Published : 02 May 2020 08:13 PM
Last Updated : 02 May 2020 08:13 PM

முச்சதம் அடித்த கருண் நாயருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கவில்லையே.. - இருந்த போது மழுப்பல், இப்போது உருக்கம்- எம்.எஸ்.கே. பிரசாத்தின் முதலைக்கண்ணீர்

அணித்தேர்வுக்குழு தலைவராக இருந்த போது கருண் நாயர் ஒதுக்கப்படுவது குறித்த கேள்விகளுக்கெல்லாம் மழுப்பலாக பதிலளித்து விட்டு, சுனில் கவாஸ்கர் போன்றோர் கடும் கேள்விகளை எழுப்பிய போதெல்லாம் கல்லாய்ச் சமைந்து விட்டு தற்போது அணித்தேர்வுக்குழு தலைவர் பதவியிலிருந்து விலகிய பிறகு கருண் நாயருக்காக எம்.எஸ்.கே. பிரசாத் முதலைக்கண்ணீர் வடித்துள்ளார்.

இந்திய அணியில் முச்சதம் அடித்த 2வது வீரருக்கு வாய்ப்பளிக்க முடியாமல் போனது இருதயத்தை நொறுங்கச் செய்கிறதாம் பிரசாத்துக்கு, அப்போதே ஏன் இருதயம் நொறுங்கவில்லை? இது போன்று முச்சதம் அடித்த வீரர் வாய்ப்பு பெறாமல் போவது மிகவும் அரிதான ஒன்று என்று இப்போது கூறுவது தன்னுடைய கையாலாகத்தனத்தின் மீதான விமர்சனமா? அல்லது கேப்டன் கோலி, ரவிசாஸ்திரியின் நிலைப்பாட்டின் மீதான விமர்சனமா என்பது தெரியவில்லை.

எம்.எஸ்.கே. பிரசாத் கூறும்போது, “குறிப்பாக கருண் நாயர் முச்சதம் அடித்த பிறகும் கூட இந்திய டெஸ்ட் அணியில் அவரை மீண்டும் எடுக்காமல் விட்டது வருத்தமளிக்கிறது. இங்கிலாந்து தொடரில் இருந்தார் ஆனால் அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. சர்வதேச கிரிக்கெட்டில் முச்சதம் எடுத்து விட்டு தனது மறு வாய்ப்புக்காக கஷ்டப்பட்ட ஒரு வீரர் என்ற வகையில் மிகவும் அரிதானதே. இது உண்மையில் இருதயத்தை நொறுங்கச் செய்கிறது, அவருக்கு மட்டுமல்ல எங்கள் அனைவருக்கும்தான்” என்றார்.

சென்னையில் சேவாக் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 319 ரன்கள் விளாசிய பிறகு வலுவான இங்கிலாந்துக்கு எதிராக கருண் நாயர் 303 ரன்கள் எடுத்தார், இந்தியா அந்தப் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன், தொடர்நாயகன் விருதையும் கருண் நாயர் தட்டிச் சென்றார்.

பெரிய நட்சத்திர வீரர் பிறந்து விட்டார் என்று உலகம் வியந்த தருணத்தில் அதன் பிறகு 3 போட்டிகளில் மட்டுமே கருண் நாயர் ஆடினார். இதற்கான பொறுப்பை பிரசாத் அப்போதே ஏற்றிருக்க வேண்டும், கோலி ஏன் கருண் நாயரை விரும்பவில்லை என்பதை பிரசாத் அம்பலப்படுத்தியிருக்க வேண்டும் அதை விடுத்து ஒருவரது கரியரையும் கனவுகளையும் சிதைத்து விட்டு இன்று முதலைக்கண்ணீர் வடித்து தனது செயலுக்கு நிவாரணம் தேட முயற்சிப்பது ஏற்றுக் கொள்ளத் தக்கதாக இல்லை.

அதே போல் உலகக்கோப்பைக்கு அம்பாதி ராயுடுவைத் தேர்வு செய்யாமல் 3டி வீரர் என்று விஜய் சங்கர் தேர்வை வர்ணித்து விட்டு இப்போது ராயுடுவுக்காகவும் நீலிக்கண்ணீர் வடித்த பிரசாத், “உலகக்கோப்பை அணியில் அவர் தேர்வு செய்யப்பட கடைசி வரையிலும் வாய்ப்புள்ளவராகவே இருந்தார். தேர்வு அன்றைக்கு அவர் தேர்வு செய்யப்படவில்லை. இதற்காக அவர் மட்டும் வருந்தவில்லை நாங்கள் அனைவருமே வருந்தினோம்” என்றார்.

இதிலும் கோலியின் ரவிசாஸ்திரியின் பங்கு என்னவென்பதை பிரசாத் இப்போதும் கூற மறுப்பது ஏன் என்ற கேள்வியே எஞ்சுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x