

சவுரவ் கங்குலி கேப்டன்சியில் மிகுந்த நம்பிக்கையுடன் களமிறக்கப்பட்ட விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென் பார்த்தீ படேல் ஆவார். இவர் 2002ம் ஆண்டு அறிமுகமானார்.
இவரது தைரியம், ஆக்ரோஷமான அணுகுமுறை கேப்டன் கங்குலியை அப்போது கவர்ந்திழுத்தது, தொடக்க வீரராகவும் சில ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலும் கலக்கியவர். நிறைய ஆடியிருக்க வேண்டியது தோனி லாபியினால் வாய்ப்பு கிடைக்கப் பெறாதவர்களில் இவரும் ஒரு விக்கெட் கீப்பர்.
தோனி கேப்டன் ஆனதும் பார்த்தீவ் படேல் கரியருக்கு எந்த விதப் பயனையும் அளிக்கவில்லை. 25 டெஸ்ட், 38 ஒருநாள் போட்டிகளுடன் இவரது இந்திய கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது.
ஆனால் இத்தனையாண்டுகளாக பார்த்திவ் படேலுக்கு ஒருவிரல் இல்லை, 9 விரல்களுடன் தான் அவர் விக்கெட் கீப்பிங் செய்து வருகிறார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை, அவரும் கூறியதில்லை.
அவரது இடது கை சுண்டு விரல் துண்டிக்கப்பட்ட விவரத்தை அவர் சமீபத்தில்தான் வெளியிட்டார்.
இது பற்றி நினைவு கூர்ந்த பார்த்தீவ், “எனக்கு 6 வயது இருக்கும் போது எதிர்பாராத விதமாக கதவிடுக்கில் என் இடது கை சுண்டு விரல் சிக்கி துண்டிக்கப்பட்டது. 9 விரல்களுடன் விக்கெட் கீப்பராக இந்திய அணிக்காக நிறைய போட்டிகளில் ஆடியது பெருமையளிக்கிறது” என்றார்.
அதனால் ஏற்பட்ட சிறு கடினத்தை விவரித்த பார்த்திவ் படேல், “சுண்டு விரல் இல்லாததால் விக்கெட் கீப்பிங் கிளவ் சரியாக இருக்காது. நான் டேப் போட்டு ஒட்டிவிட்டுத்தான் கீப்பிங் செய்வேன். எல்லா விரல்களும் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் திரும்பிப் பார்க்கையில் இந்திய அணிக்காக ஆடியது பெருமை அளிக்கிறது” என்றார் அவர்.