Published : 26 Apr 2020 03:50 PM
Last Updated : 26 Apr 2020 03:50 PM

என்னை ஏன் அணியிலிருந்து நீக்கினார்கள்? காரணத்தை யாரும் சொல்லவில்லை: இடது கை ’சுல்தான் ஆஃப் ஸ்விங்’ ஆர்.பி.சிங் ஆதங்கம்

இந்திய அணிக்காக சில பிரமாதமான ஸ்பெல்களை ஆஸ்திரேலியாவிலும் இங்கிலாந்திலும் வீசி அசத்திய இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஆர்.பி.சிங்.

2005-2011இல் இந்தியாவுக்காக 14 டெஸ்ட் போட்டிகள், 58 ஒருநாள் சர்வதேச போட்டிகள், 10 டி20 சர்வதேசப் போட்டிகளில் ஆடியவர் ஆர்.பி.சிங்.

ஜாகீர் கான், ஆர்.பி.சிங் ஒருவகையில் இர்பான் பத்தான் ஆகியோரை சுல்தான் ஆஃப் ஸ்விங் என்று செல்லமாக அழைக்கப்படுவதுண்டு. 14 டெஸ்ட்களில் 40 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 58 ஒருநாள் போட்டிகளில் 69 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். 10டி20 போட்டிகளில் 15 விக்கெட்டுகள்.

மிகப்பெரிய திறமைசாலி, அபூர்வமான ஒரு ஆக்ரோஷ ஸ்விங் பவுலர், 14 டெஸ்ட் போட்டிகள் என்பது அநியாயமானது. குறைந்தது 50 டெஸ்ட் போட்டிகளிலாவது அவர் ஆடியிருக்க வேண்டும், இந்திய அணித்தேர்வுக்குழுவின் புரியாத புதிர் நீக்கங்களின் நீண்ட பட்டியலில் இவரும் இடம்பெற்றார்.

பைசலாபாத் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானில் பாகிஸ்தானுக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியை ஆடிய ஆர்.பி.சிங் அறிமுகப் போட்டியிலேயே செத்த, சொத்தை பைசலாபாத் கட்டாந்தரையில் பாகிஸ்தான் 588 ரன்களைக் குவித்த போதும் 89 ரன்களையே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அதன் பிறகு திராவிட் கேப்டன்சியில் இங்கிலாந்தில் ஒரு டெஸ்ட் போட்டியில் வெல்ல இவரும் ஜாகீர் கானும் வீசிய ரவுண்ட் த விக்கெட் பவுலிங்கை மறக்க முடியுமா?

ரவுன்ட் த விக்கெட்டில் வந்து கழற்றிய குச்சிகளையும் மறக்க முடியாது, பிறகு 2008-ல் பெர்த் டெஸ்ட் போட்டியில் மைக் ஹஸ்சி, ஆடம் கில்கிறிஸ்ட் உட்பட 4 விக்கெட்டுகளை 68 ரன்களுக்கு முதல் இன்னிங்சில் கைப்பற்றியவர் 2வது இன்னிங்சில் மிக முக்கியமான 30 ரன்களை எடுத்து இந்திய முன்னிலையை அதிகப்படுத்தியதால் ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சில் 72 ரன்கள் வித்தியாசத்தில் டெஸ்ட் போட்டியை இழந்தது, பெர்த்தில் ஒரு மறக்க முடியாத வெற்றியைச் சாத்தியமாக்கியதில் ஆர்.பி.சிங்கை மறக்க முடியாது. 2வது இன்னிங்சில் மைக் ஹஸியை முக்கியக் கட்டத்தில் வீழ்த்தினார் ஆர்பி சிங்.

முதல் டி20உலகக்கோப்பையில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய 2வது பவுலராக திகழ்ந்தார், ஆனால் அதன் பிறகு 3 டி20 சர்வதேசப் போட்டிகளில் மட்டுமே ஆடினார்.

இந்நிலையில் இவர் ஆகாஷ் சோப்ராவுடன் நடத்திய உரையாடலில், “இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுவதற்கு முன்னமேயே தோனியும் நானும் சந்தித்து விட்டோம். இருவரும் சேர்ந்து நேரம் செலவழிப்போம். பிறகு அவர் கேப்டன் ஆனார்., அவர் கரியர் மேலே ஏறிக்கொண்டேயிருந்தது என் கரியர் கிராஃப் வீழ்ந்து கொண்டே இருந்தது. இன்றும் கூட நானும் தோனியும் சேர்ந்து நேரம் செலவழிப்போம், ஊர் சுற்றுவோம். ஆனால் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை எனக்கும் அவருக்கும் மாறுபட்ட கருத்துகள் உண்டு.

சிறந்த கிரிக்கெட் வீரராக என்ன செய்ய வேண்டும் என்று நான் தோனியிடம் கேட்டேன், அவர் அதற்கு ஆம் நீ கடினமாக உழைக்கிறாய் ஆனால் அதிர்ஷ்டம் வேண்டும் என்றார். அவர் கூறியதை ஏற்றுக் கொள்கிறேன்.

ஆட்டத்திறனில் என்னுடைய உச்சத்தில்தான் இருந்தேன். ஆனால் ஒருநாள், டெஸ்ட்களில் என் இடத்தை தக்க வைக்க முடியாமல் போனது. ஐபில் தொடரிலும் 3-4 சீசன்களில் நான் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தினேன். ஆனால் அதிகப் போட்டிகளில் ஆட முடியவில்லை, காரணம் கேப்டன் என் மீதான நம்பிக்கையை இழந்தாரா அல்லது என் ஆட்டத்திறன் உண்மையில் தரமிழந்து விட்டதா என்பது தெரியவில்லை” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x