

இந்திய கிரிக்கெட் அணியின் இங்கிலாந்து பயணத்தின் போது இந்திய அணியில் இடம் பெறுவதே தனது முதல் குறி என்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் வேகப்பந்து வீச்சாளர் பர்வீந்தர் அவானா தெரிவித்துள்ளார்.
இதுவரை இவர் 2 இருபது ஓவர் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் ஆடியுள்ளார்.
27 வயதான இவர் வேகத்தை மட்டுமே நம்புபவர். லேசாக பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸின் பவுலிங் முறையை ஒத்திருப்பது இவருடைய பவுலிங் முறை. மணிக்கு 140கிமீ மற்றும் அதற்கு மேல் வீசுகிறார்.
கிங்ஸ் லெவன் பயிற்சியாளர் ஜோ டேவிஸும் இவர் மீது அபார நம்பிக்கை வைத்துள்ளார். இஷாந்த் சர்மாவை விட்டுவிட மனமில்லாத இந்திய அணித் தலைமை ஈஷ்வர் பாண்டேயிற்கே வாய்ப்பை மறுத்து வருகிறது. இந்நிலையில்...
அவானா என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்:
"நான் இங்கிலாந்து தொடரைக் குறிவைத்துள்ளேன். நேற்றுதான் பயிற்சியாளர் ஜோ டேவிசிடம் நகைச்சுவையாகக் குறிப்பிட்டேன், இன்னும் 3 ஐபிஎல் போட்டிகள் இருக்கிறது நான் அனைத்திலும் விளையாடி ஒவ்வொரு போட்டியிலும் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இங்கிலாந்து செல்லும் இந்திய வீரர்கள் விமானத்தில் இடம் பிடிப்பேன் என்று.
இந்த ஐபிஎல் கிரிக்கெட் மூலம் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிப்பதே எனது எண்ணமாக இருந்தது.
இந்த ஐபிஎல் தொடரின் துவக்கத்தில் எனது பந்தில் வேகம் இல்லை. நான் வேகத்திற்கான முயற்சியை எடுக்கவில்லை. அதன் பிறகே ஜோ டேவிஸ் என்னிடம் பேச்சு நடத்தி வேகம்தான் எனது திறமை என்பதை நினைவுட்டினார்.
கொஞ்சம் அடிப்படைகளிலிருந்து நகர்ந்து நான் ஜாலியாகி விட்டேன். இதற்காகவே சில போட்டிகளிலிருந்து என்னை நீக்கினர். இது சரியான பாடமே.
நான் கேப்டன் ஜார்ஜ் பெய்லியிடமும் கூறினேன், அணியில் இல்லாத போது பந்து வீச்சில் வேகத்தையும் கட்டுப்பாட்டையும் மேம்படுத்தியுள்ளேன் என்று.
மிட்செல் ஜான்சனிடமும் பேசினேன், தொடர்ந்து வேகத்தைக் குறைக்காமல் வீசுவது எப்படி என்று அவரிடமும் ஆலோசித்தேன். அவர் எனது உடல் தகுதியை 100% வைத்திருக்குமாறு கூறினார்.
140 அல்லது 145 கிமீ வேகத்தில் மட்டுமே வீசிக்கொண்டிருந்தால் மணிக்கு 150 கிமீ வேகத்தை ஒருபோதும் எட்ட முடியாது என்றார் மிட்செல் ஜான்சன். ஆனால் உடல்தகுதி விஷயத்தில் கவனமில்லாமல் இருந்தால் வேகம் படிப்படியாகக் குறையும் என்று மிட்செல் ஜான்சன் அறிவுரை வழங்கினார்”
இவ்வாறு கூறியுள்ளார் அவானா.