Published : 06 May 2020 03:41 PM
Last Updated : 06 May 2020 03:41 PM

காரின் பின்னால் உள்ள ஸ்டெப்னியை வேண்டுமானால் பகிர்கிறேன், ஆடி கார் எனக்குத்தான்: ரவி சாஸ்திரி ருசிகரம்

1985 மினி உலகக்கோப்பை என்று வர்ணிக்கப்படும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தி சுனில் கவாஸ்கர் தலைமை இந்திய அணி கோப்பையை வென்றது.

இறுதிப் போட்டியில் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் ஆடிய காட்டடி தர்பார் இன்னிங்சை அவ்வளவு எளிதில் மறக்கத்தான் முடியுமா? ரவிசாஸ்திரி தொடர் நாயகன் விருதுக்காக ஆடி காரைப் பரிசாகப் பெற்றதைத்தான் மறக்க முடியுமா?

இந்நிலையில் ராஜ்தீப் சர்தேசாய் நடத்திய நிகழ்ச்சியில் 1985 தொடர் பற்றியும் ஜாவேத் மியாண்டட் பற்றியும் அவர் கூறியதாவது:

“மியாண்டட்டுக்கு அந்த ஆடி கார் எப்படியும் கிடைக்காது, எனவே அது எனக்குத்தான் என்று தெரிந்தவுடன் என் கவனத்தைத் திசைத்திருப்ப என்னை வார்த்தை ஊசிகளால் குத்திக் கொண்டிருப்பார் அவர்.

நாங்கள் ஆடிய காலக்கட்டத்தில் இருவரும் வார்த்தை மோதலில் ஈடுபடுவோம். கிரேட் பிளேயர் அவர், அதே வேளையில் மிகச்சிறந்த போட்டியாளர். உங்கள் கவனத்தைச் சிதறடிக்க அவர் எந்த ஒரு நிலைக்கும் செல்வார். அவருக்கு இறுதியில் காரைத் தட்டிச் செல்ல வாய்ப்பில்லை, என் கண்கள் காரையே குறிவைத்தன.

நான் நம் அணி வீரர்களிடமே தெரிவித்து விட்டேன், கார் எனக்கு கிடைத்தால் அது என்னுடையதுதான் அதை விற்று காசாக்கி யாருடனும் பகிர்ந்து கொள்ளும் எண்ணமில்லை என்று.

கபில்தேவ் கூட நான் 25% பங்கு வைத்துக்கொண்டு மீதியை அனைவருடனும் ஷேர் செய்ய வேண்டும் என்றார். ஆனால் அமர்நாத் என்னிடம் வந்து யாருக்குக் கிடைக்கிறதோ அவர்களுக்குத்தான் என்றார்.

என் முறை வந்த போது நான் காரை வைத்துக் கொள்வேன் என்றேன். காரின் பின்னால் உள்ள ஸ்டெப்னியை வேண்டுமானால் பகிர்கிறேன் என்றேன்.

ஏனெனில் அத்தனையாண்டுகளாக ஃபிரிட்ஜ்கள், ஏர்கண்டிஷன்கள், வாஷிங்மெஷின்கள் அனைத்தும் பகிரப்படாமல் காணாமல் போயின, திடீரென கார் என்றதும் ஏன் பகிரும் எண்ணம் தோன்ற வேண்டும். நான் நேரடியாக சொல்லி விட்டேன் பகிர முடியாது, எனக்குத்தான் என்று” என்றார் ரவிசாஸ்திரி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x