

ஐபிஎல் தொடர்களில் யார் சிறந்த கேப்டன் என்பதை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஒளிபரப்பு நிறுவனம் தேர்வு செய்தது. இதில் தோனி அனைத்து ஐபிஎல் தொடர்களின் சிறந்த கேப்டனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இந்தத் தேர்வுக்குழுவில் முன்னாள் வீரர்கள் ஆஷிஷ் நெஹ்ரா, கிரேம் ஸ்மித், சஞ்சய் மஞ்சுரேக்கர், டேரன் கங்கா, ஸ்காட் ஸ்டைரிஸ், மைக் ஹெசன், டீன் ஜோன்ஸ், ரஸல் ஆர்னால்ட், சைமன் டூல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ரோஹித், தோனிக்குப் பிறகு கவுதம் கம்பீர் (2 ஐபிஎல் கோப்பைகள்) போட்டியில் இருந்தார். டேவிட் வார்னர், ஆடம் கில்கிறிஸ்ட் , ஷேன் வார்ன் ஆகியோரும் சிறந்த கேப்டன்கள் போட்டியில் இருந்தனர்.
ரோஹித் சர்மா அதிகபட்சமாக 4 கோப்பைகளை வென்றிருந்தாலும் அதிக போட்டிகளில் வெற்றி என்ற வகையில் தோனியின் வின்னிங் சதவீதம் 60.11% ஆகும்.ஐபிஎல் கிரிக்கெட்டில் தோனி 4,000 ரன்களை சுமார் 42 என்ற சராசரியின் கீழ் எடுத்துள்ளார்.
மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தன் தலைமையின் கீழ் தோனி 8 முறை இறுதிப்போட்டிக்கு இட்டுச் சென்றார். கேப்டனாக இது அதிகம். 12 சீசன்களில் 11 சீசன்களில் டாப் 4 இடங்களுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் முன்னேறியது, இதுவும் ஒரு சாதனைதான். எனவே கோப்பையை வென்ற கணக்கு மட்டும் மகுடத்துக்குப் போதுமானதல்ல, இந்த அளவுகோல்களிலும் தோனி சாதித்துள்ளார் என்பதற்காகத்தான் அனைத்து கால சிறந்த கேப்டன் மகுடம்.
மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே இரண்டு பவர் ஹவுஸ்கள் ஐபிஎல் கோப்பைகளை அதிகம் வென்றுள்ளன, இதில் தோனி வெறும் கிரிக்கெட் வீரர் மட்டுமல்ல மிகப்பெரிய வியாபார பிராண்ட் முத்திரையுமாவார். அதனால் இவரைத் தேர்வு செய்ததில் ஆச்சரியமொன்றுமில்லை.