

துணைக்கண்டத்துக்கே பெருமை சேர்ந்த கோலி தலைமை இந்திய அணியின் ஆஸ்திரேலிய மண்ணில் பெற்ற டெஸ்ட் தொடர் வெற்றியில் புஜாரா 4 டெஸ்ட் போட்டிகளில் 3 சதங்கள், ஒரு அரைசதம் என்று 521 ரன்கள் விளாசினார். இது அவருக்கு ஒரு பெரிய தொடராக அமைந்தது.
இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனக்கு பந்து வீச கடினமாக இருப்பது இந்தியாவின் செடேஷ்வர் புஜாராதான் என்று இப்போதைய உலகின் சிறந்த ஆஸ்திரேலிய பவுலர் பாட் கமின்ஸ் தெரிவித்தார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் கூட்டமைப்பு மேற்கொண்ட கேள்வி பதில் நிகழ்வில் பதிலளித்த புஜாரா, “நிறைய வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால் வித்தியாசமான வீரரைத் தேர்வு செய்கிறேன், செடேஸ்வர் புஜாராவை கடினமான பேட்ஸ்மென் எனக் கருதுகிறேன், எங்களுக்கு உண்மையில் அவர் பெரிய வலியாகவே இருந்தார்.
அந்தத் தொடரில் இந்தியாவுக்காக பாறை போல் நின்றார். அவரை வீழ்த்துவது எளிதல்ல. அவரது கவனம் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே இருந்தது, டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை அவருக்கு வீசுவது எனக்குக் கடினமாக இருந்தது” என்றார்.
அந்த மைல்கல் தொடரில் புஜாரா தொடர் நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
யாரைக்கேட்டாலும் கோலி, கோலி என்று தங்கள் பிரபலத்துக்காக கூறும் நிலையில் உண்மையில் கிரிக்கெட்டின் அடிப்படையில் புஜாராவை கமின்ஸ் கூறியிருப்பது பெரிய வித்தியாசமான பார்வைதான்.