

இந்தியாவில் கரோனா கிருமி தொற்று பற்றிச் சொன்ன கருத்தை, மல்யுத்த வீராங்கனையும், அரசியல்வாதியுமான பபிதா போகட் திரும்பப் பெற வேண்டும் என்று இந்திய பாட்மிண்டன் முன்னாள் வீராங்கனை ஜுவாலா கட்டா கூறியுள்ளார்.
முன்னதாக பபிதா தனது ட்வீட்டில், "இந்தியாவில் கரோனா தொற்றை விட மிக அதிகமான கவலையளிப்பது அறியாமையில் இருக்கும் ஜமாதிக்கள்" தான் என்று குறிப்பிட்டிருந்தார். இது இணையத்தில் எதிர்ப்பைச் சம்பாதித்ததோடு பலர் இவரது கணக்கை முடக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
தொடர்ந்து ஒரு காணொலியைப் பதிவேற்றிய பபிதா, தனது கருத்தை நியாயப்படுத்தும் விதமாகப் பேசியிருந்தார். காவல்துறையினரையும், மருத்துவர்களையும் தாக்கியவர்கள் மற்றும் இந்த தொற்றைப் பரப்புபவர்களுக்கு எதிராகவே தான் பேசியதாகக் கூறினார். இதற்கு சில விளையாட்டு வீரர்களும் ஆதரவு தெரிவித்தனர்.
காமன்வெல்த் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற ஜுவாலா கட்டா, பபிதாவின் கருத்துக்கு எதிராகப் பேசியுள்ளார். "மன்னிக்க வேண்டும் பபிதா. இந்தக் கிருமி எந்த இனத்தையும் மதத்தையும் பார்ப்பதில்லை என நினைக்கிறேன். உங்கள் கருத்தை நீங்கள் திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நமது மதச்சார்பற்ற அழகான தேசத்துக்காக விளையாடுபவர்கள் நாம். நாம் வெற்றி பெறும்போது அனைத்து மக்களும் நம்மைக் கொண்டாடியுள்ளனர். நமது வெற்றியை அவர்கள் வெற்றியாகக் கொண்டுள்ளனர்" என்று ஜுவாலா கட்டா கூறியுள்ளார்.
பபிதாவுக்கு எதிரான இந்தக் கருத்துக்கு ஜுவாலாவைத் திட்டியும் நிறையக் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.