Published : 13 Aug 2015 10:03 AM
Last Updated : 13 Aug 2015 10:03 AM

‘ஏ’ அணிகள் முத்தரப்பு தொடர் ஆஸ்திரேலியாவுக்கு 4-வது வெற்றி

தென் ஆப்பிரிக்க ஏ அணிக்கு எதிரான ஆட்டத்தில் 108 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது ஆஸ்திரேலிய ஏ அணி. இதன்மூலம் முத்தரப்பு தொடரில் விளையாடிய 4 ஆட்டங்களிலும் வெற்றி கண்டு முதலிடத்தைப் பிடித்தது.

இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஏ அணிகள் இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் சென்னையில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவும், ஆஸ்திரேலியாவும் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர்கள் டிராவிஸ் ஹெட் ரன் ஏதுமின்றியும், ஜோ பர்ன்ஸ் 11 ரன்களிலும், கிறிஸ் லின் 29 ரன்களிலும், கேலம் பெர்குசன் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

எனினும் மறுமுனையில் தொடர்ந்து சிக்ஸரை விளாசி வாணவேடிக்கை காட்டிய கேப்டன் மேத்யூ வேட் சதமடித்தார். 106 பந்துகளைச் சந்தித்த அவர் 7 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 130 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்தவர்களில் ஹேண்ட்ஸ்காம்ப் 52, சீன் அபாட் 23 ரன்கள் எடுத்து வெளியேற, 47.2 ஓவர்களில் 272 ரன்களுக்கு ஆட்டமிழந்தது ஆஸ்திரேலியா.

தென் ஆப்பிரிக்க தரப்பில் சோட்சோபி 3 விக்கெட்டுகளையும், வில்ஜோன், ஹென்ரிக்ஸ், டீன் எல்கர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணியில் கேப்டன் டீன் எல்கர் (64 ரன்கள்), ஜோன்டோ (47 ரன்கள்) ஆகியோர் மட்டுமே சிறப்பாக ஆடினர். எஞ்சிய வீரர்கள் சொற்ப ரன்களில் நடையைக் கட்ட, தென் ஆப்பிரிக்கா 37.1 ஓவர்களில் 164 ரன்களுக்கு சுருண்டது. ஆஸ்திரேலியத் தரப்பில் ஆஷ்டன் அகர், பாய்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், கோல்ட்டர் நீல் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். மேத்யூ வேட் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இந்தியா-தெ.ஆப்பிரிக்கா மோதல்

இன்று நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் மோதுகின்றன. இந்திய அணி 3 ஆட்டங்களில் விளையாடி 5 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. அதேநேரத்தில் தென் ஆப்பிரிக்க அணி, 3 ஆட்டங்களிலும் தோற்று புள்ளிகள் ஏதுமின்றி கடைசி இடத்தில் உள்ளது.

தென் ஆப்பிரிக்கா இறுதிச்சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் இந்த ஆட்டத்தில் போனஸ் புள்ளியோடு வெற்றி பெற வேண்டும். ரன் ரேட் அடிப்படையிலும் இந்தியாவைவிட முன்னிலை பெற்றாலொழிய இறுதிச்சுற்றுக்கு முன்னேற முடியாது. ஆனால் இந்திய அணி வெற்றி பெற்றாலே இறுதிச்சுற்றுக்கு முன்னேறிவிடலாம். இந்த ஆட்டம் காலை 9 மணிக்கு தொடங்குகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x