

கபில் தேவுக்கு அருகில் கூட ஹர்திக் பாண்டியா வர முடியாது, அந்த இடத்துக்கு வர வேண்டுமெனில் பாண்டியா இன்னும் கடினமாக உழைக்க வேண்டும் என்றார் பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் அப்துல் ரசாக்.
உலகக்கோப்பைகளில் இந்திய அணி பாகிஸ்தானைத் தொடர்ந்து வீழ்த்தக் காரணம் நெருக்கடிகளை இந்திய அணி பெரிய போட்டிகளில் திறம்பட சமாளிப்பதே காரணம் என்றார்.
இந்நிலையில் பாண்டியா-கபில் ஒப்பீடு குறித்து ரஸாக் கூறியதாவது:
பாண்டியா ஒரு நல்ல வீரர்தான், ஆனால் இன்னும் சிறப்பாக ஆடினால்தான் ஆல்ரவுண்டராக முடியும். கடின உழைப்பு மட்டுமே பலனளிக்கும். ஆட்டத்துக்கு போதிய கால அவகாசம் ஒதுக்கவில்லை எனில் அது நம்மிடமிருந்து திசைமாறி நழுவி சென்று விடும்.
பாண்டியா உடல் மற்றும் மனோரீதியாக தன்னை இன்னும் கொஞ்சம் நல்ல விதத்தில் தயார் படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. நிறைய காயங்கள் அடைகிறார், நிறைய பணம் சம்பாதிக்கும் போது கொஞ்சம் ரிலாக்ஸ் மனநிலை வந்து விடும், பாண்டியாவின் பிரச்சனையும் இதுவாகவே இருக்கலாம்.
பாகிஸ்தான் பவுலர் மொகமது ஆமிர் கடினமாக உழைக்கவில்லை, அவர் பவுலிங் அவரிடமிருந்து பறந்து விட்டது.
கபில், இம்ரான் கான் ஆகியோர் எந்தக் காலத்திற்கும் சிறந்த ஆல்ரவுண்டர்கள், அவர்களுடன் யாரையும் ஒப்பிட முடியாது, அதுவும் பாண்டியா கபில் அருகில் கூட செல்ல முடியாது. நான் கூடத்தான் ஆல்ரவுண்டர் அதற்காக இம்ரான், கபிலுடன் என்னை ஒப்பிடுவதா, நிச்சயம் கூடாது.
அவர்களெல்லாம் வேறொரு லெவலில் இருப்பவர்கள், என்றார் அப்துல் ரசாக்.