முதல் டி20 போட்டி: இலங்கையை வீழ்த்தியது பாகிஸ்தான்

முதல் டி20 போட்டி: இலங்கையை வீழ்த்தியது பாகிஸ்தான்
Updated on
1 min read

இலங்கைக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது பாகிஸ்தான்.

இலங்கை தலைநகர் கொழும்பில் நேற்று முன்தினம் நடந்த இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அஹமது ஷெஸாத் 38 பந்துகளில் 46 ரன்களும், ஷோயிப் மாலிக் ஆட்டமிழக்காமல் 31 பந்துகளில் 46 ரன்களும், உமர் அக்மல் 24 பந்துகளில் 46 ரன்களும் எடுத்தனர்.

பின்னர் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி கண்டது. அந்த அணியில் ஸ்ரீவர்த்தனா 35 ரன்களும், டி சில்வா, கபுகேதரா ஆகியோர் தலா 31 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் சோஹைல் தன்வீர் 3 விக்கெட்டுகளையும், அன்வர் அலி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். சோஹைல் தன்வீர் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இநத் வெற்றியின் மூலம் இரு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது பாகிஸ்தான். 2-வது போட்டி கொழும்பில் இன்று நடக்கிறது.

அப்ரிதி நெகிழ்ச்சி

வெற்றி குறித்துப் பேசிய பாகிஸ்தான் கேப்டன் ஷாஹித் அப்ரிதி, “இந்த வெற்றிக்கான பாராட்டுகள் அனைத்தும் எங்கள் வீரர்களையே சேரும். எங்கள் அணியின் கூட்டு முயற்சிக்கும், கடின உழைப்புக்கும் கிடைத்த வெற்றி இது. குறிப்பாக ஷெஸாத், ஹபீஸ், மாலிக், அக்மல் ஆகியோர் சிறப்பாக பேட் செய்தனர். பந்துவீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டனர்.

உலகின் தலைசிறந்த அணியாக வரவேண்டுமெனில் வலுவான வீரர்கள் தேவை. எங்கள் அணி வலுவான வீரர்களைக் கொண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எங்களுடைய பீல்டிங் சிறப்பாக இருந்தது. இளம் வீரர்கள் பொறுப்பை உணர்ந்து தங்களின் பணியை சிறப்பாக செய்தனர். போட்டியைக் காண மைதானத்துக்கு வந்திருந்த ரசிகர்களுக்கும், எங்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக இங்கு வந்திருந்த பாகிஸ்தான் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in