12 டெஸ்ட்களில் 250 ரன்கள்: பிராட் ஹேடின் நீக்கம் பற்றி பொரிந்து தள்ளிய டேரன் லீ மேன்

12 டெஸ்ட்களில் 250 ரன்கள்: பிராட் ஹேடின் நீக்கம் பற்றி பொரிந்து தள்ளிய டேரன் லீ மேன்
Updated on
1 min read

தனது மகள் மியா-வின் உடல் நலக்கோளாறு காரணமாக லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் ஆடாத பிராட் ஹேடின் அதன் பிறகு தேர்வு செய்யப்படாததால் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் ‘முதலில் குடும்பம்’ என்ற கொள்கை மிதித்துத் தள்ளப்பட்டுள்ளதாக புகார் எழுப்பப்பட்டு வரும் நிலையில் ஹேடின் நீக்கம் குறித்து பயிற்சியாளர் டேரன் லீ மேன் மவுனம் கலைத்தார்.

"நாங்கள் ஒரு குழுவாக நெருக்கமாகவே இருக்கிறோம். நாம் ஒரு விஷயத்தில் தெளிவாக இருப்போம், பிராட் எப்போதுமே ஆஸ்திரேலியாவுக்காக சிறப்பாக ஆடிவந்துள்ளார் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனாலும், அவரை நீக்குவது என்பது குறித்த ஒரு கடினமான முடிவை ஒரு பயிற்சியாளராக நான் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

மிகவும் சீரணிக்க முடியாத உண்மை என்ற ஒன்று எப்போதும் உண்டு. கடைசி 12 டெஸ்ட் போட்டிகளில் ஹேடின் 250 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். 21 முறையில் 16 முறை பவுல்டு ஆகியுள்ளார். எனவே ஆட்டத்திறன் என்பதே இறுதியில் முடிவெடுக்கும் அம்சமாக உள்ளது. 'முதலில் குடும்பம்' என்ற கொள்கை பற்றி “ஆ” “ஊ” என்று பேசப்பட்டு வருகிறது, அதற்கு எந்தக் குந்தகமும் ஏற்படவில்லை, அது அப்படியேதான் இருக்கிறது.

வெஸ்ட் இண்டீஸ் தொடரை ரியான் ஹேரிஸ் ஆடவில்லை, முதல் டெஸ்டில் இங்கு ஆடுவார் என்ற உத்தரவாதமும் இல்லை. ஆனால், அவர் ஓய்வு அறிவிப்பார் என்று எதிர்பார்க்கவில்லை. டேவிட் வார்னர் தனக்கு குழந்தை பிறந்ததால் ஜிம்பாப்வே தொடரில் ஆடவில்லை, ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் ஆடுவார் என்ற உத்தரவாதங்கள் இல்லை. ஆனால் இவையெல்லாம் பற்றி நிறைய பேர்களிடத்தில் ஒரு சமச்சீரற்ற பார்வை இருந்து வருகிறது.

பிராட் ஹேடின் குடும்பம் பற்றி நாங்கள் உண்மையில் அக்கறை கொண்டுள்ளோம். அவருக்கு பதிலாக லார்ட்ஸில் ஆடிய பீட்டர் நெவில் சிறப்பாக ஆடினார், எனவே அடுத்த போட்டியில் மாற்ற விரும்பவில்லை. இந்த டெஸ்ட் போட்டியிலும் அவர் சிறப்பாகவே ஆடினார். நாங்கள் அனைவருமே பிராட் ஹேடினை நேசிக்கிறோம், எனவே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான உணர்வுகள் இருக்கும், தொழில்பூர்வ விளையாட்டில் இதெல்லாம் சகஜம், எங்களால் இயன்ற அளவுக்கு இந்தச் சூழ்நிலைகளை சிறப்பாகக் கையாண்டு வருகிறோம்” என்றார்.

தோல்வி, கேப்டன் கிளார்க் பார்ம் குறித்து...

அவர் தேவையான அளவுக்கு விளையாடலாம். அவர்தான் கேப்டன். ஆனால் அவர் நன்றாக விளையாடுவது அவசியம். அவர் மட்டுமல்ல, முதல் இன்னிங்ஸில் ராஜர்ஸ், 2-வது இன்னிங்ஸில் வார்னர் தவிர முன்கள வீரர்கள் தடுமாறியே வருகின்றனர்.

ஆனால் வீரர்களின் பணிக் கவனம் குறித்து நான் புகார் தெரிவிக்க மாட்டேன். குறிப்பாக மைக்கேல் கிளார்க் தயாரிப்பு அபாரம். எனவே இந்தத் தோல்வியினால் நாங்கள் பதட்டமடையப் போவதில்லை. இது உறுதி.

ஸ்விங் பந்துகளை எதிர்கொள்வதில் எங்கள் வீரர்கள் மேலும் சிறப்புற வேண்டும்.” என்றார் டேரன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in