

சுனில் கவாஸ்கர் தலைமையிலான இந்திய அணி 1985- ஆஸ்திரேலியாவில் நடந்த உலக சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடர் இறுதியில் பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை வென்றது.
அப்போது அது மினி உலகக்கோப்பை என்று அழைக்கப்பட்டது. இதில் ரவிசாஸ்திரி ஆடி காரை தொடர் நாயகன் விருதுக்காகப் பரிசாகப் பெற்றார். அப்போது ஆடி கார் என்பது சாதாரணமானது அல்ல.
அந்தத் தொடரில் கவாஸ்கர், ரவிசாஸ்திரி, ஸ்ரீகாந்த், வெங்சர்க்கார், மொஹீந்தர் அமர்நாத், அசாருதீன், கபில்தேவ் ,சதானந்த் விஸ்வநாத், மதன்லால், பின்னி, எல்.சிவராம கிருஷ்ணன் என்று பிரமாதமான வீரர்கள் இருந்தனர், ஆஸ்திரேலியப் பிட்ச்களும் கடினமானவை.
இந்த அணி இப்போதைய விராட் கோலி தலைமை அணியையும் கூட வீழ்த்தும் அளவுக்கு சவாலானது என்று ரவிசாஸ்திரி தெரிவித்தார்.
பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாயுடனான பேட்டியில் ரவி சாஸ்திரி கூறியதாவது:
ஆம். அதில் என்ன சந்தேகம் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் இந்தியா இதுவரை ஆடிய அணிகளையும் நிறுத்துங்கள், அதில் சிறந்த எந்த அணியையும் 1985 அணி நிச்சயம் ஓடவிடும் என்பதே உண்மை.
பலரும் கபில் தலைமை 1983 உலகக்கோப்பை வெற்றி ஏதோ ஒருமுறை நிகழ்ந்த அதிசயம் என்றே பார்த்தனர், நினைத்தனர், ஆனால் 1985 அணி பிரமாதம், சுனில் கவாஸ்கர் முன்னணியில் நின்று கேப்டனாக சிறப்பாக வழிநடத்தினார்.
இந்த தொடரில் மறக்க முடியாதது பாகிஸ்தானை இறுதியில் காலி செய்ததுதான். நியூஸிலாந்து அந்தத் தொடரில் அருமையான அணி. அந்த அணியில் சூப்பர் ஸ்டார்கள் இல்லை (மார்ட்டின் குரோவ், ரிச்சர்ட் ஹாட்லி என்னவாம்?) ஆனால் எப்போதுமே தங்கள் திறமைகளையும் தாண்டி ஆடக்கூடியவர்கள், சவால் அளிப்பவர்கள்.
அரையிறுதியில் (1985) அவர்களை வீழ்த்த நாம் நமது உயர்ந்த பட்ச ஆட்டத்தை ஆடினால் தான் முடியும், வீழ்த்தினோம்.
என்றார் ரவிசாஸ்திரி.