

இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அஃப்ரிடிக்கும் இடையேயான சண்டை தற்போது இன்னமும் வளர்ந்துள்ளது.
அப்ரிடியின் சுயசரிதையில் காம்பீர் பற்றி அவர் குறிப்பிட்டுள்ள விஷயங்களுக்கு காம்பீர் காரசாரமாகப் பதிலளித்துள்ளார். ஏப்ரல் 2019ல் வெளிவந்த இந்த சுயசரிதையில் கவுதம் காம்பீரைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார் அப்ரிடி. "கவுதம் காம்பீருக்கு அவர் நடந்து கொள்ளும் விதத்தில் பிரச்சினை இருக்கிறது. அவருக்கென ஒரு ஆளுமை கிடையாது. கிரிக்கெட் ஆட்டத்தின் போக்கில் பார்த்தால் அவர் ஒரு ஆளே கிடையாது. உயர்ந்த சாதனைகள் இல்லை. நிறையக் கர்வம் உள்ளது. ஏதோ டான் ப்ராட்மேனும், ஜேம்ஸ் பாண்டும் சேர்ந்த கலவை போல நடந்து கொள்வார். " என்று அஃப்ரிடி எழுதியுள்ளார்.
இதற்குப் பதிலளித்துள்ள காம்பீர், "தனது வயதையே நினைவில் வைத்துக் கொள்ள முடியாத ஒருவரால் என் சாதனைகளை எப்படி நினைவில் வைத்திருக்க முடியும். சரி. ஷாஹித் அஃப்ரிடி. ஒரே ஒரு விஷயத்தை ஞாபகப்படுத்துகிறேன். 2007 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி. இந்தியாவும் பாகிஸ்தானும் ஆடின. காம்பீர் 54 பந்துகளில் 75 ரன்கள். அஃப்ரிடி 1 பந்தில் 0 ரன். அதை விட முக்கியமான விஷயம் நாங்கள் கோப்பையை வென்றோம். ஆம், எனக்குக் கர்வம் உண்டு. பொய்யர்கள், துரோகிகள், சந்தர்ப்பவாதிகள் எதிரில் அப்படித்தான் இருப்பேன்" என்று கூறியுள்ளார்.
களத்திலேயே காம்பீரும், அப்ஃரிடியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக, அஃப்ரிடியின் சுயசரிதை விற்பனைக்கு வருவதற்கு முன் அதில் அவர் காம்பீரைப் பற்றிச் சொல்லியிருந்த விஷயங்கள் வெளியாகி அதுவும் சர்ச்சையானது.