

கடந்த சில வாரங்களாகக் கடுமையாக உழைத்த ராஜஸ்தான் அணி அந்த ஒரு பந்தினால் போட்டியிலிருந்து வெளியேறியது. அதற்கு முன்பு வீசப்பட்ட ஓவர்களின் ஒட்டுமொத்த விளைவுதான் இந்த வெளியேற்றம் என்றாலும் ஒரே ஒரு பந்தைத் துல்லியமாக வீசியிருந்தால் எல்லாத் தவறுகளையும் அது ஈடுகட்டியிருக்கும். ஃபாக்னரால் அது முடியவில்லை.

உணர்ச்சிவசப்பட்ட திராவிட்

ராஜஸ்தான் பெற்ற இந்த மோசமான தோல்வியின் உக்கிரம் ராகுல் திராவிடின் செய்கையில் தெரிந்தது. கடைசிப் பந்தில் சிக்சர் பறந்ததும் அவர் கோபத்தோடு தன் தொப்பியைக் கழற்றித் தரையில் வீசினார். நிதானத்துக்கும் பொறுமைக்கும் பேர்போன திராவிடே இப்படி உணர்ச்சிவசப்பட்டார் என்றால் அன்று மைதானத்தில் இருந்த உணர்ச்சிக் கொந்தளிப்பைப் புரிந்துகொள்ளலாம்.

ஐ.பி.எல்.லின் விறுவிறுப்பான ஆட்டங்களில் ஒன்று இது என்றாலும் ரன் விகிதம் பற்றிய குழப்பம் இந்த முடிவைப் பற்றிய கேள்விகளை எழுப்புகிறது. 14.3 ஓவர்களில் அடிக்க வேண்டும் என்று முதலில் சொல்லப்பட்டது. அப்போது 14.3 ஓவர்களில் ஸ்கோர் டை ஆனால் என்ன நடக்கும் என்பது பற்றி இரு அணிகளுக்கும் தெரிந்திருக்கவில்லை. தொலைக்காட்சியில் ஒளிபரப்பியவர்களுக்கும் வர்ணனையாளர்களுக்கும்கூட இது தெரியவில்லை.

190 ரன்னை 14.3 ஓவர்களில் எடுக்க வேண்டும். ஒரு வேளை அப்படி முடியாவிட்டால் இன்னும் சில பந்துகளை எதிர்கொண்டு 190க்கு மேல் எடுத்தால் நிகர ரன் விகிதம் ஏறும். ஒரு ரன் அல்லது இரு ரன்கள் தேவைப்படும்போது பவுண்டரியோ சிக்ஸரோ அடித்தால் அது மொத்தக் கணக்கில் சேருமல்லவா? அந்த அடிப்படையில்தான் மும்பைக்கு வாய்ப்பு அமைந்தது.

ராயுடு ரன் அவுட் ஆனபோதே மும்பை ரன் விகிதத்தில் சற்றே மேலே போய்விட்டது. மும்பை 0.078099. ராஜஸ்தான் 0.076821. நான்காவது பந்தில் மும்பை ஒரே ஒரு ரன் எடுத்திருந்தால் அது வெற்றி பெற்றிருக்கும். ஆனால் அதன் நிகர ரன் விகிதம் சற்றுக் கீழே போயிருக்கும். எனவே அந்தப் பந்து மும்பைக்கு மட்டுமல்ல, ராஜஸ்தானுக்கும் நல்ல வாய்ப்புதான். ஆனால் ஃபாக்னர் அதைப் பயன்படுத்திக்கொள்ளத் தவறிவிட்டார், தாரே சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்டார். ஒரே ஒரு பந்து ஒரு சுற்றுக்கான வாய்ப்பையே தீர்மானித்த கதை இதுதான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x