ஜவகல் ஸ்ரீநாத்துக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை: பொல்லாக் கருத்து

ஜவகல் ஸ்ரீநாத்துக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை: பொல்லாக் கருத்து
Updated on
1 min read

முன்னாள் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் தலைவரும், மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவருமான ஷான் பொல்லாக், இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜவகல் ஸ்ரீநாத்துக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார்.

ஒரு தனியார் தொலைக்காட்சி உரையாடலில் முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் அணி வேகப்பந்து வீச்சாளர் மைக்கல் ஹோல்டிங் மற்றும் இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் ப்ராடோடு சேர்ந்து பங்கேற்ற ஷான் பொல்லாக் பேசியதாவது:

"இந்தியாவின் ஜவகல் ஸ்ரீநாத்துக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என நினைக்கிறேன். நான் ஆடும்போது பாகிஸ்தானுக்கு வாசிம் அக்ரம் மற்றும் வக்கார் யுனிஸ், மேற்கிந்தியத் தீவுகளுக்கு கர்ட்லி ஆம்ப்ரூஸ் மற்றும் கோர்ட்னி வால்ஷ், ஆஸ்திரேலியாவுக்கு மெக்க்ரா மற்றும் ப்ரெட் லீ போன்ற சிறந்த வீரர்களின் இணைகள் இருந்தன. இன்று இங்கிலாந்தில் ஜேம்ஸ் ஆண்டர்சனும், ஸ்டூவர்ட் ப்ராடும் இருப்பதைப் போல.

நான் சர்வதேச அளவில் விளையாடுவதற்கு முன், மால்கம் மார்ஷல் முற்றிலும் வேறொரு தளத்தில் அற்புதமாக ஆடிக்கொண்டிருந்தார். எனது கிரிக்கெட் வாழ்க்கையின் தொடக்கத்திலேயே அவரை சந்தித்தது எனது அதிர்ஷ்டம். ஏனென்றால் வேகப்பந்து வீச்சைப் பற்றிய எனது சிந்தனையையே அவர் மாற்றினார்.

ஆனால் நான் விளையாடியதை நிறுத்தியதிலிருந்து டேல் ஸ்டைன் தான் என்னை ஆச்சரியப்படுத்தியுள்ளார். அவர் மீது அதிக மரியாதை உள்ளது. அதிக வேகத்தில் பந்தை ரிவர்ஸ் செய்யும் திறன் அவருக்கு உள்ளது. தட்டையான களத்திலும் அவரது பாணி, அவர் காட்டிய வித்தியாசங்கள் சிறப்பாக இருந்தன. அவர் விசேஷமானவர். அவரது சாதனைகள் அதை உறுதிப்படுத்தும்" என்று கூறினார்.

முன்னதாக ஹோல்டிங்கும், டேல் ஸ்டைனைப் பாராட்டிப் பேசியுள்ளார். அவரது காலகட்டத்தின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் என ஸ்டைனைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in