

சச்சின் டெண்டுல்கருக்கு இன்று 47வது பிறந்தநாள். இதற்காக ஐசிசி, பிசிசிஐ உட்பட விராட் கோலி முதல் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சச்சின் டெண்டுல்கரை முதன் முதலில் ஸ்லெட்ஜ் செய்ய முயன்றது பற்றியும் அதற்கு சச்சின் அளித்த பதிலையும் பகிர்ந்துள்ளார் பாகிஸ்தான் ஆஃப் ஸ்பின்னார் சக்லைன் முஷ்டாக்.
இருவரும் விளையாடும் காலத்தில் சச்சினை அவரும் படுத்தியுள்ளார், சச்சினும் அவரை புரட்டி எடுத்துள்ளார். இந்நிலையில் கனடா டொராண்டோவில் 1997-ம் ஆண்டு சஹாரா கோப்பையில் சச்சின் டெண்டுல்கரை முதன் முதலில் ஸ்லெட்ஜ் செய்ததாகவும் அதுவே கடைசி ஸ்லெட்ஜாகவும் அமைந்ததையும் சக்லைன் முஷ்டாக் விவரித்துள்ளார்.
“முதலில் அவரை ஸ்லெட்ஜ் செய்தேன், என்ன கூறினேன் என்று நினைவில்லை, ஆனால் சச்சின் என்னிடம் கூறியது என் மனதைப் பிசைந்ததால் நினைவில் இன்னமும் உள்ளது.
நான் ஸ்லெட்ஜ் செய்தவுடன் அவர் என்னிடம் வந்து, ‘நான் உன்னிடம் தவறாக நடந்து கொண்டேனா, நீ ஏன் என்னிடம் தவறாக நடந்து கொள்கிறாய்?’ என்று கேட்டார். எனக்கு தர்மசங்கடமானது, நான் என்ன கூறுவது என்று தெரியாமல் முழிக்கத்தான் வேண்டியிருந்தது.
சச்சின் மீண்டும் என்னிடம், ‘உங்களை நான் ஒரு வீரராகவும் மனிதராகவும் உயர்நிலையில் வைத்திருக்கிறேன்’ என்றார், எனக்கு இன்னும் என்னவோ போல் ஆகிவிட்டது. ஆட்டம் முடிந்தவுடன் நான் மன்னிப்புக் கேட்டேன்.
அதன் பிறகு அவர் என் பந்துகளை தாறுமாறாகக் கிழித்தாலும் நான் ஸ்லெட்ஜ் செய்ய முற்படவில்லை” என்றார் சக்லைன் முஷ்டாக்.