Published : 24 Apr 2020 09:44 AM
Last Updated : 24 Apr 2020 09:44 AM

லிட்டில் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கருக்கு வயது 47- ஐசிசி வாழ்த்து 

லிட்டில் மாஸ்டர், மாஸ்டர் ப்ளாஸ்டர் என்றெல்லாம் புகழாரம் சூட்டி அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கருக்கு 47வது பிறந்த தினமாகும் இன்று (24-04-20), ஐசிசி ‘அனைத்து காலத்திலும் மிகவும் நிறைவு விருத்தியான ஒரு பேட்ஸ்மென்’ சச்சின் டெண்டுல்கருக்கு வாழ்த்து என்று தெரிவித்துள்ளது.

1989 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் தலைமை இந்திய அணி பாகிஸ்தான் சென்ற போது உலகையே இந்திய கிரிக்கெட் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த ஒரு அதிசய நிகழ்வுதான் சச்சின் டெண்டுல்கர், அப்போது முதல் தொடங்கிய மைதான சத்தமான ‘சச்சின்’ சச்சின் என்ற கோஷம் 25 ஆண்டுகளுக்கு இந்தியாவில் மட்டுமல்ல உலகின் எந்த மைதானத்திலும் ஓய வில்லை.

சச்சின் டெண்டுல்கரே தான் ஓய்வு பெறும் போது முத்தாய்ப்பாகக் கூறியது என்னவெனில், ‘சச்சின்.... சச்சின்’ என்ற ரசிகர்களின் சப்தம் கேட்காமல் எப்படி வாழப்போகிறேனோ? என்றார் கண்ணீர் மல்க.

இந்நிலையில் ஐசிசி தன் ட்விட்டரில், “அனைத்து கால மிகவும் பூர்த்தியான ஒரு பேட்ஸ்மென் சச்சின் டெண்டுல்கருக்கு ஹேப்பி பர்த் டே. இதனைக் கொண்டாட அவரது டாப் ஒருநாள் இன்னிங்ஸ் எதுவென்று வாக்களிக்க உங்களுக்கு ஒரு வாய்ப்பளிக்கிறோம். கொண்டாட்டத்துக்குத் தயாராகுங்கள்” என்று கூறியுள்ளது, ஆனால் கரோனா காலத்தில் பிறந்த தினம் கொண்டாடப்போவதில்லை என்று சச்சின் டெண்டுல்கர் முடிவு கட்டிவிட்டார்.

100 சதங்களை சர்வதேச கிரிக்கெட்டில் எடுத்த ஒரே வீரர் என்ற சாதனையை தன் வசம் வைத்துள்ளவர் சச்சின். 18,426 ரன்களை ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் அவர் எடுத்துள்ளார்.

6 உலகக் கோப்பைகளில் ஆடியுள்ளார். 2003 உலகக்கோப்பையில் இவர் எடுத்த அதிக பட்ச 672 ரன்கள் நீண்ட நாள் சாதனையாக இருந்தது. இவரது பிறந்த நாள் அன்றுதான் மறக்க முடியாத அந்த ஷார்ஜா போட்டியில் ஆஸ்திரேலியாவை இறுதிப் போட்டியில் தன் சதம் மூலம் வீழ்த்தி இந்தியா கோப்பையை வென்றது. இதற்கு முந்தைய போட்டியில் மணல் சூறைகாற்று அடித்து முடிந்த பிறகு டெண்டுல்கர் மட்டையிலிருந்து புறப்பட்டது இன்னொரு சூறைக்காற்று, இந்த இன்னிங்ஸின் மூலம் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா.

இறுதிப் போட்டியில் சொல்லி அடித்தார் சச்சின், ஆஸ்திரேலியா மடிந்தது, அது அவரது மறக்க முடியாத பிறந்த தினம், நமக்கும்தான். சச்சினை வாழ்த்துவோம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x